இந்திரன் எந்த நாடு தளர்ந்தாலும் இதுவே தாங்கும் இன்னம்இன்னம் புந்தி நாடிப் பொன்னாடு புரந்தார் குடியும் புறப்பட்டார் சொந்த நாடாய் வந்திருந்து சூரன் ஒடுங்கச் சுகமாகி வந்து வானும் குடியேற வைத்தார் சோழ மண்டலமே | 99 |
உலகில் எந்த நாடு தளர்ந்தாலும் சோழநாடே அதைத் தாங்கும் இயல்புடையது. ஒருமுறை காசிபரது மகன் சூரபன்மன் தேவர்களை விரட்டித் தேவலோகத்தைக் கைப்பற்றிக் கொண்டான். தேவேந்திரன் சீகாழிக்கு வந்து நந்தவனம் ஏற்படுத்திச் சிவபெருமானை வணங்கி வந்தான். அந்நந்தவனம் நீரின்றிக் காய விநாயகன் அருளால் காவிரி பெருகியது (பாடல் எண் 4 காண்க). சோழநாட்டில் இந்திரனுக்குப் பல கோயில்கள் இருந்தன. புகாரில் இந்திரவிழா 28 நாட்கள் நடைபெற்றது. கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தில் இவ் வரலாறு கூறப்படுகிறது. நெம்மேலித் தச்சன் நிச்சம் உறவே நெல்பயிராய் நீளும் தமிழ்க்கு நெம்மேலித் தச்சன் பொலிஆ யிரக்கலநெல் தந்தான் உலகிற்கு ஆதரவாய் மெச்சும் அவனது ஆண்மையினால் வென்றே கொடியின் விருதுகட்டி வைச்ச கொடையின் திறம்எளிதோ வளம்சேர் சோழ மண்டலமே | 100 |
கம்பர் சோழனுடன் கருத்து மாறுபாடு கொண்டு வேற்று நாட்டுக்குப் புறப்படும்போது நெம்மேலித் தச்சனைப் பாடினார். நெம்மேலித் தச்சன் கம்பருக்கு ஆயிரம் கலம் நெல் அளித்தான். கம்பர் அந்நெல்லைத் தன் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு வெளிநாடு சென்றார். ஆட்டூர் நெம்மேலி என்னும் பெயரில் இவ்வூர் மங்கநல்லூர் புகைவண்டி நிலையம் அருகில் உள்ளது. இவ்வூர் நென்மலி என்றும் வழங்கப்பெறும் |