61. இருவினா வினவி ரகசிய மறிய இருவரை யனுப்பினன் வினவ வருகிறா ரெனவே மறையதேவிளம்பும் மகிமையார் கிறிஸ்துவோ அலது வருவரே யெனவே பிறிதொரு வருக்காய் இனுமிரும் பதுமவ சியமோ இருவரு மிதுவாம் மருமமே யறிய இயேசுபெ ருமானிட மடைந்தார். 62. அவர்வருஞ் சமையம் அருட்பரன் பலர்க்கே அதிநலம் புரிந்துகொண்டிருந்தார் அவரிட மிருந்தார் அநேகநோ யருமே அவதிய யடைந்தவர் அநேகர் அவதியே யடைந்தோர் அசுத்தபேய் களினால் அலைசடிப் பட்டவர் பலபேர் அவரனை வருக்கும் சுகமளித் தநேக குருடருக் களித்தனர் நயனம். 63. அண்டையி லிருந்தே யாவையு மறிந்த இருசிஷி யரையுமே விளித்தே கண்டகேட் டவையாங் காரிய மனைத்தும் அருளனுக் கறிவியும் நலமாய் கண்ணிலா தவரே காண்கிறார் நலமாய் நடக்கிறார் முடவரா னவரே பின்னுமே கொடிய குட்டமென் றசுத்த பிணியகன் றுசுகமா கிறரே. 64. "பரிவொடு செவிகள் திறந்துமே செவிடர் பழுதிலாச் செவியடை கிறரே மரித்தவர் மரண நிலைமையி லிருந்தே மறுபடி யுயிர்த்தெழு கிறரே தரித்திரர் தமக்கே சுபவிசே டமுமே தயவொடு சொலப்படு கிறதே சிறிதெனு மெனிலே யிடறுறா னெவனும் சிறந்தபாக் கிய"னென வுரைத்தார். 65. திரும்பியே யகன்றார் வந்ததூ தருமே திருக்குரு சனங்களை விளித்தே அருமையாங் வனமே சென்றது பார்க்கநீ ரவணுமே யெதனை உறுதியற் றதுவா மோங்கியே வளர்ந்தே காற்றில சையுநா ணலையோ பிறிதுவே றெதுவோ காணவே வனத்தில் பேரவா லொடும்விரைந் ததுவே. 66. மெல்லிய வுடையே மேலணிந் துவனோர் மேன்மக னொருமனு டனையோ மெல்லிய வுடைய மங்கவஸ் திரமும் மேன்மையா யணிந்திருப் பவராய் வல்லமை யுளராய் வாழ்பவர் சுகமாய் வாழ்வர ரசர்மனை களிலே அல்லவே யெனிலோ பார்க்கவங் கெதையோ சென்றதோ ரருந்தரி சியையோ. 67. தீர்க்கமா யுமக்கே யுரைக்கிறேன் நலமாய் ஆமொரு தீர்க்கனாந் தரிசி தீர்க்கமாந் தரிசி யெவனிலும் பெரியோன் தேறிய தீர்க்கனு மிவனே ஏற்கவே யிவனுக் கிணையெனுந் தரிசி முன்னதாய்த் தோன்றின திலையே மார்க்கமாய் முனமே மறைச்சுரு ளதனில் நவின்றிருந் தவனுமே யிவனே. |