71. ஆலயம் விடுத்தே சேர்ந்தனர் பரனாம் அருட்குரு பீற்றரி னகமே ஞாலமா மிதிலே வந்தநற் பரனே நலஞ்செய வீட்டினுட் செலவே சாலவே சுரத்தாற் சக்தியே யிழந்து படுத்திருந் தாளவன் மாமி சீலமா யவட்கே சீர்சுக மளிக்கப் பரனையே வேண்டின ரங்குளர். 72. அவளிட மணுகி யவள்கரம் பிடித்தே யெழுப்பினி ரருட்குரு கரத்தால் அவரது பரிசம் அவள்கரம் படவே அவள்சுக மடைந்தெழுந் தனளே அவள்சுர மகல அடைந்தன ளுடனே அகன்றதன் சுயபலந் திரும்ப அவளெழுந் தனளே யவர்களுக் குடனே புரிந்தனள் பணிவிடை திடமாய். 73. அந்தநா ளதுவே ஓய்வுநாள் முடிய அடையவே யருட்சுக மவரால் வந்தபற் பலவாம் நோயுளோர் பலபேர் வருத்தமுற் றவரவர் கரத்தால் அந்தவூர் மனுட ரானவ ரொடுவந் தமர்ந்தன ரகமுனாற் றரையில் எந்தஎப் பிணியர் எவ்வகை யினரும் எவருமே சுகமடைந் தனரே. 74. வெண்கரும் பிணியோ கொடும்விஷ ஜுரமோ மறுபிணி துயரமே தெனினும் அங்கரம் படவே அகன்றன பிணிகள் அனைவருஞ் ககம்பெல னடைந்தார் வெஞ்சின அலகை விலகியோ டினவே விமலனின் தொனிசெவி யுறவே அஞ்சின அவர்க்கே யறிக்கை யிட்டவை யகன்றன அவதியுற் றவரை 75. இவையெலாம் நடந்த எசையாத் தரிசி இசைத்தவை நிறைவுறும் படிக்கே அவர்கிரு பையாக ஏற்றனர் நலமாய் நமதுப லவீனமா மனைத்தும் அவர்மிகக் கனிந்தே யன்பொடுஞ் சுமந்தார் நமதுட பிணிகளா மனைத்தும் அவரிது விதமாய்ச் செய்தனரிவற்றை யதுதலம் பிறதலங் களிலும். 76. செம்மையாய்க் கிறிஸ்தே தெய்வமா சுதனென் றறிந்திருந் ததாலல கைகளே தம்மையே யறிக்கை செய்யா திருக்க அதட்டினா ரிரையா திருக்க நன்மைசெய் பவரோ நள்ளிர வினையே நலமுற நிமதியாய்க் கழித்தே வெம்மையாய்ப் பகலோன் தோன்றுமுன் னமேதான் ஜெபிக்கவே யகன்றனர் வெளியே. 77. காலை யிலவரைக் கண்டிலர் சிஷ்யர் கண்டனர் தேடியே யவரை சாலவே யுமையே யாவருஞ் ஜனங்கள் தேடுகின் றார் எனச் சொலவே வேலை எனக்கோ மற்றவூர் களிலும் விரைந்துபி ரசங்கமே செயவே காலமே கடந்தே போய்விடா தகல்வோம் வந்துளே னிதுசெயக் கனிவாய். |