குழல்வாய்மொழியம்மை
|
தவளமதி தவழ்குடுமிப்
பனிவரையின் |
முளைத்தெழுந்து
தகைசேர் முக்கண் |
பவளமலை தனில்ஆசை
படர்ந்தேறிக் |
கொழுந்துவிட்டுப்
பருவ மாகி |
அவிழுநறைப் பூங்கடப்பந்
தாமரையும் |
ஈன்றொருகோட்
டாம்பல் ஈன்று |
குவலயம்பூத் தருள்கொடியைக்
கோதைகுழல் |
வாய்கொழியைக்
கூறு வோமே. |
(பொ-ரை)வெண்ணிறம் பொருந்திய சந்திரன் தவழ்கின்ற
முடியையுடைய இமயமலையில் தோன்றி எழுந்து, அழகு பொருந்திய மூன்று கண்களையுடைய
பவளமலை போன்ற சிவபெருமான்மீது விருப்பம் மிகுந்து ஏறி, வளர்ந்து பக்குவமாகி
விரிகின்ற தேனையுடைய மலர்களாலான கடப்பமாலை யணிந்த முருகப்பெருமானையும்
பெற்று, ஒற்றைக் கொம்பையுடைய யானை முகப் பிள்ளையாரையும் ஈன்று, உலகம்
யாவற்றையும் பெற்றருளிய கொடிபோல்பவளாகிய கூந்தலையுடைய குழல் வாய்மொழி
யம்மையை வாழ்த்துவோமாக.
(வி-ரை) முக்கண் பவள மலை-சூரியன், சந்திரன், நெருப்பு,
ஆகிய மூன்றையும் கண்களாகக் கொண்ட பவளமலை போன்ற சிவபெருமான்; இதில்
கொடி என்றதற்கு ஏற்பத் தாமரை, ஆம்பல், குவலயம் (நீலோற்பலம்) ஆகிய
மலர்களைப் பூத்து எனக் கூறிய சிலேடை நயம் காண்க. தாமரை, தாமரையை; தாமத்தையுடைவரை.
ஆம்பல்-அல்லியை; யானையை. (4)
சைவசமயாசாரியர்
நால்வருள் மூவர்
|
தலையிலே ஆறிருக்க
மாமிக் காகத் |
தாங்குகடல்
ஏழழைத்த திருக்குற் றாலர் |
சிலையிலே தடித்ததடம்
புயத்தை வாழ்த்திச் |
செழித்தகுற
வஞ்சிநா டகத்தைப் பாட |
அலையிலே மலைமிதக்க
ஏறி னாலும் |
அத்தியிலே
பூவைஅந்நாள அழைப்பித் தானுங் |
கலையிலே கிடைத்தபொருள்
ஆற்றிற் போட்டுக் |
கனகுளத்தில்
எடுத்தானும் காப்ப தாமே, |
(பொ-ரை) தனது தலையில் கங்கையாறு இருக்கவும்
தன் மாமியாகிய காஞ்சனமாலையின் விருப்புக்கிசைந்து, ஏழு கடல்களையும் நீராடுதற்கு
அவளுக்கு வரவழைத்த திருக்குற்றால நாதருடைய மலையைப் பார்க்கினும் பருத்த
அகன்ற தோள்களை வாழ்த்திச் செழிப்பான குறவஞ்சி நாடகத்தைப் பாடும் பொருட்டு,
கடலிலே கல் தெப்பமாக மாறக் கரை ஏறிய திருநாவுக்கரசு சுவாமிகளும், இறந்து
சாம்பராகிக் குடத்துள் வைக்கப்பட்டிருந்த பூம்பாவை என்னும் பெண்ணை உயிர்பித்துதவிய
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும், தேவாரப் பதிகம் பாடியதற்காகத் திருமுதுகுன்றக்
கடவுள் கொடுத்த பொன்னை அவ்வூர் மணிமுத்தாற்றில் விட்டுப் பின் திருவாரூர்க்
கமலாலயக் குளத்தில் எடுத்துப் பரவையார்க்குக் கொடுத்து மகிழ்வித்த சுந்தரமூர்த்தி
சுவாமிகளும் காப்பாவார்களாக.
