பக்கம் எண் :

திரு அவதாரம்143

 

490.       உன்மகள் பேயே நீங்கி உயர்சுகம் பெற்றா ளிப்போ
              உன்னகஞ் செல்வா யிப்போ உன்மனக் கவலை நீங்கி
              தன்னகம் வந்தே சேர்ந்தாள் தனதுபெண் பேயே நீங்கி
              கண்ணயர்ந் தேகட் டின்மேல் படுத்திருக் கக்கண் டாளே.

491.       காருணி யன்கடாட் சமனை கர்த்தரின் வலமை யேதான்
              பேருள முடையோர் தம்மின் பெருமையும் மகத்வந் தானும்
              ஊருளோ ரெவர்க்குங் கூறி உணர்த்தினாள் யேசு யென்றே
              ஊருளோர் பலரும் மாதால் உகந்துமே சிசியி ரானார்.

64. கொன்னைவாயன் சுகம் பெறல்
மத். 15 : 29 - 31; மாற். 7 : 31 - 37,

492.       காரணன் நன்மை யீதே கனிவொடே செய்து தீர்ந்தே
              தீருசீ தோனே தாண்டி பெனிகியென் தேசம் நீங்கி
              பேர்பதி பத்துக் கொண்டே தெகபொலி பேரே கொண்ட
              சீர்திசை யெல்லை மார்க்கஞ் சிறுகடற் பக்கம் வந்தார்.

493.       அங்கொரு குளறும் வாயன் அம்மகன் செவிட னேதான்
              பங்கமுற் றோனன் னோனைப் பண்பொடு கொணர்ந்தா ரங்கே
              துங்கனங் கரத்தி னாலே தொட்டவ னிடறே நீக்க
              அங்கவ ரருகே வந்தே ஆவலாய் வருந்திக் கேட்டார்.

494.       சனத்திரள் நடுவினின் றேதனி மையாய்க் கூட்டிச் சென்றே
              இனமொடே விரல்க ளாலே இருசெவி தீண்டிப் பின்னால்
              வினயமா யுமிழ்ந்தே தம்மின் விரல்களால் நாவைத் தொட்டார்
              கனபரி வொடுமண் ணாந்தே ககனமே நோக்கிப் பார்த்தார்.

495.       அப்புறம் உள்ளம் பொங்கி விடுத்தவர் பெருமூச் சொன்றே
              'எப்பத் தா'வென் றாரே இதன்பொருள் திறப்பா யாக
              அப்பொழு தேகா துகள் திறந்தன ஆச்சர் யந்தான்
              செப்பமாய்ப் பேசி னானே சிறியநாக் கின்கட் டற்றே.

496.       எவர்க்குமே விடய மீதே தெரிவியா திருமின் என்றே
              அவர்க்கவர் விதித்தா ரன்றோ அதிமிகக் கண்டிப் பாயே
              எவளவுக் கதிக மாயே இவர்விதித் தாரென் றாலும்
              அவளவுக் கதிகந் தானே அவர்களோ தெரிவித் தாரே.