பக்கம் எண் :

புறன

128

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

பேற்றைக் குறித்துத் தவம் செய்தனர்.  அப்பொழுது இறைவன் அவர்முன்     தோன்றி ‘நினக்கு நிறை ஆயுளுடைய குமரன் வேண்டுமோ? நிறைகுணமுடைய குமரன் வேண்டுமோ?’ என்று கேட்க, முனிவர் ‘நிறைகுணமுடைய புதல்வனே வேண்டும்’ என்றனர்.

    இறைவன் அவ்வாறே அருள்செய்து மறைய, அருளியவாறே உரியகாலத்தில் முனிவர்க்குத் தவக்குமரர் ஒருவர் பிறந்தார். அக்குமரர்க்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர் பெற்றோர். சிவபெருமான் அருளியவாறே மார்க்கண்டேயனார், சிவபக்தி சிவார்ச்சனைகளில் இளமைதொட்டே ஈடுபட்டு நிறைகுணச் செல்வராய் விளங்கினார்.  ஆனால் அவருக்கு வரையறுக்கப்பட்ட ஆயுள்காலமோ பதினாறாண்டுதான்.  அவ் வாயுள்காலம் முற்றுப் பெற்றவுடன் காலன் அவர் உயிரைக் கொண்டு செல்ல எய்தினன்.  அதுகண்ட மார்க்கண்டேய னார் சிவபெருமானைச் சரணடைந்தனர்.  காலன் அதைக் கருதாது தன் கடமையை நிறைவேற்றுவதிலேயே கண்ணாய், எம்பெருமானை அடைந்த அருந்தவ இளைஞரைத் தன் கொடிய காலபாசத்தாற் கட்டி ஈர்க்கலாயினன்.  அவ்வளவில், சிவபெருமான் சினந்து தம் அன்பரை ஈர்த்த கூற்றுவனைக் காலால் உதைத்து வீழ்த்திச் சிறுவர்க்கு என்றும் பதினாறாய் இனிது வாழ வரந்தந்தருளினர்.

    செய்யுள்-31. ‘ பௌவ நஞ்ச முண்டான் ’ என்றதாற் பெறக்கிடக்கும் வரலாறு : முன் ஒரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் தமக்கு மரணம் நேராதிருக்க அமிழ்தம்வேண்டிப் பிரமனிடம் சென்று தமது விருப்பத்தைத் தெரிவித்தனர்.  பிரமன் அவர்களோடு திருமாலிடம்சென்று பாற்கடலைக்   கடைந்து அமிழ்தம் தந்தருளும்படி வேண்டினர்.  திருமால் அதற்கிசைந்து கருடனால் மந்தரமலையைக் கொண்டுவந்து அதைப் பாற்கடலில் மத்தாக நாட்டி, வாசுகி என்னும் அரவை அதில் தாம்பாகப் பூட்டி, ஒருபுறம் தேவர்களும் ஒருபுறம் அசுரருமாக நின்று கடையச்செய்தனர்.  அவ்வாறு கடையும்பொழுது, வாசுகி வருத்தம்பொறாமல் விஷத்தைக் கக்க, அஃது அங்கிருந்தார் அனைவரையும் கொல்ல எழுந்தது.  அதுகண் டஞ்சிய தேவர்களனைவரும் சிவபெருமானைச்