88. திரண்டுமே யாட்கள் வந்தார் தீக்ஷையே பெறுதற் காயே வரமுறும் யோவா னண்டை வந்தவர் தொகைக்கே மேலே பரகுரு வண்டை வந்தோர் பக்தரோ அதிகப் பேரே நரமகன் ஜேசின் கீர்த்தி நாடெவண் பரவிற் றாமே. 89. பரிசெயர் கேள்விப் பட்டார் பரன்சுதன் புகழே தானே தரிசியோ மாட்சி நீக்கி தரணியில் வந்தோர் ஏழை எரிச்சலே கொண்டார் ஈனப் பொறாமையுங் கொண்டார் தீயோர் நரிக்குணத் தாலே ஜேசை நசுக்கமு யன்றா ரன்றோ. 90. பரன்சுத னறிந்தே யீதை விலகவே பர்சே யார்க்கே பிரிந்தனர் நதியின் தீரம் பிரிந்தன ரப்ர தேசம் பெரியா வழிவிட் டாரே பெரியனே ரோதா தீனம் தெரிந்துமே சமரி யாவின் திசைவழி யாயே சென்றார். 91. சமாரியா ரோடே யூதர் சம்பந் தம்வைய் யாரே சமாரிய ஜாதி யாரை மதித்தார் தாழ்ந்தோ ராயே சமாரியாப் பாதை யேகச் சம்மதி யாரே யூதர் சமாரியா நாடூ டேயே தாண்டியே சென்றார் நாதன். 92. இரட்சைசெய் தற்காய் வந்தோர் இயேசெனும் நாமம் பூண்டோர் இரட்சையோ யூதர்க் கல்லால் ஏனையர் யார்க்கும் இன்றோ இரட்சையோ பாரில் எல்லா ஜாதியர்க் காம்ரட் சிப்பே இரட்சைச மார்யர்க் குண்டென் றுணர்த்தவிப் பாதை சென்றார். 27. சீகார், சமாரிய மாது.யோ. 4 : 4 - 42. 93. சேர்ந்துச மாரி யாவிற் சீகா ரூரிற் றானே பாந்தமாய் யோசேப் புக்கே பங்கினுக் கேமே லாயே சாந்தயாக் கோபே யீய்ந்த பங்கதிற் சார்ந்த ஊரே சேர்ந்தனர் சோர்வுற் றோராய் செய்பிர யாணத் தாலே. 94. வந்தவர் உட்கார்ந் தாரே வாடியோர் கேணி யோரம் சந்ததம் அஃதே யூரார் நீர்கொளுங் கேணீ தானே இந்தவோர் கேணீ பேரோ யாக்கபின் கேணீ யென்றாம் எந்தநாள் எந்தோர் நேரம் பெண்களிக் கேணீ போவார். |