155. எங்கோர் பட்டணம் சேர்ந்தவ ணிறங்கிய பொழுதில் அங்கு ளோருமை யன்பொடேற் றருளுவா ரெனிலோ அங்கு தங்கியே யும்முனாற் படைப்பதை யருந்தும் அங்கு ளோர்பிணி யாளிகளுக் கருளுவீர் சுகமும் 156. சாற்றுஞ் சாட்சியாய் ராச்சிய சுவிசே டமுமே சாற்றுந் தற்பரன் ராச்சியஞ் சமீபமா மெனவே ஏற்றுக் கொள்ளாப் பட்டண முமையினி தொடுமே ஏற்றுக் கொளாஅப் பட்டணத் தெருவெவண் நடந்தே. 157. உமக்கெம் மூழியம் முடிந்ததும் நகர்த்தூ சியையே உமக்கே விரோதமா யுதறியே துடைக்கிறோம் எனினும் உமக்குக் கிட்டியே சமீபமே யுனதராச் சியமே உமக்கு ரைக்கிறோம் எனவுரைத் தகலுமங் கிருந்தே. 158. அந்தோ வரும்நிசம் அவரவர் பலன்பெறுந் தினமே அந்தத் தினத்திலே யந்நக ரடைவதை விடவே அந்தச் சோதநா டடைவதோ அதிமிக லகுவே அந்தோ இவருட அவதியோ அதிகமென் றறியும். 159. ஐய்யோ கோரசின் பட்டண மேயுனக் கையோ ஐய்யோ பெத்செதாப் பட்டண மேயுனக் கையோ மெய்யே யுங்களிற் செய்தமேல் வல்லசெய் கைகளே செய்யப் பட்டிருந் தாற்சிதோன் தீருபட் டணங்கள். 160. அடைவ ரேதுயர் அணிந்தவர் ரட்டுடுப் புகளே அடைவாய்ச் சாம்பலி லமர்ந்தவர் மாறியே யிருப்பார் கடைசி நாள்நீர் கண்டடை பங்கினை விடவே அடைவ தோபலன் அதிலகு தீருசீ தனுமே. 161. உன்ன நம்வரை யோங்கினாய் கபர்நகூம் பதியே என்ன உந்தனின் மேன்மை நிலைக்குமோ என்றும் சின்ன பின்னமாய்ப் போவா யுன்சிறப் பொழிந்தே இன்னும் விழுவையே பாதலக் குழியிலென் றனரே |