பக்கம் எண் :

348

 

198.       பாவமேயில் லாதவரே பாவியர்யாம் தாழ்ந்துமன மாறுதலே மாநலமாம்
              பாவத்தி லேயுதித்த பாவியர்யாம் பாவத்தை நந்தொழிலாய்க் கொண்டவரே
              பாவத்தின் தீயபல னிக்குருசிற் பாடுபட்டு நைகிறோமே மென்றுரைத்தே
              பாவம்போய் மெய்ப்பதமே தானடைய மாபணிவாய் வேண்டினனே மீட்பரையே.

199.       இதுவரைக்கும் மாவிழிவாய்ப் பேசியேயி றங்குவையே ரட்சியுனை யென்றனரே
              மதுவறியாற் றம்மதியே போக்கினரா மானுடர்போல் மூர்க்கவெறி கொண்டவரே
              எதுவெனினும் வல்லமையற் றோரெனவும் ரட்சிக்கச் சக்தியேயில் லாரெனவும்
              பொதுஜனமே மாறவேசெய தோனெனவும் புண்ணியனை விஸ்வசியாக் கன்மனத்தோர்.

200.       திருடனிவன் புத்தியிலான் தீயவனே தீமைமிகச் செய்திடவே துணிந்தவனே
              திருக்குமதி யுள்ளவனாய் மாறினனே பேர்பெறும்விஸ் வாசியெனத் தேறினானே
              பெரும்பிழையே செய்தவர்போற் றொங்குபவர் பேர்ரட்சை யாதிபனென் றோந்தனனே
              பெருமிதமாய் வேண்டினனே அவரிடமே மாவரிதாம் நன்மையே பெறவிரும்பி.

201.       ஆண்டவரே யென்றனன்சி ரம்வணங்கி யமலனைவ ணங்கினனதன் னுள்ளத்தில்
              வேண்டியவாம் நன்மையெலாம் எண்ணியபோல் மிகவருளும் வள்ளலென விஸ்வசித்தான்
              ஆண்டருள ராஜியமு முண்டவர்க்கே யரசுசெய்வா ரேகமாயே யென்றுனர்ந்தான்
              ஆண்டவரே நீர்வரவும் ராஜியத்தில் அடியனையே நினைந்தருள்வீர் என்றனனே.

202.       இதுவரைக்கும் மிகவசையே யார்சொரிந்தும் எதுவெனும்பே சாதவர்தம் வாய்மலர்ந்தே
              புதுப்பக்தன் முதிர்ந்தவிசு வாசியிவன் புலனொடுங்கு மித்தருணம் மாநலமே
              இதுவிதமாய்த் தம்மிடமே வேண்டவுமே யிரக்கமுள தெய்வசுதன் ஜேசுபரன்
              இதுதினமே எனதொடுமே நீயிருப்பாய் இணையில்பர தீசினிலே யென்றுரைத்தார்.