525. ஊருளே போகா தேநீ யுரைக்கவே வேண்டாம் யார்க்கும் ஆருமே யறியா தேநீ அமைதியா யிருப்பாய் என்றே சீர்மிகு அருளே செய்தே திருக்குரு அவனை யேதன் ஊர்க்கவன் தன்வீட் டுக்கே யுடனனுப் பினரந் நேரம். 526. ஆருயிர் புரக்க வந்தோர் அமலனோ சிசிய ரோடே ஊரெலா மேசென் றாரே யுரைத்துமே சுவிசே டத்தை சீருள பிலிப்பி யென்ற செசரியா நகரின் பக்கம் ஓரிடந் தனித்தே யங்கே ஒருதினஞ் செபஞ்செய் தாரே. 69. இயேசு யார்? பேதுருவின் கூற்று. அவன் அருள்வாக்கு பெறல். மத. 16 : 13 - 20; மாற். 8 : 27 - 30; லுக். 9 : 18 - 21. 527. தவத்தினின் றெழுந்தே பின்னர் தம்வழி செல்லும் போதே அவர்தஞ் சிசிய ரைப்பார்த் தருளொடு கேட்டா ரீதே எவர்க்குமே நலமே செய்யும் மனுமகன் என்னைப்பற்றி எவரென வுரைக்கின் றாரோ பொதுசனம் என்றே கேட்டார். 528. சிலபேர் யோவான் என்றும் சிலரெலி யாவே யென்றும் சிலரெரே மீயா பூர்வத் தரிசியா மோர்வர் என்றும் பலவித மாய்ச்சொல் கின்றார் எனப்பகர்ந் தாரே சீடர் நலமொடே நானா ரென்றே நவில்கிறீர் நீவிர் என்றார். 529. அத்தனிவ் வார்த்தை சொல்ல அவரதை முடிக்கும் முன்னால் நித்திய சீவன் உள்ளோர் நிமலராந் திருவான் தந்தை சத்திய திருமைந் தன்தான் சதாநிலை கிறித்தே என்றே உத்தமன் சீமோன் பேதுரு உரைத்தனன் எவர்க்கும் முன்னால் 530. அருட்குரு அவனை நோக்கி அறைந்தனர் யோனா வென்போன் அருமகன் சீமோ னேநீ யருள்மிகு பாக்யன் நீயே ஒருமகன் எவனு மீதை உனக்கறி வித்த தில்லை திருப்பரன் என்தன் தந்தை யுனக்கிதைத் தெரித் தாரே. |