102. இவன்தூ டணஞ்சொன் னானே யிப்பொழு தேகேட் டீரே இவனுரைக் கெதுவுஞ் செய்ய ஏற்றதோர் தீர்ப்பே கூறும் இவன்பாத் திரனே சாக எனவுரைத் தார்சங் கத்தார் இவரிதே தீர்ப்புக் கூற எழுந்தன ரூழியர் வீரர். 103. கோரமுன் செய்தோ ரீவர் குறைமுடிப் பதற்கே வந்தார் காரணன் தனையிம் சிக்கக் காரண மேதி வர்க்கே ஆரண நாதன் தம்மை யவமா ணஞ்செய் தாரே தோரணம் போலே நிந்தை தூஷணந் தொடுத்தா ரன்னோர். 104. கட்டியே மறைத்தார் கண்கள் அடித்தன ரவர்கள் னத்தில் குட்டியே சிரசின் மேலே குட்டின தாரென் றாரே திட்டியா லுரைப்பா யென்றே தூயரைத் தீயர் கேட்டார் எட்டியே முகத்திற் றுப்பி யீனமாய்த் தூஷித் தாரே. 105. கொடுத்தேன் முதுகை யானே கொடியவ ரடித்தற் காயே கொடுத்தேன் தாடை ரோமம் கொடிதாய்ப் பிடுங்கத் தானே கொடுத்தேன் முகமு மிழ்நீர்க் கொடுமவ மானத் துக்கே கடுத்தமாக் கினேன்மு கத்தை கடினமாங் கற்பார் போலே. 106. எதிர்க்கவு மிலையே யானே திரும்பவு மிலையே யானே கதியென தாண்டார் தாமே கனிந்துதாங் குகிறா ரென்னை அதினிமித் தம்வெட் கேனே யதனை யறிந்தேன் என்றே விதியென முன்னே சொன்ன உறுதிமெய் வாக்கே போலே. 107. சங்கமே கூறுந் தீர்ப்பைத் தாம்நிறை வேற்றத் தானே தங்களுக் குரிமை யின்றே தங்களா லாகா தென்றே அங்கவ ரறிந்தே யின்னும் ஆங்கமர்ந் தாலோ சித்தார் பங்கமாய்க் குருசிற் கொல்வோம் என்றுப கர்ந்தா ரன்னோர். 108. அரசெனு முரிமை போயே அரசுகொள் ரோமர் தம்மின் அரசனின் குடிகள் தானே யவனதாட் சிக்குட் பட்டோர் அரசனின் துரோகி யென்றே யதிபனின் தீர்ப்புக் கென்றே அரசருக் கரசன் தம்மை யவனிடஞ் சேர்க்கத் தீர்த்தார். |