497. அங்கிதே விடயங் கேட்டோர் ஆவலா யவரைத் தேடி அங்கமே குறைந்தோ ரூமை யறக்குரு டேசப் பாணி பங்கமுற் றோர்பல் பேரைப் பரிவொடுங் கூட்டி வந்தார் இங்கிதை யறிந்தே நாதன் மலைமே லேறிச் சென்றார். 498. வந்தவ ரீவர் பின்னால் மலைமே லேறிச் சென்றார் அந்தமார் பாதத் தண்டை யமைத்தனர் தந்தம் பிணியால் சந்தத மேகுன் றாத தயைநிறை யன்பர் மீட்பர் சிந்தையு வந்தன் னோர்க்கே சுகமுமே தந்தார் சீராய். 499. செம்மையாய்ப் பேசி னாரே செவிடரா மூமை யானோர் நன்மையாய்ப் பார்வை யுற்றார் நயனமற் றோரே தாமும் செம்மையி லூனர் மற்றோர் ககமடைந் தாரே சீராய் செம்மையில் சப்பா ணீயர் நடந்தனர் மாசீ ராயே. 500. அதிமகத் தான ஈவை அற்புத மனைத்தும் பார்த்தோர் அதிசயித் தாரங் குற்றோர் அந்நிய சனங்கள் தாமே துதிக்கதி பாத்ர ரானோர் துங்கனா மிசுரா வேலின் அதிபதி யாந்தெய் வத்தை தோத்திரித் தேயார்த் தாரே. 65. நாலாயிரம் மக்களுக்கு உணவளித்தல். மத். 15 : 32 - 39; மாற். 8 : 1 - 10. 501. அதிசய மீதே பார்த்தே அதியுயர் போதங் கேட்டே பதிவென நாட்கள் மூன்றே பரனொடுந் தாமுந் தங்கி புசிக்கெனக் கொண்டே வந்த பலவுண வெல்லாந் தீர்ந்தே புசிக்கவே யில்லா தேதும் பசிகளைப் புற்றாரீவர். 502. ஒருவனுந் துயரே கொள்ள ஒருபொழு தேனும் பாரார் அருட்பர னவர்க்குண் டான அரும்பசி வாதை கண்டே இருவறு வரையே பார்த்தே யியம்பினர் அன்பே மூண்டே இருக்கிறா ரிவரென் னோடே யிதுவரை நாட்கள் மூன்றே. 503. பசித்தவரீவர்க் காயே பரிதவிக் கின்றேன் ஐயோ புசிப்பதற் கேது மற்றார் அனுப்பினாற் போகும் போதே பசியினாற் சோர்ந்தே போவார் அதிபரி தாபந் தானே பசியொடு மனுப்பா தீரே பசியகற் றும்நன் றென்றார். |