39. லேவியை யழைத்தல் மத். 9 : 9 - 17; மாற். 2 : 13 - 22; லூக். 5 : 27 - 39 104. திருக்குரு பரனார் அவ்விட மிருந்தே சேர்ந்தனர் கடற்கரை யருகே குருவருள் வசனங் கேட்கவே குணமாய்க் கூடினர் ஜனமனை வருமே அரியபோ தகமே யன்பொடு பகர்ந்தே அப்புறங் கடந்துபோம் பொழுதே அருகினி லிருந்த வரிகொளுந் துறையில் கண்டரா யவரிகொள் லெவியே. 105. ஆயமே கொளுவோர் தமதருட் குரியார் என்பதை யனைவரு மறிய ஆயமே கொளுவோர் ஊழியஞ் செயவுந் தக்கவ ரெனவறி யவுமே ஆயமே கொளுவோன் அல்பெயு மகனாம் லேவிமத் தேயுவென் பவனால் ஆயமே கொளுமற் றோரை யழைக்க அண்ணலார் மனதுவந் தனரே. 106. "என்பினே வருவாய் எப்பொழு துமேநீ எனதொடு மிருக்க"வென் றனரே உன்னியே யெழுந்தான் உள்ளதை விடுத்தான் உவப்பொடு தொடர்ந்தன னவரை மன்னவன் கிறிஸ்தை மாமகிழ் வொடுமே யழைத்தனன் தனதுட அகமே பின்னுமே யவனே பொற்பர னவர்க்கே நடத்தினன் பெரியதோர் விருந்தே. 107. வந்தனர் பலபேர் அயலகத் தவரும் வகையொடு பந்தினத் தவரும் பந்தியே யமர்ந்தார் குருபர னொடுமே பாவிய ராயமே கொளுவோர் இந்தவி தமவர் இழிவடைந் தவரை உயர்த்தின ரிறைவனே சமமாய் விந்தையா மிதனால் முறுமுறுத் தனரே பரிசயர் வேதபா ரகரும். 108. சீறியே சினந்தார் திருக்குரு பரன்மேல் சீடரி டமேயுரைத் தனரே "சீரியர்க் கழகோ தீயபா வியரை பந்தியி லமர்த்துதல் சமமாய் நேரிதோ சொலுமின் ஜேசுவா முமது நேசபோ தகர்நிரு மலரோ பாரிலெப் பொழுதும் பார்த்திலே மறியேம் நிந்தையு ளதாமிது விஷயம். 109. பரிகரி யவரைக் கேட்டனர் விளித்தே, 'பரிகரி யவசிய மெவர்க்கோ? பெரிதவ சியமே நோயரா னவர்க்கே, பிணியிலார்க் கவசிய மிலையே 'எரிபலி யலவே யேற்றதே யெமக்கே யிரக்கமே யெனக்குவப் பெ'னவே தரிசிமுன் னுரைத்த தரிசன வுரையை சரிவரப் படித்துமே யறிவீர். 110. அறியுமுன் னிதனை யழைக்கவந் தனன்யான் பவியரா னவர்மனந் திரும்ப தெரிந்துகொ ளுவிரே தேறிய புனிதர் சிறந்தநீ தியுளரை யலவே," பரிவொடும் வினவ பரிசய ரருளன் கிஷியரா மிருவகுப் பினரும் "பரிசயர் அருளன் சிஷியரா னவர்யாம் பலதர முபவசிக் கிறமே. |