470. அறிந்தன ரீதைச் சீடர் இறைவனுக் கறிவித் தாரே அறிகுவீ ரோஆண் டாய்நீர் பரிசயர் இடறிப் போனார் தெரிகுவீ ரென்தன் தந்தை தெரிந்துந டாநாற் றைத்தான் வெறுப்பொடு மகற்று வாரே பிடுங்கியே வேரோ டேதான். 471. திருடனின் வழியே காட்டும் குருடரா யிருக்கின் றாரே குருடனா மெவனுந் தானே குருடனின் வழியே காட்ட இருவருங் குழிக்குள் ளேயே யிடறியே விழுவா ரென்றார் பெரிதுமே யிவர்தாம் வீழ்ந்தார் பெரிதுமே கேடுற் றாரே. 472. அங்கே சனத்தை நீங்கி யருட்பர னகஞ்சேர்ந் தாரே அங்கவ ருவமை யையும் அரும்பொரு ளறிந்து கொள்ள சங்கமாய்ச் சிசியர் வந்தார் சாற்றினார் சிமியோன் மூலம் எங்களுக் குவமை யீதை விளக்கமே செயு மென்றாரே. 473. உணரா திருக்கின் றீரோ இதனுட அர்த்த மேதான் உணவென வெளிநின் றேதும் மனுடனுள் ளேசென் றாலோ குணமுள ததுதீட் டாக்கா குற்றமு முண்டா காதே உணர்ந்துமே கொள்வீ ரீதை உடன்செவி கொண்டே யீதை. 474. ஏதெனு முணவுட் சென்றால் இருதயத் துட்செல் லாதே ஆதரந் தரவேற் பட்ட வயிற்றினுட் சென்றே யஃதே போசன அசுத்தம் யாவும் வெளிப்புறம் போகு மந்த ஆசன வழியா யேதான் அகன்றுமே செல்லும் என்றார். 475. மனுடனுக் குள்ளே நின்றே வருவவாய் வழியா யேதான் மனுடனைத் தீட்டே செய்தே மதிப்பைக் கெடுத்தே போடும் மனுடனின் உள்ளம் நின்றே வகையொடு வெளியே வந்தே மனுடரைக் கெடுக்கும் வல்ல மருவுறும் நினைவெல் லாமே. 476. விபசரம் வேசை மார்க்கம் வெங்கொலை பாத கங்கள் அபசா ரங்கள் தானும் ஆர்பொரு ளாசை யோடும் கபடுதுர்க் கீர்த்தி யங்கள் காமவி காரந் தானே அபத்தமே வன்கண் ணாமே தூடணா சுத்தந் தானும். |