பக்கம் எண் :

சோழமண்டல சதகம்69

வீரசோழியம்

ஆர வார இலக்கண நூல்
          ஐந்தும் முழங்க அதிற்குஎதிர்நூல்
பாரின் மீது தமிழ்க்கூத்தன்
          பாடி அமைத்தான் பயன்ஓர்ந்தே
வீர சோழன் உடன்இருந்து
          வியந்தே வீர சோழியநூல்
வாரம் ஏற அரங்கேற்றி
          வைத்தார் சோழ மண்டலமே
98

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கண நூல் வழங்கும் போது அதற்கு எதிர்நூல் ஒன்றை ஒட்டக்கூத்தர் பாடினார். வீரசோழன் என்னும் சிறப்புப் பெயருடைய வீர ராசேந்திரன் [1063 - 1070] காலத்தில் பொன்பற்றிப் புத்தமித்திரன் என்பவர் வீரசோழியம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றினார்.

பொன்பற்றி சோழநாட்டில் அறந்தாங்கி வட்டத்தில் பழைய மிழலைக் கூற்றத்தில் உள்ளது. காரைக்காலுக்குப் பக்கத்திலும் பொன்பற்றி என்னும் ஊர் ஒன்று உள்ளது.

ஈண்டுநூல் கண்டான் எழில்மிழலைக் கூற்றத்துப்
பூண்டபுகழ்ப் பொன்பற்றி காவலனே - மூண்டவரை
வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்தன்
சொல்லின் படியே தொகுத்து

என்பது பழம்பாடல். பெருந்தேவனார் வீரசோழியத்திற்கு உரையெழுதியுள்ளார்.

தடமார் தருபொழில் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த
படிவீர சோழியக் காரிகை தூற்றெண் பஃதோடொன்றின்
திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக்
கடனாக வேமொழிந் தான்தமிழ்க் காதலில் கற்பவர்க்கே

என்பது பழம்பாடல்.

வீரசோழியத்தைப் பற்றிய அரிய செய்திகளுக்குத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சு.இராசாராம் அவர்கள் எழுதிய ‘வீரசோழிய இலக்கணக் கோட்பாடு’ என்னும் நூலைக் காண்க.