பக்கம் எண் :


கட்டியக்காரன் வரவு

தேர்கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத் தீசர்
பார்கொண்ட விடையில் ஏறும் பவனிஎச் சரிக்கை கூற
நேர்கொண்ட புரிநூல் மார்பும் நெடியகைப் பிரம்பும் ஆகக்
கார்கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன் வந்தான்.

(பொ-ரை) மன்மதன் தனக்குத் தேராகக் கொண்ட தென்றல் உலாவும் வீதியையுடைய திருக்குற்றால நகரில் எழுந்தருளியிருக்கின்ற அருச்செல்வராகிய சிவபெருமானவர், நிலமகளை மனைவியாகக் கொண்ட திருமாலாகிய எருது ஊர்தியில் எழுந்தருளி வருகின்ற திருவுலாவைக் குறித்துமுன்னறிவிப்புக் கூறுதற்குப் புரிகள் இணைந்த பூணூல் பொருந்திய மார்பும், நீண்ட கைப்பிரம்பும் கொண்டு கருநிறங்கொண்ட சிறந்த மேகத்தையொத்த கட்டியக்காரன் வந்தான்.


(வி-ரை) வசந்தம்-தென்றற் காற்று. வீதிகளில் தென்றல் வந்துலவுவது நகரமாந்தர்க்கு இன்பந் தருதலால் இன்பமிக்க நகரரென்பாராய், ‘வசந்தவீதி’ என நகருக்கு அடைகொடுத்தார். மன்மதனுக்குத் தேர் தென்றல் ஆதலால் ‘தேர்கொண்ட’ என்ற தொடருக்கு ஏற்ற இசையெச்சமாக மன்மதன் என்னுஞ் சொல் வருவித் துரைக்கப்பட்டது. புரிநூல்-முறுக்குதல் கொண்ட நூல்; ஈண்டுப் பூணூல், கட்டியக்காரன்-புகழ் கூறுவோன், பண்டைக்கால ஆசிரியன்மார். இவன் போன்றாரைச் சூதர் மாகதர் என்பர். (10)

இராகம்-தோடி
தாளம்-சாப்பு
கண்ணிகள்
1) பூமேவு மனுவேந்தர் தேவேந்தர் முதலோரப்
  புரந்திடுஞ்செங் கோலான பிரம்பு டையான்
2) மாமேருச் சிலையாளர் வரதர்குற் றாலநாதர்
  வாசற் கட்டியக் காரன்வந் தன்னே.

(பொ-ரை) உலகிற் பிறந்த மக்களுக்கெல்லாம் அரசர்களையும் வானுலக அரசர்கள் முதலியோரையும் காக்கின்ற நெறிமுறை கொண்டோனும் பிரம்பையுடையவனும் பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டவரும் மேலானவரும் குற்றால நகரில் எழுந்தருளியிருக்கின்ற இறைவருமாகிய திருக்குற்றாலநாதரின் திருவாசலில் இருக்கின்றவனுமான கட்டியக்காரன் வந்தான்.

(வி-ரை) மாமேருச்சிலை-பொன் மலையாகிய வில் இறைவன் முப்புரத்தை அழித்தற்கு மேருவை வில்லாகக் கொண்டாரென்பது, புராண வரலாறு. (11) (11)


திரிகூடநாதர் பவனிவருதலைக் கட்டியக்காரன் கூறுதல்

விருத்தம்

மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும்
     நன்னகர மூதூர் வீதி
வாக்கெழுந்த குறுமுனிக்கா மறியெழுந்த
     கரங்காட்டும் வள்ள லார்சீர்த்
தேக்கெழுந்த மறைநான்கும் சிலம்பெழுந்த
     பாதர்விடைச் சிலம்பில் ஏறி
மேக்கெழுந்த மதிசூடிக் கிழக்கெழுந்த
     ஞாயிறுபோல் மேவி னாரே.

(பொ-ரை) முத்தாலான மூக்குத்தியணிந்த இளமங்கையர்கள் அணிவகுத்தாற்போல் செல்கின்ற சிறந்த பழைமையாகிய திருக்குற்றாலநகரத் தெருவினிடத்தே தம் கட்டளையை மேற்கொண்டு இமயமலையை விட்டுவந்த, சிறுவடிவ அகத்தியமுனிவருக்காக மானைக் கொண்ட திருக்கையைக் காட்டியருளிய அருட்கொடையாளரும், சிறப்புமிக்க நான்கு தமிழ்மறைகளும் சிலம்பாகக் கொண்டணிந்த திருவடிகளையுடையவரும் ஆகிய திருக்குற்றாலநாதர் எருதாகிய மலைமேல் எழுந்தருளி மேல்திசையில் தோன்றும் பிறையைத் தம் (திருமுடிமேல்) அணிந்து, கீழ்த்திசைக்கண் தோன்றும் இளஞாயிறுபோல் காட்சிகொடுத்து உலா வந்தார்.