(வி-ரை)மாமி-காஞ்சனமாலை. சிலையில்-எல்லைப்
பொருளது.
அத்தி-எலும்பு. கலை-தேவாரப் பதிகம். இதில் அப்பர், சம்பந்தர், சுந்தரர்
ஆகிய மூவர் அற்புதச் செயல்கள் குறிக்கப்பட்டுள்ளன. (5)
அகத்தியமுனிவர்,
மாணிக்கவாசக சுவாமிகள்
|
நித்தர்திரி கூடலிங்கர்
குறவஞ்சி |
நாடகத்தை
நிகழ்த்த வேண்டி |
முத்தர்திரு மேனியெல்லாம்
உருகவே |
தமிழுரைத்த
முனியைப் பாடி |
இத்தரையில் ஆத்துமம்விட்
டிறக்குநாட் |
சிலேட்டுமம்வந்
தேறா வண்ணம் |
பித்தனடித் துணைசேர்ந்த
வாதவூ |
ரானடிகள்
பேணு வோமே. |
(பொ-ரை) என்றும் உள்ளவரான திரிகூட லிங்கர்
மீது பாடப்படும் இந்தக் குறவஞ்சி நாடகத்தைப் பாட வேண்டியும், முத்தரினது
திருமேனி முழுதும் உருகும்படி தமிழ் உரைத்த அகத்திய முனிவரைப் பாடி, இவ்வுடம்பில்
உயிர் பிரிந்து இறக்கின்ற காலத்தில் சிலேட்டுமம் மிகாதபடிக்குப் பித்தன்
என்றழைக்கப்பட்ட சிவபெருமான் இரண்டு திருவடிகளையும் அடைந்த திருவாதவூரராகிய
மாணிக்கவாசகர் திருவடிகளைப் போற்றுவோமாக.
(வி-ரை) இக் கவியில் வாதவூரன் என்றதற்கு
ஏற்ப வாதத்துக்கு இனமாகிய பித்த சிலேட்டுமங்களையும் அவற்றால் வரும் பிணிகளைப்
போக்கும் அகத்திய முனிவரையும் கூறியது காண்க.
(6)
கலைமகள்
|
அடியிணை மலரும் செவ்வாய்
ஆம்பலும் சிவப்பி னாளை |
நெடியபூங் குழலு மைக்கண்
நீலமும் கறுப்பி னாளைப் |
படிவமும் புகழுழ் செங்கைப்
படிகம் போல் வெளுப்பாம் ஞானக் |
கொடிதனைத்
திருக்குற் றாலக் குறவஞ்சிக் கியம்பு வோமே. |
(பொ-ரை) இரண்டு அடிகளாகிய தாமரை மலர்களும்
சிவந்த வாயாகிய அல்லிமலரும் செந்நிற முடையவளை; நீண்ட பூவை அணிந்த கூந்தலும்,
மை தீட்டப்பெற்ற கண்களாகிய குவளை மலர்களும் கரிய நிறமுடையவளை; திருமேனியும்
புகழும் தன் சிவந்தகையிலுள்ள பளிங்குமணிபோல் வெண்ணிறமுடையவளாகிய அறிவுக்கொடி
போன்ற நாமகளைத் திருக்குற்றாலக் குறவஞ்சிக்காக வாழ்த்துவோம்.
(வி-ரை) நாமகளின் அடிகளும் வாயும் சிவப்பு; கூந்தலும்
கண்ணும் கறுப்பு; திருமேனியும் புகழும் வெளுப்பு என்று கூறிய சிறப்பு உணர்க.
