பக்கம் எண் :

திரு அவதாரம்231

 

415.       இப்பொழுதே தான் யூதரும்மைக் கல்வெறி வதற்கே பார்த்தனரே
              அப்படி யிருப்பதால் மறுதரமு மங்குநீர் செல்வதோ நன்றிலையே
              இப்படி யேயித் தலத்தினிலே தங்குவ தேநலம் என்றனரே
              அப்பனோ அவர்சொலுக் கிணங்காதே சொல்லினை ரவர்க்கருள் வாசகமே.

416.       பகற்பொழு தினுக்கே பன்னிரண்டே மணியுள தெனவே யறிவீரே
              பகல்வே ளையிலே மனுடர்க்கே புவியினிற் பகலோன் ஒளியுளதே
              பகற்பொழு தினிலே நடப்பவனோ பயறியே யிடறான் ஒளியுளதால்
              இசத்தினி லவனிட மொளியிலையே இரவினில் நடந்தா லிடறுவனே.

417.       அத்தனே யிவ்வுரை சொல்லியபின் அறைந்தனர் சீடருக் கிவ்வசனம்
              நித்திரை யடைந்திருக் கின்றனன்நம் நேயனாம் பெத்தனி லாசருவே
              இத்தரு ணமவனை யெழுப்புதற்கே யேகுகின் றேனவண் என்றனரே
              நித்திரை யடைந்தாற் குணமாவான் நிச்சயம் என்றனர் சீடருமே

418.       நித்திரை யெனச்சொல குருபரனோ குறித்தனர் மரணமாம் நித்திரையை
              நித்திரை யெனச்சொல அவர்சிசியர் சுகந்தரும் நித்திரை யெனநினைந்தார்
              அத்தினிப் பொழுதோ வெளிப்படையாய் அறிவுறுத் தவேதஞ் சிசியருக்கே
              சித்தமு வந்துமே லாசருவே மரித்தனன் எனவே செப்பினரே.

419.       யானடை கிறேன்மகிழ் உம்நிமித்தம் அப்பொழு தங்கியா னில்லையதால்
              ஏனெனில் நீர்விசு வசமுள்ளோ ராகவே காரண மானதினால்
              ஆனதா லெனதுட மாமகிழ்வே யாயின தேநிசம் உம்நிமித்தம்
              நானவ னிடமே செல்லுகிறேன் என்னொடு செல்வீ ரென்றனரே.

420.       சீடராம் பன்னிரு வர்க்குளோர்வன் தாமசென் திதிமுவாஞ் சந்தேகி
              சீடரா மற்றவ ரனைவரையும் நோக்கியே செப்பினன் பத்தனேதான்
              கூடவே செல்லுவோ மவரொடுமே கூடவே மரிக்கவே யவரொடுமே
              கூடவே சென்றன ரனைவருமே சற்குரு யேசுவைப் பின்தொடர்ந்தார்.

421.       இருசகோ தரிகளும் வசித்திருந்த பெத்தனியெ னுமச் சிறுபதியே
              எருசலேம் பதியினுக் கதிசமீபம் இருமயிற் றூரமே யந்நகர்க்கே
              இருசகோ தரிக்குமா றுதல்சொலவே யிவண்வந் திருந்தனர் பலயூதர்
              அருட்குரு பரனவண் சேரவுமே மரித்துமே நான்நோ ளெனவறிந்தார்.