483. அவருட மவுனம் பார்த்த அதிவிசு வாசி யோதான் அவரை விடாதே யின்னும் அலட்டியே நின்றா ளங்கே அவரவ் வீட்டை விட்டே யகன்றுந டந்தே செல்ல அவரை விடாத மாதோ அலட்டியே பின்சென் றாளே. 484. ஆண்டிதே செய்கை யைத்தான் அறிந்தவர் சிசியர் தாமும் ஆண்டவ ரண்டை சேர்ந்தே அவட்கெனப் பரிந்தே பேசி ஈண்டிவள் பின்னால் வந்தே யிதுவித மிறைகின் றாளே ஆண்டவா அன்பே கூர்ந்தே யனுப்புவீரிவளை யென்றார். 485. 'ஏனலட் டுகிறீ ரிப்போ எனையுமே நீவி ருந்தான் நானிவ ணனுப்பப் பட்டேன் நலமொடு புவியே வந்தேன் காணுமிவ் மேன்மை ஆடாம் இசரவேற் குடும்பத் தார்க்கே வீணிதே பிறருக் கன்றே எனைவிடு வீ'ரென் றாரே. 486. ஈதையே கேட்ட மாதோ யிளைத்துமே போனா ளில்லை பாதையி லோடி வந்தாள் பணிந்துமே வேண்டல் செய்தாள் தாதையே யிரங்கும் என்மேல் தயவுகொண் டேயென் மேலே ஏதுநீர்சொன் னாலு மும்மை விடுவதே யில்லை யென்றாள். 487. நலமுறு நாதன் தாமே நடுக்குறு வார்த்தை சொன்னார் நலமோ சேய்க ளப்பம் இடுதலே நாய்க்குட் டிக்கே நலமே நீரிப் போதே நவின்றதாம் வாக்கே தானே குலமிழிந் தேனென் றாலும் குற்றமோ அதுஎன் மேலே. 488. நலம்நிறை நாதா நீர்தாம் இறைவனே நாய்க்குட் டிக்கும் குலமகர் மேசை சூழ்ந்தே குழுமியே புசிக்கும் வேளை நலம்நிறை மேசை நின்றே நழுவிவீழ் துணிக்கை தன்னை குலமிழி நாயே யீன்ற குருளைகள் தின்னும் நன்றாய், 489. இப்பெரும் வசனங் கேட்ட இறைவனு மன்பே பொங்கி அப்பெரு மனதுள் மாதை யருள்மிக நோக்கிச் சொன்னார் எப்படி யுனின்விசு வாசம் எழில்பெரி தாச்சோ மாதே அப்படி யுன்தன் வாஞ்சை சணமிதில் ஆக ஆக. |