பக்கம் எண் :

78திரு அவதாரம்

 

97.        அருள்மிகு வசனஞ் செவியுற மகிழ அணுகியே குழுமினர் ஜனமே
              தெருக்கபா டமுனின் றனர்செறிந் தவரே சிறிதெனு மிடமுளே யிலையே
              அருட்சுக மருள்வோர் அவரென அறிய அவண்விளங் கியதவர் வலமை
              தெருவழி நடந்தே யடைந்தரீ ரிருவர் சுமந்தொரு திமிர்ப்பிணி யனையே,

98.        உள்ளமர்ந் திருந்த உன்னதக் குருமுன் உவப்பொடு வைக்கவே முயன்றும்
              எள்ளிட இடமே யுட்செல வழியில் லிடைஞ்சலே வாசலின் வழியே
              மெள்ளவே யெடுத்தார் ஏறிவீ டதன்மேல் கிடத்தினர் மேற்றளத் தினிலே
              தள்ளியே திறந்தார் தட்டோ டுகளை இறக்கினர் படுக்கை யோடே.

99.        தம்முனாற் கிடக்குந் தனியனைக் கவனித் தவனிடந் தயவுகொண் டனரே
              தம்முனா லவனை யிறக்கவைத் தவரின் தகுவிசு வசத்தால் மகிழ்ந்ததே
              அம்மனு டனுக்கே யருளொடு பகர்ந்தார் "மகனே திடமடை குவையே
              செம்மை யாயுனின் கெடுபவ மனைத்தும் மனிக்கப் பட்டன சீராய்"

100.       பவத்தைத் தவிர்ப்போர் பவமனிப் பருள பரிசயர் வேதபா ரகரும்
              "பவமனிப் பருளும் இவனெவன் பவியே பரமதூ ஷணம்பகர்ந் தனனே
              பவமனிப் பருள்வோர் பரனலா லுலகில் மகனெவ னுள"னெனப் பகர்ந்தே
              பவமிலா தவரைக் கொடியபா வியரே தமதுளத் தினிற்பழித் தனரே.

101.       இருதய நினைவே யறிபவ ரிறைவன் இதைத்தம துள்ளத்தி லறிந்தே
              "இருதயங் களில்நீர் நினைப்பது பெனவோ எதுஎளி தெனநீ ரியம்பீர்
              உறுபவ மகன்றே மனிப்படைந் தனையென் றுரைப்பதோ அவனிடம் அலது
              திறமுட னெழுந்துன் படுக்கை யெடுத்தே செலுவை யெனவுரைப் பதுவோ.

102.       "பாரினி லெவர்க்கும் பவமனிப் பருள பரிவொடும் மனுமகன் தமக்கே
              நேரதி காரம் இருக்கிற தெனநீர் அறியவேண் டியதவ சியமே"
              பார்த்திப னிவையே பகர்ந்துமே யவர்க்கே கட்டிலில் கிடப்பனை விளித்தே,
              "ஆர்வமாய் உனது படுக்கை யெடுத்தே யுனதகஞ் செலுக" வென றனரே.

103.       எழுந்தவன் துதித்தான் எவருமே யறிய எடுத்தனன் தனதுட படுக்கை
              தொழுவதற் குரிய கடவுளைத் தொழுதே சுகமடைந் தகமடைந் தனனே
              பழுதிலாச் சுகத்தை யறிந்தனை வருமே பரவச மதிசய மடைந்தார்
              எழுந்தனர் பயந்தே யிறைவனைத் தொழுதார் அதிசய நிகழ்ச்சியென் றனரே.