திருக்குற்றாலக்
குறவஞ்சி
மூலமும்
உரையும்
தற்சிறப்புப்பாயிரம்
கடவுள் வணக்கம்
விநாயகர்
|
பூமலி இதழி மாலை புனைந்தகுற் றாலத் தீசர்
கோமலர்ப் பாதம் போற்றிக் குறவஞ்சித் தமிழைப் பாட
மாமதத் தருவி பாயும் மலையென வளர்ந்த மேனிக்
காமலி தருப்போல் ஐந்து கைவலான் காவ லானே. |
(பொழிப்புரை)
தோற்றம் மிக்க கொன்றை மலர் மாலையை அணிந்திருக்கின்ற திருக்குற்றால
நாதரின் சிறந்த தாமரைமலர் போன்ற திருவடிகளை வழிபட்டுக் குறவஞ்சித் தமிழை
நான் பாடுதற்கு மிக்க மதமாகிய அருவி ஒழுகுகின்ற மலைபோல் வளர்ந்த திருமேனியையுடைய
கற்பகச்சோலையில் விளங்குகின்ற கற்பகத்தருப்போல் கொடுக்கும் தன்மை
வாய்ந்த ஐந்து கைகளையுடைய வல்லவனாக பிள்ளையார்ப் பெருமான் எனக்குக் காவலாக
விளங்குவான்.
(விளக்கவுரை) பூமலி இதழி என்ற தொடரால்,
தோற்றம் மிக்க பூக்கள் நிரம்பிய கொத்துக்களோடு நன்கு விளங்குவதென்பதும்,
பூங்கொத்துக்கள் மாலையணிந்ததுபோல் என்பதும், இது சிவபெருமானுக்குரிய அடையாளமாலை
என்பதும் பெறப்படும். 'ஈசன்' என்ற சொல் சிவபெருமானையே காரண இடுகுறியாகக்
குறிப்பது. 'கொன்றை வேய்ந்தோன் செல்வன் அடியிணை' என்பது ஒளவையார் அருளிய
விநாயகர் வணக்க அடி. ஆத்திசூடி என்ற தொடர்க்கேற்பக் 'கான்றை வேய்ந்தோன்'
என்பதே நேரானது. இதனைக், 'கொன்றை வேந்தன், 'என்றே பாடம் ஓதுவர்.
அசையா மலையினின்றும் பாய்ந்தோடுவது அருவி
(நீர் விழ்ச்சி) அசையு மலையாகிய யானையிடத்தினின்றும் பாய்ந்தோடுவது
மத நீர் என்பது குறிப்பு. கற்பகத்தருப்போல் வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும்
கொடைக்கை என்பது குறிக்கக் 'காமலி தருப்போல் ஐந்துகை' எனப்பட்டது. தருக்கள்
ஐந்துபோல் கொடுக்கும் கைகளும் ஐந்துடை யான் எனக் குறித்தார். பிள்ளையார்ப்
பெருமானுக்கு ஐந்து கைகள் உள்ளன. ஆதலான் காத்தற்குரிய உறுப்பு கையே, 'கைவலான்'
'காவலான்' என்பன அடுக்கு மொழியணியாக இன்பந் தருதலறிக மலர்ப்பாதம்;
உவமைத்தொகை. என: உவம உருபு. (1)
முருகக்கடவுள்
|
பன்னிருகை வேல்வாங்கப்
பதினொருவர் |
படைதாங்கப்
பத்துத் திக்கும் |
நன்னவவீ ரரும்புகழ
மலைகளெட்டும் |
கடலேழும்
நாடி ஆடிப் |
பொன்னின்முடி ஆறேந்தி
அஞ்சுதலை |
எனக்கொழித்துப்
புயநான் மூன்றாய்த் |
தன்னிருதாள் தருமொருவன்
குற்றாலக் |
குறவஞ்சித்
தமிழ்தந் தானே. |
(பொ.ரை)
பன்னிரண்டு கைகளில், ஒன்றில் வேற்படையைத் தாங்கியும், மற்றைய கைகளில்
பதினொரு உருத்திரர் படைகளைத் தாங்கியும், பத்துத் திக்கிலும் (உமாதேவியார்
திருவடிச் சிலம்பினின்றும் தோன்றிய நவசத்திகளின் வயிற்றிற் பிறந்த
வீரவாகுதேவர் முதலிய) ஒன்பதின்மரும் புகழ, எட்டு மலைகளையும், ஏழு கடல்களையும்
தேடி ஆடிப் பென்னாலான ஆறு திருமுடிகளைத் தம் தலைகளில் அணிந்து, எனக்கு அச்சத்தை
நீக்கியருளிய பன்னிரண்டு கைகளை யுடையவனும் (என்பிறப்பை ஒழிக்கத்) தன்
இருதிருவடிகளையும் தந்தருளுகின்ற ஒப்பற்றவனுமான முருகப்பெருமான், குற்றாலக்
குறவஞ்சித் தமிழை நன்கு பாடும்படி எனக்குத் தந்தருளினான்.
