95. இருவருந் தனித்தே தானே யிணைத்தவர் பொய்யே சேர்க்க ஒருவனின் வாக்கோ மற்றோன் வாக்குக் கொவ்வா தாச்சே ஒருவனுக் குப்பின் பல்பொய் உரைத்துமொவ் வினதே யில்லை திருவுரு வானோ ரோதாம் திறந்ததே யிலையே தம்வாய் 96. அக்கிரா சனனே யானோன் அர்ச்சகன் எழுந்தே நின்றே உக்கிர பார்வை யோடே உருக்கியே கேட்டா னன்றோ அக்கரை யேயில் லையோ கேட்டுமே யனைவர் சாட்சி அக்கரை யில்லார் போலே யவரெதுஞ் சொன்னா ரில்லை. 97. கேள்விகேட் டனனோர் கேள்வி கேட்டனன் சங்கம் பேரால் கேள்வியோர் முக்கிய கேள்வி நீகிறிஸ் தோஎன் றானே கேள்விக் கேதுஞ் சொன்னால் கேட்டுநம் புவீரோ அஃதை கேள்வியான் கேட்டா லேதும் நீர்பதி லேதுஞ் சொல்வீர். 98. தெய்வதூ தாட்கள் போற்றும் திருத்துதி கட்கே பாத்ரர் தெய்வகு மாரன் ஆனோர் திருக்கிறிஸ் தாவா யோநீ தெய்வமாம் நித்யர் மேலே திடமொடே யிட்டே னாணை மெய்யுள வாக்கே யாகும் விடைதரு வாயே யென்றான். 99. இப்படி யிட்டே யாணை கேட்கவி னாவே யீதை அப்படிச் சொன்னீ ரன்றோ அதுசரி யவரே யானே இப்பொழு தேசொல் கின்றேன் இணக்கமாய் கேண்மின் நீவிர் இப்புறம் நிகழும் காரியம் எடுத்தியான் சொல்வே னிப்போ. 100. மனுமகன் சர்வ வல்லோர் வலதுபா கம்வீற் றாள்வார் மனுமகன் வருவா ரன்றோ வானமே கங்கள் மேலே மனுமகன் மகிமை யப்போ வளமிகக் காண்பீ ரேநீர் மனுமக னிவ்வாக் கோடே மௌனமே சாதித் தாரே. 101. கேட்டிதை யாச்சார் யன்தான் கிழித்தனன் தன்வஸ் திரங்கள் கேட்டோ மின்னோன் வாக்கே தெய்வதூ ஷணமே கேட்டீர் கேட்கவேண் டியதோ இன்னும் கேட்டசாட் சிகள்போ தாதோ வெட்கமல் லோநாம் யாதும் விமோசனஞ் செய்யா விட்டால். |