439. என்னையிங் கனுப்பிய பிதாஒரு வனையே யிழுக்கவே யிலையெனி லருளாய் என்னிடமே மெவனும் வருவதில் நிசமே யெழுப்புவேன் கடைத்தின மவனை முன்னொரு தினமே தரிசனச் சுருளில் மொழிந்திருப் பதையறிந் துணர்மின் முன்னவ னவரால் எவருமே முழுதும் போதனை யடைந்தே யிருப்பார். 440. எவனுமே யொருவன் என்பிதா விடமே கேட்டுமே கற்றவ னெனிலோ அவன்வரு கிறானே யென்னிட மருளால் ஐய்யமெத் தடையுமே யிலதாய் எவனுமே யவரைக் கண்டதே யிலையே மாமிச மானதி னாலே இவரொரு வரேதான் கண்டவ ரவரை வந்ததா லவரிட மிருந்தே. 441. சத்தியத் தையே சொல்கிறே னுமக்கே தரணியி லெனைவிசு வசிப்போன் நித்யசீ வனையே நிச்சய மடைவான் நித்யகா லமுமுய் குவனே நித்யசீ வனையே நிச்சய மளிக்கும் உயிர்அப் பமேயான் நிசமே சத்திய முமது பிதாவே மரித்தார் மன்னா வனத்திலே புசித்தும். 442. ஞானமென் னிதுவா மப்பமே புசிப்போன் மாளா திருக்கவென் னாளும் வானநின் றிறங்கி யிங்குவந் ததவாய் வானஅப் பமுமே யிதுதான் வானநின் றிறங்கி யிங்குவந் ததுவாஞ் சீவஅப் பமேயான் நிசமே போனமென் னிதுவா மப்பமே புசிப்போன் என்றுமே பொன்றுவ திலையே, 443. நான்தரு கிறதா மப்பமே தெனிலோ உலகிதி னுயிர்க்கென நலமாய் நானிது வுலகில் வந்துநல் குவதாம் நலமெனின் மாம்சமென் றனரே என்சொனா னிவனே எப்படித் தருவான் தனதுட மாமிசம் புசிக்க என்றுபே சியுமே யூதரா மிவரே தமக்குள் தர்க்கமா டினரே. 444. மனுமக னுதிரம் மாமிச மிவையே புசித்துநீர் பருகா திருந்தால் அணுவெனு முமக்குள் உயரிய உயிருமே யிலையறை கிறேனிது நிசமே எனதுமா மிசமே புசித்தென துதிரம் பருகுவோ னெவனொரு வனுக்கும் அனந்தநித் தியசீ வனுமுள தவனை யெழுப்புவே னதேகடைத் தினத்தில். |