பக்கம் எண் :

திரு அவதாரம்185

 

141.       தெய்வ வாக்குஞ் சற்றெனுஞ் சிதைவுறா திருக்க
              தெய்வ மாம்பிதா தாம்பரி சுத்தமே செய்த
              தெய்வ மாம்பிதா தாஞ்செகத் தனுப்பினர் என்னை
              தெய்வ தூடணஞ் செப்பினே னெனச்சொலல் தகுமோ?

142.       என்பி தாவினற் க்ரியைகளை யான்செயா திருந்தால்
              என்னை நீர்விசு வசிக்கவே யவசிய மிலையே
              என்பி தாவினற் க்ரியைக ளியற்றினே னெனிலோ
              என்னை நம்பிநீர் விசுவசி யாதிருப் பினுமே.

143.       அந்தக் க்ரியைக ளறிந்துமே விசுவசி யுமேநீர்
              இந்த விதம்பிதா என்னொடு மிருக்கிறா ரெனவும்
              அந்த விதமவ ரொடுமிருக் கிறேன்யா னெனவும்
              நன்றே யறிந்துநீர் விசுவசங் கொளும்நலம் எனவே.

144.       இத்தால் மறுதர மிறைவனைப் பிடிக்கவே முயன்றார்
              அத்த னவர்க்கே விலகியே நதியினக் கரைக்கே
              சித்த னருளனே சிறப்போ டூழியம் நடத்தி
              சித்தன் திருமுழுக் களித்தவோர் திருத்தல மடைந்தார்.

145.       நாத னிடமங் கடைந்தனர் மாதிரள் சனமே
              ஏதும் அதிசயம் அருளனோ இயற்றிய திலையே
              நாத னையேகுறித் தருளனே நவின்றதாம் படியே
              ஏதுங் குறைவிலா திருக்கிற தெனவிசைத் தனரே.

146.       திருப்ப ரன்குரு திருவுப தேசமே கேட்டோர்
              அருட்ப ரன்வலர் அருளுநற் குணமே யடைந்தோர்
              அருட்ப ரன்தமின் அரியதோர் வல்லமை கண்டே
              அருட்ப ரனிடந் திடவிசு வசம்வைத் தனரே.

84. எழுபது சீடரை யனுப்பல்.
மத். 11 : 20 - 24; லூக். 10 : 1 - 16.

147.       அவ்வி டத்தமர்ந் தவணுமத் திசையெலாந் திரிந்தே
              திவ்ய வூழியஞ் சுறுசுறுப் பொடுஞ்செய் தனரே
              பவ்வி யம்மொடு மிடைக்கிடை பதிசலேஞ் செலுவார்
              நவ்விச் சுற்றினர் கலிலெயா பெரெயா வெவணும்.