இருக்குவேளூரில் வேளாளர்களில் தலைமை வாய்ந்த கணம்புல்லர் என்பவர் வாழ்ந்து வந்தார். செல்வம் கரைந்து ஏழையான பின் சிதம்பரம் சென்று புல்லறுத்து விற்றுத் திருத்தொண்டு செய்து வந்தார். ஒருநாள் புல் விற்காமையால் அதனைக் கொண்டே விளக்கெரித்தார். புல் போதாமையால் தலைமயிரினை அரிந்து விளக்கெரித்து முக்தி பெற்றார். முன்புதிரு விளக்கெரிக்கும் முறையாமம் குறையாமல் மென்புல்லும் விளக்கெரிக்கப் போதாமை மெய்யான அன்புபுரி வார்அடுத்த விபுளக்குத்தம் திருமுடியை என்புருக மடுத்தெரித்தார் இருவினையின் தொடக்கெரித்தார் (கணம்புல்ல நாயனார் புராணம் 7) தில்லைத் திருப்புலீசுவரர் கோயிலில் இவர் படிமம் உள்ளது. விண்ணன் ஆறு கண்ணார் உலகில் பகீரதனும் கண்டு கொணர்ந்தான் கங்கையென்பார் விண்ணாறு எளிதோ ஆறுதந்த வேளாண் குரிசில் விண்ணன்அன்றோ தண்ணார் முள்ளி ஓடம்வரச் சம்பந் தனும்செந் தமிழ்பாட மண்ணாள் செல்வம் பெருங்கீர்த்தி வகித்தார் சோழ மண்டலமே | 93 |
உலகில் பகீரதன் கங்கையைக் கொண்டு வந்ததுபோல் விண்ணன் என்ற சோழர் படைத்தலைவன் பழசை என்னும் பழயனூர்ச் சிவாலயப் பூசையின் பொருட்டுத் தன் பெயரால் ஓர் ஆறு வெட்டினான். அது விண்ணாறு எனப்பட்டது. அது இப்போது வெண்ணாறு என வழங்கப்பெறுகிறது. திருஞானசம்பந்தர் கொள்ளம்புதூர் சென்று பாடும்போது படகோட்டி இல்லாமல் ஓடம் சென்றது. அது இவ் ஆறு என்பர். சோழ மண்டலத்தில் பாண்டிய குலாசனி வளநாட்டு ஏரியூர் நாட்டில் இருந்த மும்முடிச்சோழநல்லூர் என்ற ஊர் அங்கிருந்த பெரிய ஏரியால் ‘விண்ணன் ஏரி’ என்றே அழைக்கப்பட்டது (தெ.இ.க. II 94, 95). முழங்கு கடல்தானை மூரிக் கடற்படை முறித்தார்மன்னர் வழங்கும் இடமெல்லாம் தன்புகழே போக்கிய வைவேல்விண்ணன் செழுந்தண்பூம் பழசையுள் சிறந்து நாளும்செய எழுந்தசே திகத்துளே இருந்தஅண்ணல் ஆரடி விழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளும்தொழத் தொடர்ந்து நின்ற வெவ்வினை துறந்துபோ மால்அரோ என்பது பழம்பாடல் (யாப்பருங்கல விருத்தி 67). சேதிகம் - சமணப் பள்ளி. கூர்ந்த வறுமையிடைக் கோள்அரவம் ஈன்றமணி சார்ந்த புலவன் தனக்களித்தான் - வார்ந்ததரு மேலைவிண்ணின் மண்ணில் விளங்கும் புகழ்படைத்த சாலைவிண்ண னுக்குஇணையார் தாம் என்ற இப் பாடலில் விண்ணன் புலவர்க்கு நாகமணி அளித்தமை கூறப்படுகிறது. |