233. அதிபதியோ அதிசயித்தான் கேட்டிதையே யவ்விதமாய்ச் சாவதுண்டோ சீக்கிரமாய் அதிபனைய ழைத்துமேவி னாவினானே தானறியச் சாவுமேமெய் யோவெனவே விதித்தனன்யோ சேப்புடைய வேண்டலேபோல் விடைகொடுத்தான் தேகத்தை யேகொடுக்க அதிவிரைவாய்த் துப்பட்டிகொண் டான்கடையில் அவசரமாய் வந்தனனே யோசேப்பே. 234. இதமொடுமே யோரிரவு வந்தவனே எழில்மிகவாம் போதனையே கேட்டவனே பதமுளவோர் போதகன்நிக் கோதெமுவே பரபரப்பா யோடினன்க டைத்தெருவே விதமிரண்டே போளமுமே கொண்டவனும் விரைந்துசத ராத்தலுமே கொண்டுவந்தான் இதனிடையே யூதரேயோ சித்தனரே யிரக்கவேயு டல்களைக்கு ரூசினின்றே. 235. அந்தநாளோ ஆயத்த நாளாகும் அடுத்ததின மாகுமோய்வு நாளுக்கே எந்தவித முங்குருசி லத்தினமே யிருக்கவேகூ டாதெனுமோர் பாண்மையினால் வந்தனரே யூதரும்பி லாத்தினிடம் வணக்கமொடே யுத்தரவே கேட்டனரே இந்தவுடல் மூன்றையு மிறக்கிவிட இவர்களுட காலெலும்பை யேமுறிக்க. 236. வந்தனரே யுத்தரவு பெற்றவரே யவருராடுமே குரூசினிலே முந்தினவன் காலெலும்பொ டித்தனரே முறித்தனரே மற்றவனின் காலெலும்பும் உந்தியுமே வந்தனரே ஜேசுவின்முன் உயிரகன்றே தொங்குவதைக் கண்டனரே பின்திரும்பி யேதிகைத்தார் காலெலும்பைத் தொடமயங்கிப் பின்னிடைந்தே நின்றனரே. 237. நாட்டியதோர் வாக்குநிறை வேறியதே நல்லவரென் பேமுறிப்ப டுவதில்லை நீட்டினனோர் சேவகன்தன் னீட்டியையே நிர்மலன்வி லாவினிலே குத்தினனே மாட்டியவி டத்திருந்தே வந்தனவே வகையொடுரத் தஞ்ஜலமு மாயிரண்டும் நாட்டியதா மோர்வசனம் வேறுளதே நலமுறப்பார்ப் பாரவரைக் குத்தினோரே. |