பக்கம் எண் :

வசந்தவல்லி வருதல்

விருத்தம்


நன்னகர்ப் பெருமான் முன்போய் நாணமும் கலையுந் தோற்ற
கன்னியர் சநுப்போற் காட்டிக் காமவேள் கலகம் மூட்டிப்
பொன் அணித் திலதம் தீட்டிப் பூமலர்மாலை சூட்டி
வன்னமோ கினியைக் காட்டி வசந்தமோ கினிவந் தாளே

(பொ-ரை) நல்ல குற்றால நகரப் பெருமான் முன்பாகச் சென்று தம் நாணயத்தையும் தம் ஆடையையும் இழந்து நின்ற மங்கையர்கட்குத் தன்னை உதவி செய்பவள் போலக் காண்பித்து மன்மதனுக்குப் போர் மூளும்படி செய்து, நெற்றிக்கு மிக்க அழகுள்ள பொட்டிட்டு கூந்தலுக்கு மலர்மாலையணிந்து அழகிய மோகினிப் பெண் வடிவம் தன்னில் தோற்றமுறக் காட்டிக் கொண்டு வசந்தவல்லி யென்னும் பெயருடைய மங்கை யொருத்தி அக்கூட்டத்துள் வருவாளாயினாள்.

(வி-ரை)

கலை-ஆடை. சநு-உதவி; வடசொல். காமவேள் கலகம்-தன்னைக் கண்ட ஆடவர்கள் மனங்கலங்கிக் காதல்மூளச் செய்தல். பொன் அணி: பொன்னாலான அழகுள்ள என்றலுமாம், மோகினியைக் காட்டுதல், கண்ட ஆடவர் உயிரை வருத்தும் தெய்வப்பெண் உருவமாகத் தோற்றமளித்தல். அன்றித் திருமால், அமுதம் பகிர்ந்தளித்தபோது உருக்கொண்ட மோகினிப்பெண் உருவம் போன்ற அழகுருவாகத் தோற்றமளித்தல்.
(16)

இராகம்-கல்யாணி
தாளம்-ஆதி
கண்ணிகள்
(1) வங்காரப் பூஷணம் பூட்டித் திலதந்தீட்டி
    மாரனைக்கண் ணாலே மருட்டிச்
சிங்கார மோகனப் பெண்ணாள் வசந்தவல்லி
    தெய்வரம்பை போலவே வந்தாள்.

(2)

கண்ணுக்குத் கண்ணிணை சொல்லத் திரிகூடக்
    கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
    பேடையன்னம் போலவே வந்தாள்.
 
(3) கையாரச் சூடகம் இட்டுமின் னாரைவெல்லக்
    கண்ணிலொரு நாடக மிட்டு
ஒய்யார மாக நடந்து வசந்தவல்லி
    ஓவியம் போலவே வந்தாள்;

(4)

சல்லாப மாது லீலர் குற்றாலநாதர்
    சங்கநெடு வீதி தனிலே
உல்லாச மாது ரதிபோல் வசந்தவல்லி
    உருவசியும் நாணவே வந்தாள்.

(பொ-ரை) (1) பொன்னணி பல அணிந்து, நெற்றிக்குப் பொட்டிட்டு, மன்மதனையும் கண்ணால் மயங்கவைத்து, அழகுள்ள மோகனப் பெண்ணாகிய வசந்தவல்லியானவள் தேவலோக அரம்பைபோல வந்தாள்.

(2) தன்னைப் பார்க்கின்றவர் கண்களுக்குத் தன் இரண்டு கண்களுமே தன் சிறப்பைக்கூற, நெற்றிக்கண்ணுடைய திரிகூடராசனைத் தன் கண்களின் பார்வை யினாலே வென்று தன் வசப்படுத்த, தன்னைக் கண்ட பெண்களும் தன் அழகால் மயக்கங்கொள்ள, வசந்தவல்லியானவள், பெண்ணன்னம் போல் நடந்துவந்தாள்.

(3) தன் கைகளில் நிறையும் படி வளையல்கள் அணிந்து, தன் போன்ற இளமங்கையர்களையெல்லாம் வெற்றி கொள்வதற்குக் கண்சிமிட்டலாகிய ஒப்பற்ற நாடகத்தை நடத்தி; ஒயில் நடையாக நடந்து, வசந்தவல்லியானவள், எழுது பாவையென வந்தாள்.

