பக்கம் எண் :


(பொ-ரை) (1) சிவந்த கைகளின் வளையல்கள் கலீர் கலீர் என்றும் வெற்றி வெற்றியென்றும் கூறுவனபோல் ஒலித்து அசைய, இடை இனி இருப்பது ஐயமென்று கூறுவது போல் சிலம்பின் ஒலியோடு தண்டையின் ஒலியும் கலந்து தோன்ற அசைய, கொங்கைகளானவை தம் கொடிய பகையாகிய (பந்துகளை) வென்று விட்டொமென்று நெகிழ்ந்து நெகிழ்ந்து அசைய, மலர்களையுடைய பசுங்கொடிபோன்ற வசந்தவல்லி யென்னும் அழகுடையாள் பந்தடித்து விளையாடு வாளானாள்:

(2) மிக்க கனத்த காதணிகளானவை நெருங்கிய கெண்டை மீனையொத்த கண்களின்மீது புரண்டு புரண்டு ஆட்டங் கொள்ள, கூந்தலாகிய மேகத்தினின்றும் வண்டினங்கள் கலைந்து செல்லுதல் கண்டு மன்மதன் கரும்பு வில்லின் நாணான வண்டுகளும் உடன்போக, இதைப் பார்த்து இனிமேல் உலகம் என்ன பாடுபடுமோ என்பது போல் இடையானது துவண்டு துவண்டு நடுக்கங்கொள்ள செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளையொத்த மங்கைப்பருவத் தாளாகிய வசந்த வல்லியென்னும் பெயருடைய அழகுடையாள் பந்தடித்து விளையாடுவாளானாள்.

(3) சூடக வளையலணிந்துள்ள முன்னங்கைகளில் சங்கு வளையல்களும் சேர்ந்து இரண்டு தோள்வளையல்களும் மேலெழுந்தாட, அணிந்துள்ள கால்களின் கொலுசுகளுடன் சிறு தண்டைகளும் அக்கால்களிடத்தே மேலேறுவதும் கீழ்வருவதுமாகிய ஒத்த தன்மைகளைக் கெண்டு ஆட, நல்ல கூத்தாட்டங் கொள்ளும் மயிலென்னும்படி சிறந்த குற்றால நகரத் தெருவிடத்தே அழகிய பொன்கொடி போன்ற வசந்த வல்லியெனும் ஒயிலினாள் நெருங்கிப் பந்தடித்து விளையாடுவாளானாள்.

(4) இவள் திருமகளோ இரதியோ தெய்வலோக அரம்பையோ மோகினிப் பெண்ணோ என்று கண்டோர் ஐயங் கொள்ளுமாறு இவள் மனந்தான் முன்செல்கின்றதா'இவள் கண்கள்தாம் முந்துகின்றனவா'இவள் கைகள்தாம் முந்துகின்றனவா'என்று எண்ணும்படி மூன்றாம் பிறையை அணிந்தவரான சிறு பலாமரத்தடியில் எழுந்தருளியிருக்கின்ற அருட்செல்வராகிய திருக்குற்றால நாதருடைய கூட்டம் அழகு செய்கின்ற தெருவிலே பச்சை வலையலணிந்த வளாகிய வசந்தவல்லி அழகிய பந்தைக் கையிற் கொண்டு விளையாடுவாளானாள்.


(வி-ரை)

1-4 வண்டு-வளையல்; வண்டினங்கள் கலின் கலின் என்பன, வளையல்கள் அசைகின்றதால் உண்டாகும் ஒலிக்குறிப்பு. சங்கதம்-ஐயம். புலம்பு-ஒலி. பந்தையடிக்குங்கால் கொங்கைகள் குலுங்குதலைக் கொங்கைகட்கு உவமமாக வருவன பந்துகளானதால் அதைக் கீழே அடிப்பதால் தம் பகையை வென்றதற்கு மகிழ்ச்சி கொள்வதாகத் தற்குறிப்பேற்றம் ஆக்கிக் கூறினார். கெண்டை-கண்கள்; ஆகுபெயர் மங்குல்-மேகம். சூடகம்-ஒருவகைக் கைவளை. இந்திரை-திருமகள்; சுந்தரி-அழகுடையாள்; ஈண்டு இரதி. சூடர்-சூடியவர், பிறையை அணிந்த இறைவர்.
(20)

இதுவுமது

விருத்தம்
கொந்தடிப்பூங் குழல்சரிய நன்னகரில்
    வசந்தவல்லி கொடிய காமன்
முந்தடிபிந் தடிஇடைபோய் மூன்றடிநா
    லடிநடந்து முடுகி மாதர்
சந்தடியில் திருகியிட சாரிவல
    சாரிசுற்றிச் சகிமார் சூழப்
பந்தடிக்கும் பாவனையைப் பார்க்க அயன்
    ஆயிரங்கண் படைத்தி லானே,
(பொ-ரை) கொத்தினிடத்துள்ள பூக்களை முடித்த கூந்தல் அவிழ்ந்து தொங்க, நல்ல நகரத்தில்கொடிய காமனின் படையாகிய வசந்தவல்லியானவள், முன் பக்கம் பின் பக்கம் இடமெல்லாஞ்சென்று மூன்றடி நாலடியிட்டு நடந்து விரைந்து கூட்டத்தில் திரும்பி இடசாரி வலசாரியாகச் சுற்றுதல் செய்து தோழிகள் தன்னைச் சுற்றி நிற்க, பந்தடிக்கின்ற இவள் தன்மையைக் காண்பதற்கு, பிரமனானவன் நமக்கு ஆயிரங்கண்களைப் படைத்தானல்லனே (இது கண்டோர் கூறுதல்)





(21)

இதுவுமது


இராகம்-காம்போதி
தாளம்-ஆதி
பல்லவி

(1) பந்தடித்தனளேவசந்த சுந்தரி விந்தை யாகவே

அநுபல்லவி

(2) மந்தர முலைகள் ஏச லாட மகரக் குழைகள் ஊசலாடச்
  சுந்தர விழிகள் பூசல் இடத் தொங்கத் தொங்கத் தொங்கத்
                             தொம்மெனப்     (பந்)

சரணம்

(3) பொன்னின் ஒளியில் வந்து தாவிய மின்னின் ஒளிபோலவே
  சொல்நயத்தினை நாடிநாடித் தோழியருடன் கூடிக்கூடி
நன்ன கர்த்ரி கூடம் பாடி நகுர்தத் திகுர்தத்
                          தகுர்தத் தொம் மனப்    (பந்)

(பொ-ரை) (1) வசந்த சுந்தரி கண்டவர் வியப்புறப் பந்தடித்தனள்;

(2) மந்தரமலை போன்ற கொங்கைகள் பழிமொழிக்கு இடமாகவும், காதணிகள் ஊஞ்சலாடவும் (போக்குவரவு செய்யவும்) அழகிய கண்கள் கலகஞ் செய்யவும் தொங்கத் தொங்கத் தொங்கத்தொம் என்னும் ஓசையெழும்படி பந்தடித்தனள்;

(3) பொன்னின் ஓளியில் வந்து தாவிய மின்னின் ஒளி போலச் சொல்லினிமையை நாடி நாடிக் கொண்டு தோழியருடன் கூடிக், கூடி, நல்ல நகராகிய திரிகூடம்பாடி நகுர்தத் திகுர்தத் தகுர்தத் தொம் என்னும் தாள ஒசை உண்டாகும்படி பந்தடித்தனள்;









(22)