பக்கம் எண் :

262

 


79.        தனித்தே நின்றனை கனிமரமே தனித்தே வானல மனுபவித்தாய்
              கனியே தேடுவோ ரெவரெவர்க்கும் கடுகள வீகை யின்றொழிந்தாய்
              கனியே தேடியுன் னிடம்வருவோன் கனியெது முனதிட மருந்துவதில்
              கனியுன திடமினி யிருப்பதில்லை கடினமாம் வார்த்தை வுரைத்தாரே.

80.        கடினமாம் வார்த்தை கூறவுமே கனியிலா மரமே வாடியதே
              கடிதினில் வாடிய மரத்தினையே கண்டராஞ் சிசியர் வியப்படைந்தரே
              விடிந்தே வருமக் காலையிலே விமலனோ நீங்கினா ரங்கிருந்தே
              கடிதினிற் சேர்ந்தா ரம்பதியே புகுந்தன ராலயங் காலையிலே.

135. ஆலய சுத்தி போதனை
மத். 24 : 12; 13; மாற். 11 : 15 -19; லூக். 19 : 45, 46.

81.        அப்பொழு தவரவண் பொருள் சுமந்தே யவ்வழி வருபவ ரைக்கடிந்தார்
              விற்பவர் கொள்பவ ரனைவரையும் வெளியே துரத்திபு றாக்களையே
              விற்பவ ராசனங் காசுமாறும் பலகை விரைவாய்க் கவிழ்த்தனரே
              எப்படி யாம்பொருள் வர்த்தகமோ இவ்விட மிருந்தெடு மெனவிலக்கி.

82.        எம்முட வீடிதோ செபவீடாம் எனவரைந் துளதை யறிந்திலீரோ
              அம்மக மாமிதைத் திருடருட அருளிவாக் குகையே யாக்கினீரே
              எம்முட வீடிதே திருத்தலத்தை யிதன்பின் னசுசிசெய் யாதிருமின்
              எம்முட வீட்டை வைத்திருப்பீர் எப்பொழு துமேமா தூய்மையாய்.

83.        தீமையே யிலாதோர் மிகத்திடமாய்த் தீயரா னவணக் கடிந்தனரே
              தூய்மையே நிறைந்தோர் இருதயமே தூய்மை யாமா லயமெமக்கே
              வாய்மை யினுருவர் வளமிகவே வறியவ ரானவர்க் கருள்சொறிந்தார்
              தீமையே யகன்றுமா நலம்பெருக திருவுப தேசமே பகர்ந்தனரே.

84.        கோபம டைந்தனர் வேதியரே குறைவறச் சுருதியே கற்றவரே
              சாபமே யடைந்தே தாமழியச் சதிமிகு யோசனை செய்தனரே
              பாபமிற் சற்குரு யேசுவையே பரன்திரு மைந்தனைக் கொன்றழிக்க
              கோபமே கொண்டும மர்ந்தனரே குழுமிய சனங்களுக் கஞ்சியதால்