(4) இன்பமொழி பேசுகின்ற குழல்வாய்மொழியம்மைக்கு இன்பஞ் செய்பவரான குற்றாலநாதர் உலாவரும் கூட்டம் மிக்க நீண்ட தெருவினிடத்தே மகிழ்ச்சிமிக்க இரதிதேவியைக் போல, வசந்தவல்லியானவள், ஊர்வசியும் தன்னைக் கண்டு வெட்கங் கொள்ள வந்தாள்.


(வி-ரை) 1-4. வங்காரம்-பொன், பூசணம்-அணி; இவை வடசொற்கள். திலதம்-பொட்டு, சிங்காரம்-அழகு; வடசொல்; சிங்காரித்தல், அழகுபடுத்தல் என்னும் பொருளில் வருவதறிக. மோகனம்-ஆசைமூட்டும் தன்மை, கண்ணுக்குக் கண்ணிணை சொல்ல என்னும் குறிப்பு மொழிக்கு தன்கண்களால் இவள் அழகுள்ளவளா என்று கருதிப் பார்ப்பவர்க்குத் தன் கண்ணின் சிறந்த பார்வைகளே நான் அழகுள்ளவள்தான் என்று அறிவிக்க என்பதாம். பேடை-பெட்டை; பெண். சூடகம்-வளையல் கண்ணில் நாடகமிடல், கண்சிமிட்டினால் பலவகையாகப்பார்வை காட்டுதல். ஒய்யாரம்-குலுக்குநடை; ஒயில். சல்லாபம்-இன்பமொழி; கேலி. லீலை-இன்பம். சங்கம்-பெருங்கூட்டம் உல்லாசம்-மகிழ்ச்சி. அரம்பை, ஊர்வசி-விண்ணுலக நடனமாதர்கள். (17)

வசந்தவல்லியினது அழகின் சிறப்பு

இராகம்-பைரவி.
தாளம்-சாப்பு
கண்ணிகள்

(1) இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு சுழிஎறியுங்
     கொண்டையாள்                       குழை
  ஏறி யாடிநெஞ்சைச் சூறை யாடும்விழிக்
     கெண்டையாள்
  திருந்து பூமுருக்கின் அரும்பு போலிருக்கும்
     இதழினாள்                            வரிச்
  சிலையைப் போல்வளைந்து பிறையைப் போல் இலங்கு
     நுதலினாள்
   
(2) அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
     புருவத்தாள்                            பிறர்
  அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப்
     பருவத்தாள்
  கரும்பு போலினித்து மருந்து போல்வடித்த
     சொல்லினாள்                         கடல்
  கத்துந் திரைகொழித்த முத்து நிரைபதித்த
     பல்லினாள்;
   
(3) பல்லின் அழகைஎட்டிப் பார்க்கு மூக்கிலொரு
     முத்தினாள் மதி
  பழகும் வடிவுதங்கி அழகு குடிகொளுமு
     கத்தினாள்
  வில்லுப் பணிபுனைந்து வல்லிக் கமுகைவென்ற
     கழுத்தினாள்                         சகம்
  விலையிட் டெழுதியின்ப நிலையிட் டெழுதுந்தொய்யில்
     எழுத்தினாள்;
   
(4) கல்லுப் பதித்ததங்கச் செல்லக் கடகம்இட்ட
     செங்கையாள்                         எங்குங்
  கச்சுக் கிடக்கினும்தித் திச்சுக்கி டம்கும்இரு
     கொங்கையாள்
  ஒல்லுங் கருத்தர்மனக் கல்லுஞ் சுழிக்கும்எழில்
     உந்தியாள்                            மீதில்
  ஒமுங்கு கொண்டுளத்தை விழுங்கு சிறியரோம்
     பந்தியாள்;
   
(5) துடிக்குள் அடங்கியொரு பிடிக்குள் அடங்குஞ்சின்ன
     இடையினாள்                         காமத்
  துட்டன் அரண்மனைக்குக் கட்டுங் கதலிவாழைத்
     தொடையினாள்
  அடுக்கு வன்னச் சேலை எடுத்து நெறிபிடித்த
     உடையினாள்                         மட
  அன்ன நடையிலொரு சின்ன நடைபயிலும்
     நடையினாள்;
   
(6) வெடித்த கடலமுதை எடுத்து வடிவுசெய்த
     மேனியாள்                           ஒரு
  வீமப் பாகம்பெற்ற காமப் பாலுக்கொத்த
     சீனியாள்
  பிடித்த சுகந்தவல்லிக் கொடிப்போல் வசந்தவல்லி
     பெருக்கமே                         சத்தி
  பீட வாசர்திரி கூட ராசர்சித்தம்
     உருக்குமே.