(வி-ரை) இச் செய்யுளில் பன்னிரண்டு முதல்
ஒன்று வரை கீழ் எண்ணாக அமைய முறையே பொருள்கள் சிறப்புற அமைந்திருக்கும்
அழகு கருத்தக்கது.
அஞ்சுதலை என்பதில் அஞ்சுதல் என்னும் தொழிற்பெயர்
இரண்டனுருபு ஏற்றது. அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பதில் அஞ்சுமுகம்
அஞ்சுதல் என்னும் பொருளது. நான்கு மூன்றாய் என்பது, நான்மூன்றாயெனத் திரிந்தது,
நான்காகிய மூன்றென அளவுப் பண்புத் தொகையாம், அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்
பிறவாழி நீந்துவர். அவர் பிறவிக் கடலினின்றும் நீந்துவர் என்னும் பொருளே
தன் இருதாள் தரும் என்ற சிறப்புக்குறிப்பாம். தந்தான் என்பது, தெளிவுபற்றி
வந்த இறந்தகாலம்.
உருத்திரர் படைகள்: தோமரம், தொடி, வாள், குலிசம்,
பகழி, அங்குசம், மணி, பங்கயம். தண்டம், வில், மழு என்பனவாகும். பத்துத்திக்குகள்
ஆவன: கிழக்கு முதலிய திசைகள் நான்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு,
வடமேற்கு ஆகிய திசைகள் நான்கு, மேலிடம், கீழிடம் ஆகிய இடங்கள் இரண்டு,
ஆகத் திசைகள் பத்தாம். மலைகள் எட்டாவன: கைலை, மந்தரம், இமயம், விந்தம்,
நிடதம், ஏமகூடம், நீலமலை, கந்தமாதனம் என்பனவாம், கடல்கள் ஏழு : நன்னீர்,
உவர் நீர், பால் தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு என்பனவாம். (2)
திரிகூடநாதர்
|
கிளைகளாய்க் கிளைத்தபல
கொப்பெலாஞ் |
சதுர்வேதம்
கிளைகள் ஈன்ற |
களையெலாம் சிவலிங்கம்
கனியெலாம் |
சிவலிங்கம்
கனிகள் ஈன்ற |
சுளையெல்லாம் சிவலிங்கம்
வித்தெலாம் |
சிவலிங்க
சொரூபம் ஆக |
விளையுமொரு குறும்பலவின்
முளைத்தெழுந்த |
சிவக்கொழுந்தை
வேண்டு வோமே. |
(பொ-ரை) ஒரு பலாமரத்தின் கிளைகளாய்ப் பிரிந்திருக்கின்ற
பல கொப்புகளெல்லாம் நான்கு மறைகள்; அக்கிளைகள் தந்த வளாரெல்லாம் சிவலிங்கம்;
அம் மரத்தின் பழமெல்லாம் சிவலிங்கம்; அப் பழங்களிலுள்ள சுளையெல்லாம்
சிவலிங்கம்; அச் சுளைகளிலுள்ள கொட்டைகள் எல்லாம் சிவலிங்கவடிவமாக விளைந்துள்ள
இக் குறும் பலாவிடத்தே தோன்றி யெழுந்த சிவபெருமானை நலந்தர வேண்டிக்கொள்வோம்.
(வி-ரை) சதுர்வேதம்-நான்மறை. வித்து-விதை;
கொட்டை. சொரூபம்-வடிவம். வேண்டுவோம்; தன்மைப் பன்மை எதிர்காலத் தெரிநிலை
வினைமுற்று.
நான்கு வேதங்களும் ஒன்று கூடி ஒரு பலாமரமாகிப் பிரணவம் வேராகவும்,
பாகை இரண்டு கவடாகவும், சுருதி முழுதும் கிளைகளாகவும் இன்றும் நின்று தன் நிழலிலுள்ள
சிவனைத் தொழுது கொண்டிருப்பதாகப் புராணம் கூறும். இம் மரத்திற் பழுக்கின்ற
பழங்களை எவரும் பறிப்பதில்லை, குரங்குகளே கீறித்தின்னும், (3) |
|
|
|
|