20. உன்னத மானவர் திருவரூபி உமதுமேல் வந்தே அமருவரே. உன்னத மானவரின் திருப்பலமே உமதுமேல் வந்தே நிழலிடுமே, உன்னத மானவர் திருப்பொருளாம், உமதிட முதிக்கும் திருவுருவோ உன்னத மானவராங் கடவுளுடை உன்னதத் திருமகன் எனப்படுவார். 21. உம்முட இனத்தவன் கடவுளிடம் உயர்பக் தியேயுள முதியவனே அம்மைய ரெவிசபேத் திதுதருணம் அருமகன் ஒருவன் கருத்தரித்தான் அம்மையோ மலடியே யெனப்படுவாள் நிகழ்வதிப் பொழுதோ ஆறுமாதம் எம்பர னார்செய ஏலாதாம் விஷயமே துளதோ? இயம்புவீரே! 22. இப்படி யாங்கன மொழிகளையே தூதனே யிதமோடே யியம்பவுமே அப்படி யானா லிதோஅடியாள் ஆண்டவர்க் கடிமையே யதிநலமே அப்படி யும்முட வுரையதேபோல் ஆகவென் றுரைத்தன ரவ்வணங்கே அப்பொழு தகன்றே யவணிருந்தே தூதனாங் காபிரி யேல்மறைந்தான். 4. எபிரோன் எலிசபெத் லூக். 1 : 39 -45. 23. சின்னாட் கழியவே யோர்தினத்தில் எழும்பினர் மலைசெறி திசையூதர் நன்னா டாம்வள தலமதிலே நலமிகு பலவளஞ் செறிந்துள்ளதாம் முன்னாள் முதலா ரோன்வமிசம் பலதலை முறைவழி யனுபவித்தே இந்நா ளுமேமிகச் சிறப்புள்ளதாய் எபிரனென் பழையவோர் பதியுளதே. 24. கர்ப்பிணி எலிசபெத் தானவளே கணவனாஞ் சகரியா வொடுவதிந்த அப்பதி யணுகியே யங்குள்ளதோர் அரியதா மதிசய விஷயமீதும் கர்ப்பணி யவளையுங் கண்டவணே களிப்போடு சிறிதுநாள் தரித்திருந்தே அப்புறந் தனதகந் திரும்புவதென் றெபிரனுக் கெழுந்தனர் மரியணங்கே. 25. வாழ்வதற் குகந்தாந் தலமிதிலே வாழ்ந்திருந் தவரக மடைந்தவுடன் வாழ்ந்தவள் முதியவள் எலிசபெத்தை வாழ்த்தினர் மகிழ்வொடும் மரியணங்கே வாழ்த்திய தொனியிது செவியுறவே தன்வயிற் றினிலுள் குழவியுமே தாழ்ச்சியே மிலாதோர் அதிசயமாய்த் தன்னுட மகிழ்வினாற் குதித்தனனே. வேறு 26. உன்னததூ யாவியானி றைந்தவளாம் பக்தியிலு யர்ந்த எலிசப்பெதுமே உன்னதசப் தத்தொடுமே கூறினளே "பக்தியிலு யர்ந்தவராம் மாதருளே உன்னதஆ சீர்வதமே பெற்றவர்நீர் உம்முதரப் பிள்ளையுமே பெற்றததை என்னஎனின் மேன்மைஎன தாண்டவரின் மாவெழில்மா தாவெனிடம் வந்ததுவே. |