ஞானக்கொடி; நாமகள். (7)
நூற்பயன்
|
சிலைபெரிய வேடனுக்கும்
நரிக்கும் வேதச் |
செல்வருக்கும்
தேவருக்கும் இரங்கிமேனாட் |
கொலைகளவு கட்காமங்
குருத்து ரோகம் |
கொடியபஞ்ச
பாதகமும் தீர்த்த தாலே |
நிலவணிவார் குற்றாலம்
நினைத்த பேர்கள் |
நினைத்தவரம்
பெறுவரது நினைக்க வேண்டிப் |
பலவளஞ்சேர் குறவஞ்சி
நாட கத்தைப் |
படிப்பவர்க்கும்
கேட்பவர்க்கும் பலனுண் டாமே. |
(பொ-ரை)
பெரிய வில்லையுடைய வேடனுக்கும், நரிக்கும் மறை ஓதுகின்ற அந்தணருக்கும்,
தேவர்கட்கும் இரங்கி அருள் கூர்ந்து கொலை, களவு, கள், காமம், ஆசிரியருக்கு
இழைத்த குற்றம் ஆகிய இக்கொடிய ஐந்துவகைப் பாவங்களையும் நீக்கியருளிய
தன்மையினாலே மூன்றாம் பிறையை யணிந்த திருக்குற்றாலநாதரின் திருக்குற்றாலத்தை
நினைத்தவர்கள், கருதிய பொருள்கள் யாவற்றையும் அடைவார்கள்; அதனால் அக்குற்றாலத்தை
எண்ணுவதற்கு நினைந்துபாடிய பலவகையான சொல்லழகு, பொருளழகு செறிந்த குறவஞ்சியென்னும்
இந் நாடகத்தைப் படிப்பவர்கட்கும் அதைக் கேட்பவர்கட்கும் நினைத்த பயன்
கிடைக்கும்.
(வி-ரை) வேடன் முதலிய நால்வர்கட்கும் பொலை முதலிய
பாவங்கள் நீக்கியருளிய வரலாறு, திருக்குற்றாலத் தல புராணத்தால் அறிக.
சிலை-வில். வேதச் செல்வர்-வேதம் ஓதுகின்ற அந்தணர்.
பலவளம்- சொல்லணி பொருளணி முதலிய நயங்கள். பலன்-பயன்; நன்மை. (8)
அவையடக்கம்
|
தாரினை விருப்ப
மாகத் தலைதனில் முடிக்குந் தோறும் |
நாரினைப் பொல்லா
தென்றே ஞாலத்தோர் தள்ளு வாரோ |
சீரிய தமிழ்மா
லைக்குட் செல்வர்குற் றாலத் தீசர் |
பேரினால்
எனது சொல்லைப் பெரியவர் தள்ளார் தாமே. |
(பொ-ரை) உலகத்திலுள்ள ஆண் பெண்கள், மலர்
மாலையைத் தம் தலைகளில் விருப்பமாக முடிக்கும்போதெல்லாம் அம் மாலையைத்
தொடுத்துள்ள வாழை நாரினை ஏற்றதன்றென்று கீழே யெறியாமல் பூவோடு சேர்த்தே
யணிவர். அது போலச் சிறந்த குற்றாலக் குறவஞ்சியென்னும் இத்தமிழ்மாலையினிடத்தே
அருட்செல்வராகிய திருக்குற்றாலநாதரின் திருப்பெயர் அமைந்துள்ளதனால்
என்னுடைய பாடல்களை அறிவினால் முதிர்ந்தவர்கள் தள்ளாமல் ஏற்றுக்கொள்வார்கள்.
(வி-ரை) தார்-மலர்மாலை. நார்-பூத்தொடுக்கும்
வாழைநார். ஞாலத்தோர் ஆண்பெண்கள்.
தள்ளுவாரோ என்பது, தள்ளமாட்டார். கொள்வார் என்னும்
எதிர்மறைப் பொருளில் ஓகாரம் வந்தது. தமிழ்மாலை-தமிழினால் ஆன மாலைபோல்வதாகிய
குற்றாலக்குறவஞ்சி; மூன்றாம்வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த
அன்மொழித் தொகை. சொல்-பாடல்; கருவியாகுபெயர்.
(9)
தற்சிறப்புப்பாயிரம்
முற்றும்
|