பக்கம் எண் :

68சோழமண்டல சதகம்

நதிநோக்கி வாழும் நவபுதுச் சேரிநன் னாட்டில்என்றன்
விதிநோக்கிக் காளைபின் மேவுகின் றேன்எனும் வேதியரே

(நாலாயிரக்கோவை - சுரம்போக்குத் துறை)

புதுவைச் சடையன் பொருந்துசங் கரனுக்கு
உதவித் தொழில்புரி ஒட்டக் கூத்தனைக்
கவிக்களிறு உகைக்கும் கவிராட் சதன்எனப்
புவிக்குயர் கவுடப் புலவனும் ஆக்கி
வேறுமங் கலநாள் வியந்துகாங் கயன்மேல்
கூறுநா லாயிரக் கோவைகொண் டுயர்ந்தோன்

என்பது பழம் பாடல்.

பெருமங்கலமுடையான்

களத்தில் பொலிகா டவன்பணியக்
          கண்டான் கொண்டான் களவகுப்புத்
தளத்தில் பெரிய வடஅரசர்
          தாமேல் இடும்பொய்த் தலைகொண்டான்
உளத்தில் பரவு காளியருள்
          உடையான் சோழன் உறுப்புடையான்
வளத்தில் பெரும்மங் கலமுடையான்
          வளம்சேர் சோழ மண்டலமே
97

காடவர்கோன் என்னும் பல்லவன் சோழர்க்குப் பணியாமல் இருந்தான். பெருமங்கலமுடையான் என்னும் சோழர் படைத்தலைவன் வடநாட்டின் மேல் படையெடுத்து வடவரசர்களைக் கொன்று அவர்கள் தலைபோல் பொய்த்தலைகளைக் கொணர்ந்தான். பெருமங்கலமுடையான் வீரத்தைப் புலவர்கள் புகழ்ந்து களவகுப்புப் பாடினர். காடவன் பயந்து சோழனைப் பணிந்து வாழ்ந்தான். பெருமங்கலமுடையான் காளி அருள்மிக்கவன்.

கோட்டை வாசலில் கூளிதன் பலத்தால்
வாட்டமில் வளவனை மலைவறப் பொருதிடும்
வடவர சரைப்பெரு மங்கலம் உடையீர்
படைபொருது அவசயப் படுத்தும்என்று ஏவலும்
காத்தெழு பத்திர காளியால் அந்தப்
பேய்த்தலை கொண்டு பெரும்படை சயித்தோம்

என்பது பழம்பாடல். பெருமங்கலமுடையான் என்ற பெயர் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் உத்தராபதீசுவரர் கோயில் கல்வெட்டில் குறிக்கப்படுகிறது. ஆண்டறிக்கை [66, 72 ஆண்டு 1913]