45. நாடுசென்ற லைந்தவர்தம் மூரைநாடி வந்தாற்போல் மேடுகொண்ட நாசரேத்தை மெல்லநீங்கி யேயீவர் காடுமேடு மாறுமேக டந்துபய ணஞ்செய்தே ஆடுமேடு மார்ந்ததாமம் பெத்தலையே சேர்ந்தாரே. 46. பெத்தலையிற் சேர்ந்தபோதே ஜோசபெனும் பேருள்ளோன் பத்திரமாய்த் கன்னியர்தாந் தங்கப்பய மின்றித்தான் ஆத்திரமாய்த் தேடினானே வீடமைந்த தேயில்லை சத்திரத்தி டங்கிடையா தங்கினாரோ ரான்கொட்டில். 47. "ஒப்பிலாப்பா லனைப்பெறுவாள் ஒர்பெதும்பை" யென்றேயோர் தப்பிலாத தீர்க்கனேமுன் சாற்றினதாம் வாக்கேபோல் செப்பினநா ளேநெருங்கச் சேர்ந்ததாங்கொட் டில்தன்னில் தப்பிலாத தெய்வமைந்தன் தாரணியில் வந்தாரே. 48. மெய்ப்பரனாந் தெய்வமைந்தன் மேவிவந்தா ரான்கொட்டில் அப்பனேமு தற்பிறப்பாம் அண்ணலைச்சுத் தஞ்செய்தே துப்புரவாஞ் சீலையாலே சுற்றினார்பா லன்தன்னை துப்புரவே யுள்ளஆவின் தொட்டியிற்ப டுத்தாரே. வேறு 49. பென்னம்பெரி தானதாம்பே ரண்டமுமே கொள்ளாதோ மன்னவனே நீயெனக்காய் மானுடனுமா னாயன்றோ சின்னதாம்வயிற் றினிலேசிற் றுயிலுங்கொண் டாயன்றோ கன்னிமரி யம்மனின்கர்ப் பக்கனியுமா னாயன்றோ. 50. என்னாளுந்தூ தர்சணம்பு கழ்ந்தேற்றினா ரேயுன்னை அந்நாளி லுன்மாட்சியோ அளவுள்ளடங் காதன்றோ முன்னாளே தேன்வனத்தில் முதல்மாதே செய்தீங்கை இந்நாளில் நீக்கவென்றே உலகிங்கே வந்தாயோ? 51. மண்ணாதிபர் மன்னவர்உன் மாட்சிநீத் தாயன்றோ பொன்னாம்லோ கங்களைந்தே போந்தனையே, மண்ணுலகாம் துன்னாளின்தீங் கினின்றேதுர்ப் பாக்யர்மீள் தற்காயோ இன்னாவ டைந்துதீர்க்க இவ்வுலகிலே வந்தாயோ. |