18. வந்தனர் கன்னியர் மரியணங்கே வந்தனர் நசரேத் பதியினின்றே நிந்தையே நீங்கின முதியவட்கே நேர்ந்ததோர் விஷயமே யறிவதற்காய் முன்தூ தனினனை யெலிசபெதும் முன்னவ னனையர் மரியணங்கும் தந்தனர் தோத்திரங் கடவுளுக்கே தங்கினர் மரியனை திரிதிங்கள். 19. பத்தெனு மாதமும் பிறந்ததுவே வந்ததே பகர்ந்ததாந் தினமதுவும் உத்தமன் பாலகன் பிறந்தனனே உன்னதர் தூதனி னுரையதுபோல் கர்த்தரின் கிருபையே விளங்கவுமே கண்டவர் கேட்டவ ரவளுடைய நித்திய பந்துக ளயலகத்தார் யாவரும் மகிழ்ந்தன ரவளொடுமே. 20. விருத்தசே தனஞ்செயுந் தினமதிலே விரும்பிவந் தபந்துக ளயலகத்தார் விருத்தனாஞ் சகரியா பெயரதையே மிடும்படி விரும்பினர் சிறுவனுக்கே திருத்தின ளெலிசபெத் திதுபெயரை "திருப்பெய ரருள" னென் றுரைத்தனளே "இருப்பரோ வுனதுட இனத்தவருள் இருபெயருடை யவர்எவரு" மென்றாரே. 21. கேட்டனர் சைகையாற் றகப்பனையே பாலகன் பெயரையே கிளரவுமே கேட்டன னெழுதுமோர் பலகையையே கேட்டதற் கெழுதின னருளனென காட்டினன் பலகையி லெழுதியதை கண்டதை யதிசய மடைந்தனரே வாட்டமாய்த் திறந்ததே யவனுட வாய்நாவுகட் டவிழ்ந்தவன் துதித்தனனே. 22. அச்சமுண் டானதே யங்கவரைச் சுற்றிலு முள்ளவர் யாவருக்கும் இச்சமாச் சாரமே செலும்யூதா நாடெலாம் பேசினர் அதிசயமாய் இச்சமாச் சாரமே கேட்டுமகிழ்ந் தெப்படிப் பட்டதோர்குழந் தையென்றார் அச்சனாங் கர்த்தரின் வல்லகரம் அச்சிசு வொடுமே யிருந்ததுவே. 23. துதித்தனன் கிருபையை ருசித்தவனே துதித்தனன் கடவுளைச் சகரியாவே துதித்தனன் தனதுவாய் திறந்ததினால் துணிந்ததா லவன்நாத் தளையதுவும் துதித்தனன் குழந்தையே ஜெனித்ததினால் துயரமு மகன்றதோர் மகிழ்வினாலே துதித்தனன் கடவுளைக் களிப்பொடுமே துதிமிகு இனியகீ தமேபாடி. 24. பாத்திர வுயர்கீர்த் தனம்படித்தான் பரிசுத் தாவியின் நிறைவினாலே தோத்திர துதிகீர்த் தனம்படித்தான் துதியுயர் உன்னதம் பரன்தமக்கே நேத்திரத் தரிசனம் வருந்தினமே நிகழுவ சொல்தரி சனகீதம் பார்த்திபன் கிறிஸ்தின் மகிமைகளே பகருமுன் தூதனின் தொழிலுணர்த்தி. |