(வி-ரை)

மூக்கெழுந்த முத்து-முத்தாலான மூக்குத்தி; அதை உடையார் ஈண்டு மங்கையர், நகரின் சிறப்பும் கால முதன்மையும் தோன்ற ‘நன்னகர் மூதூர்’ என்று ஈரடை கொடுத்துரைத்தார். அகத்திய முனிவர் வடநாட்டினர். இறைவன் இமயச்செல்வியாகிய உமையம்மையை மணந்த ஞான்று தென்னாடு செல்லுமாறு பணிக்க முனிவர் திருக்குற்றாலநகருக்கு வந்தார் என்பது புராணம் கூறும் வரலாறு. அதனால், ‘வாக்கெழுந்த குறு முனிக்கா’ என்றார். மறி-மான். கரம்-கை. முனிவர் திருக்குற்றாலம் வந்தபோது குற்றாலத்தில் திருமால் கோவிலே இருந்ததெனவும், இவர் சைவ நெறியினராதலால், அங்குள்ள திருமாலடியார் இவரை ஊர்க்குள் செல்லாவாறு தடுத்தனரெனவும் அப்பால் இவர் சென்று தம் ஆற்றலால் திருமால் உருவை மாற்றி இலிங்க உரு ஆக்கினாரெனவும் திருக்குற்றாலத் தல புராணம் கூறும். இவ் வரலாற்றை விளக்க ‘குறு முனிக்கா......வள்ளலார்’ என்றார்.

இறைவன் திருவடிகளில் நான்கு வேதங்களும் ஒலித்து அவன் பெருமையைப் பேசுகின்றன என்பதை உருவகமாக்கிச் சிலம்பாகக் கூறுதல் ஆன்றோர்மரபு. இதனை, ‘எழுதரியமறைச்சிலம்பு கிடந்து புறத்தலம்ப அன்பர் இதயமென்னும், செழுமலர் ஓடையின் மலர்ந்து சிவானந்தத் தேன்ததும்பு தெய்வக் கஞ்சத், தொழுதகு சிற்றடி’ என்றார் பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்துள். அதனால் ‘மறை நான்கும்...... பாதர்’ என்றார்.

மேக்கு-மேற்குத்திசை கிழக்கு-கீழ்த்திசை. இவற்றுள் திங்களும் ஞாயிறும் தோன்றுதலால் மதிசூடி ஞாயிறுபோல் என அழகுறக் கூறினார். மலைமேல் காட்சியளிக்கும் ஞாயிறு திங்களின் இயற்கையைக் காட்டிய நயம் காண்க.

(12)

தரு. இராகம்- - பந்துவராளி
தாளம்-சாப்பு
 

பல்லவி

(1) பவனி வந்தனரே-மழவிடைப், பவனி வந்தனரே
 


அனுபல்லவி

(2) அவனி போற்றிய குறும்ப லாவுறை
     மவுன நாயகர் எவன நாயகர்
  சிவனு மாய்அரி அயனு மானவர்
     கவன மால்விடை அதனி லேறியே.  (பவனி)
 

சரணங்கள்
(3) அண்டர் கூட்டமும் முனிவர் கூட்டமும்
     அசுரர் கூட்டமும் மனிதராகிய
  தொண்டர் கூட்டமும் இமைப்பி லாரெனச்
     சூழ்ந்து தனித்தனி மயங்கவே
  பண்டை நரரிவர் தேவர் இவரெனப்
     பகுத்து நிறுவிய வேளை தொறுந்தொறும்
  மண்ட லீகரை நந்தி பிரம்படி
     மகுட கோடியிற் புடைக்கவே      (பவனி)

(4)

தடுப்ப தொருகரம் கொடுப்ப தொருகரம்
     தரித்த சுடர்மழு விரித்த-தொருகரம்
  எடுத்த சிறுமறி பிடித்த தொருகரம்
     இலங்கப் பணியணி துலங்கவே
  அடுத்த ஒருபுலி கொடுத்த சோமனும்
     ஆனை கொடுத்தவி தானச் சேலையும்
  உடுத்த திருமருங் கசைய-மலரயன்
     கொடுத்த பரிகலம் இசையவே.    (பவனி)

(5)


தொடரும் ஒருபெருச் சாளி ஏறிய
     தோன்றல் செய்ப்படை-தாங்கவே
  அடல்கு லாவிய தோகை-வாகனத்
     தரசு வேல்வலம் வாங்கவே
  படலை மார்பினிற் கொன்றை மாலிகை
     பதக்க மணியொளி தேங்கவே
  உடைய நாயகன் வரவு கண்டுகண்
     டுலகெ லாந்தழைத் தோங்கவே   (பவனி)

(6)

இடியின் முழக்கொடு படரும் முகிலென
     யானை மேற்கன பேரிமுழக்கமும்
  துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி
     துதிக்கை யாற்செவி புதைக்கவே
  அடியர் முழக்கிய திருப்ப லாண்டிசை
     அடைத்த செவிகளும் திறக்க மூவர்கள்
  வடிசெய் தமிழ்த்திரு முறைகள் ஒருபுறம்
     மறைகள் ஒருபுறம் வழங்கவே.     (பவனி)

(7)

கனக தம்புரு கின்ன ரங்களி
     ஆசை வீணை மிழற்றவே
  அனக திருமுத்தின சிவிகை கவிகைபொன்
     ஆல வட்டம் நிழற்றவே
  வனிதை மார்பல குஞ்சம் சாமரை
     வரிசை விசிறி சுழற்றவே
  தனதன் இந்திரன் வருணன் முதலிய
     சகல தேவரும் வழுத்தவே.      (பவனி)