பக்கம் எண் :

184திருமா லரனே திசைமுகன் கரிமுகன்
பொருவேன் முருகன் பரிதி வடுக
னெழுவர் மங்கைய ரிந்திரர் சாத்த
னிதியவ 1னீலி 2பதினொரு மூவர்
திருமக ணாமக டிகழ்மதி யென்ப
மருவிய காப்பினுள் வருங்கட வுளரே.
(13)

 

 
185 காப்பின்முத லெடுக்குங் கடவு டானே
பூக்கமழ் துழாய்முடி புனைந்தோ னாகும்.
(14)
 

 

 
186 அவன்றான்,
காவற் கிழவ னாக லானும்
பூவின் கிழத்தியைப் புணர்த லானு
முடியுங் கடகமு மொய்பூந் தாருங்
குழையு நூலுங் குருமணிப் பூணு
மணியுஞ் செம்ம லாக லானு
முன்னுற மொழிதற் குரியனென்ப.
(15)

 

 
187 விரிசடைக் கடவுளும் வேய்த்தோ ளெழுவரு
மருளொடு காக்கவென் றறையுங் காலைக்
கொலையுங் கொடுமையுங் கூறா ராகிப்
பெயருஞ் சின்னமும் பிறவுந் தோன்றக்
கங்கை திங்கள் கடுக்கை மாலை
மங்கல மழுவொடு மலைமக ளென்றிவை
விளங்கக் கூறல் 3விளம்பிய மரபே.
(16)

[பி-ம்.] 1னீலி நிலமக ணீளை. 2 பதினொருமூவர் - பன்னிருவர் ஆதித்தர், பதினொருவர் உருத்திரர், எண்மர் வசுக்கள், இருவர் மருத்துவர் ஆகிய முப்பத்துமூவர். “நால்வே றியற்கைப் பதினொரு மூவரொடு” என்றார் திருமுருகாற்றுப்படையினும், “பதினொரு மூவரும் பங்கயத் தோனும் பகவதியு, நிதிமுத லோனும் பரிதியுஞ் சாத்தனும்” என்பதனால் நவநீதப்பாட்டியலாரும் பன்னிருவர் ஆதித்தரின் வேறாய்ப் பரிதியெனக் கூறுதல் காண்க.

[பி-ம்.] 3 வழங்கிய; விளங்கிய.