143. குருட்டுவழி காட்டிகளே யானவரே குறுமதியா ரேயுமக்கே ஐயையோ ஒருவனோதெய் வாலயமே லாணையிட அதனாலே யொன்றுமில்லை யாலயத்தின் பொருளாகும் பொன்னின்மே லாணையிட பொறுப்புளத வற்கெனவே சொல்லுகிறீர் குருடரேயெ தோவிசேடம் பொன்னாமோ குணமொடதைச் சுத்தமேசெய் யாலயமோ. 144. ஒருவன்பலி பீடமேலே யாணையட ஒன்றுமில்லை யேயதனாற் பீடமேலே இருக்குங்கா ணிக்கைமேலே யாணையிட ஆவன்கட னாளியெனக் கூறுகின்றீர் குருடரேகா ணிக்கையோஅ தைக்குணமாய்ச் சுத்தமேசெய் பீடமோதான் முக்யமெதோ குறுமதியா ரேயிதைய றிந்திலீரோ குருக்களென சனங்களையே மாற்றுகின்றீர். 145. சத்தியமே சொல்லுகிறே னுங்களுக்கே நீர்சரியாய்க் கேட்டதனை யேயுணர்வீர். சத்தியஞ்செய் தாலொருவன் பீடமேலே சத்தியஞ்செய் கின்றனன்கா ணிக்கையின்மேல் சத்தியஞ்செய் தாலொருவன் ஆலயமேல் சத்தியஞ்செய் கின்றனனே தெய்வமேலே சத்தியஞ்செய் தாலொருவன் வானமேல சத்தியஞ்செய் கின்றனாச னாதிபர்மேல். 146. கைக்கொள்கிறீர் மாய்மாலக் காரரேநீர் தசம்பாக மேசெய்கிறீர் கண்டிப்பாய் கைக்கிடைக்கு மற்பமாசூல் ஒற்தலாமில் கடுகனைய வெந்தயத்தில் சீரகத்தில் கைக்கொளாதே போகிறீரே விசுவசமும் கனமிகவாம் பக்திநீதி யோடிரக்கம் கைக்கொளவே வேண்டியதி வற்றையுமே கைவிடவே கூடாத வற்றையுமே 147. குருட்டுவழி காட்டிகளே யானவர்நீர் கோணலான மாய்மாலக் காரரேநீர் சிறுபொருளோ அற்பமோஅ தைமதிப்பீர் சீயெனஇ கழ்ச்சிசெய்வீர் மேன்பொருளை சிறுவுயிரே கொசுகைவடி கட்குவீரே சீயெனவெ றுத்ததனைத் தள்ளியேநீர் பெருமிருகம் ஒட்டகையோ நீத்முழுதும் மாபெருமை யாயதைவி ழுங்குவீரே. |