161. பேதுரு மறுதலித்தல். மத். 26 : 69 - 75; மாற். 14 : 66 - 72; லூக். 22 : 55 - 62; யோ. 18 : 17, 18; 25 - 27. 67. தொடர்ந்தனர் ரண்டே பேரே தொடர்ந்தவ ரிருவர்க் குள்ளே திடமுள யோவா னென்போன் சேர்ந்தனன் சங்கத் தண்டை அடர்ந்தவன் நின்றோ ரோடே யதர்மமாம் விசாரிப் பைத்தான் நடந்தவி டத்தே நின்றே நடப்பவை கவனித் தானே 68. பேதுரே சீமோ னப்பா பெருமன துள்ளோன் நீயே ஏதுமே வந்துற் றாலும் பிரிவதில் லென்றே சொன்னாய் ஏதுமே யுண்டோ நியாயம் இறைவனோ டேசெல் லாதே பேதமில் யோவா னைத்தான் பிரிந்துமே தயக்கங் கொண்டாய் 69. வாசலுட் சென்றா யன்றோ தொடரவே யேனோ வாட்டம் பாசமே பூண்டாற் போலே தளர்வதே னுன்தன் பாதம் நேசராம் நாதன் கூட நெருங்கியே சென்றா யானால் வாசலின் மாதுக் கஞ்சி வகைகெடு வாயோ சொல்வாய். 70. காவினில் வீரங் கொண்டாய் கனதிட முங்கொண் டாயே காவல னோடே நின்றாய் வெட்டினாய் கனநே ரத்தில் ஆவலா யுனக்கே தானே அறைந்தவெச் சரிப்பைத் தானே பாவமே மறந்தே போனாய் பயந்தாய் திடமற் றாயே. 71. காவலன் தம்மை விட்டோன் கடுங்குளிர் நீக்கத் தானே சேவக ரோடே சேர்ந்தான் சென்றுநெ ருப்போ ரத்தில் போவதற் குள்ளோர் மாதே புலியனப் பாய்ந்தே வந்தாள் மேவிநெ ருப்போ ரத்தே நடுக்குறச் சொன்னாள் மெய்யே. 72. நீயிவண் வந்துற் றாயோ நீயுமே யவனைச் சேர்ந்தோன் நீயுமக் காலீ லேயன் நேசரி லோர்வன் மெய்யே நீயுமந் நசரேத் தவனாம் ஜேசுவோ டும்னின் நின்றாயே நீயவன் சீடர்க் குள்ளே நிச்சய மோர்வன் என்றாள். 73. வாசலின் மாதிவ் வண்ணம் வகையொடு சொன்னா லப்போ தாசனாம் பேதுரு தானே தயங்கியே தளர்ந்தா னந்தோ மோசமாய் மறுத்தே சொன்னான் முழுவது மறியே னேயான் நீசொலும் யாதொன றேனும் அவனையும் நிசமே என்றே. |