102. "அவனுக் கேயா னீயும் அருமையா மிந்தத் தீர்த்தம் அவனிலே நிலைத்தென் னாளும் அறுத்தவன் தாகந் தன்னை அவனுளே தான்சு ரந்தே அனந்தமாங் காலந் தானே அவனுக் கீய்ந்தே ஜீவன் அதுசுரந் தோடும் ஊற்றாம்." 103. மாகனந் தங்கும் ஆண்டாய் மாறா தேயும் வாக்கே தாகமே யற்றே போக தண்ணீ ரிங்கே மொள்ள ஆகவே யாகா தற்காய் அன்புகூர்ந் தேழை யென்மேல் வேகமா யீவி ரிப்போ விந்தை யிஜ்ஜீ வநீரே. 104. ஆரென அறிந்தா ளில்லை அமலனை யாரம் பத்தில் "நீரொரு யூதன்" என்றாள் நினையா தேசொன் னாளே ஆரோர் கண்யர் மேலோர் எனநினைந் தாண்டாய் என்றாள் ஆரென அறியா ளின்னும் அவளுளக் கண்தி றந்தார். 105. அவள்முனாற் றனையே கண்டே அவள்தமை பின்னாற் காண அவளிடங் கருணை கொண்டே அவளுட ரகஸ்யம் விண்டார் அவளது கணவன் தன்னை அழைத்துமே வரச் சொன்னாரே அவளெனின் கணவன் இல்லை யெனஅறைந் தாளுத் தாரம். 106. எனக்கொரு கணவன் இல்லை எனச்சொனாய் சரியே தானே உனக்கிருந் தனரே ஐவர் கணவராய் நிசமே தானே உனக்கிதோ இருப்போ னோதான் உனதுட கணவன் ஆகான் உனக்கிலை என்றே சொன்னாய் உரைத்தனை நிசமே தானே. 107. ஆண்டவர் ஈதே சொல்ல திறந்ததே அகத்தின் கண்ணே ஆண்டவா நீரோர் தீர்க்கத் தரிசியே எனஅ றிந்தேன் ஈண்டிதே குன்றின் மேலெம் பிதிர்க்களோ தொழுதே வந்தார் நீண்டசா லேமில் நீவிர் தொழவுமே ஏன்சொல் கின்றீர். 108. அந்தமாய்ச் சொல்கின் றேனே அறிந்திதை நம்பு வாயே இந்தவோர் குன்றிற் றானோ எருசலேம் மேட்டிற் றானோ எந்தவோர் தலமோ எங்கும் இறைவனை யாரா திக்க அந்தநற் காலந் தானே அணுகிநிற் கின்ற தன்றோ. |