பக்கம் எண் :

72சோழமண்டல சதகம்

நாளார் பெரும்புகழ் நாட்டியத் தான்குடி நம்பரம
வேளார் மகளை அரும்புடை யான்மகன் வெண்ணைகள்வற்கு
ஆளாம் பனசையில் ஆதி வராகன்கொண்டு அம்புவியில்
நீளாத வீடு குடிபுகுந் தான்அவள் மேன்மைகொண்டே

என்பது பழம்பாடல்.

கன்று + ஆப்பு + ஊர் கன்று கட்டிய ஆப்பினை இறைவனாக எண்ணி வழிபட்ட ஊர். மொக்கணி என்னும் குதிரைக் கொள்ளுப் பையைச் சிவலிங்கமாக வழிபட்ட மொக்கணீச்சுரம் கொங்கு நாட்டில் உள்ளது [திருவாசகம் - கீர்த்தித் திரு அகவல் 33 - 34].

அம்பலப்புளி

தெளிவந்து அயன்மால் அறியாத
          தில்லைப் பதிஅம் பலவாணர்
புளியம் பொந்தின் இடம்வாழும்
          புதுமை காட்டிப் பொருள்காட்டி
எளிதில் புளியங் குடியானென்று
          இசைக்கும் பெருமை ஏருழவர்
வளரும் குடியில் பெருவாழ்வு
          வளம்சேர் சோழ மண்டலமே
102

அன்னிய மதத்தார் ஆட்சிக் கலகக் காலத்தில் தில்லை நடராசப் பெருமானை எடுத்துக் கொண்டுபோய் ஓரூரில் பெரிதாய் இருந்த ஒரு புளியமரப் பொந்தில் வைத்து மூடிவிட்டனர்.

கலகம் ஓய்ந்து பெருமானை எடுத்துவர முயற்சிக்கையில் வைத்த இடம் தெரியாது தவித்தனர். அங்கு ஏர் உழுத உழவர் உழுதபின் காளைகளை அவிழ்த்து விடுபவர்கள் அம்பலப் புளியில் விடுவதெனப் பேசினர். அம்பலத்தானின் இடமறிந்து நடராசப் பெருமானைத் தில்லைக்குக் கொண்டு சென்றனர்.

நடராசப் பெருமான் திருவாரூரில் சிலகாலம் இருந்தார். இன்றும் சிதம்பரச் செப்பேடுகள் திருவாரூர்க் கோயிலில் உள்ளன. குடிமியா மலை வழியாக மதுரை சென்ற நடராசர் பல ஆண்டுகள் கழித்து செஞ்சி மராட்டியர் காலத்தில் மீட்கப்பட்டுச் சிதம்பரம் வந்ததைச் செப்பேடுகள் கூறுகின்றன.