பக்கம் எண் :


வசந்தவல்லி, உலாவருகின்ற திரிகூடநாதரைக் காணுதல்

விருத்தம்

வருசங்க வீதி தன்னில் வசந்தபூங் கோதை காலில்
இருபந்து குதிகொண் டாட இருபந்து முலைகொண் டாட
ஒருபந்து கைகொண் டாட ஒருசெப்பில் ஐந்து பந்தும்
தெரிகொண்டு வித்தை ஆடுஞ் சித்தரை யெதிர்கண் டாளே.
(பொ-ரை) சங்க வீதியில் வரும் வசந்த வல்லியின் குதிகால்களாகிய இரண்டு பந்துகளும் தாவித்தாவி ஆடவும், இருபந்துகள் போன்ற கொங்கைகள் குதித்துத் குதித்து அசைந்தாடவும், தன் ஒருகையில் ஒரு பந்தைக் கொண்டு ஆடவும், ஒரே ஒரு மாயையாகிய சிமிழின் உள்ளே தொடர்புடையனவாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பனவாகிய பந்துகள் ஐந்தினையும் தெரிந்துகொண்டு, மேற்கூறிய செப்பினுள்ளே மறைத்தும் வெளிப்படுத்தியும் அரியபெரிய திருவிளையாடலாகிய சித்துச் செய்யும் குற்றால நாதரை எதிர் கண்டாள்.

(வி-ரை)

கொந்தடி பூ-பூங்கொத்தின் இடத்திலுள்ள மலர். பிந்தடி-பிற்பக்கம். முடகி-விரைந்து. சந்தடியில்திருகி -கூட்டத்தில் திரும்பி. பாவனை-அலங்காரம். ஏசல்-பழிமொழி. ஊசலாட-போக்கு வரவு செய்ய. ஒரு செப்பில்-ஒன்றாகிய மாயை என்கிற செப்பினுள்ளே, நிலம், நீர், தீ, காற்று, வானம் என்னும் ஐந்து உருண்டை வடிவினவாய்ப் பந்து போல்வதாக இருத்தலின், பந்து என்றார். பந்து-ஒன்றுக்கொன்று இனமான என்றலுமாம்.
(23)

வசந்தவல்லி வியந்து கூறுதல்

இராகம்-அடாணா
தாளம்-ரூபகம்

(1) இந்தச் சித்தர் ஆரோ வெகு
  விந்தைக் கார ராக விடையி லேறி வந்தார்  (இந்தச்)

அனுபல்லவி

(2) நாகம் புயத்திற் கட்டி நஞ்சு கழுத்திற் கட்டிக்
  காகமணுகாமல் எங்குங் காடு கட்டிப்
  பாகந் தனிலொரு பெண் பச்சைக் கிளிபோல்வைத்து,
  மோகம் பெறவொ ருபெண் முடியில்வைத்தார்;  (இந்தச்)
   
(3) மெய்யிற் சிவப்பழகும் கையில் மழுவழகும்
  மையார் விழியார் கண்டால் மயங்காரோ
  செய்ய சடையின் மேலேதிங்கட் கொழுந்திருக்கப்
  பையை விரிக்கு தம்மா பாம்புசும்மா ;         (இந்தச்)
   
(4) அருட்கண் பார்வை யாலென் அங்கந் தங்கமாக
  உருக்கிப் போட்டார் கண்ட உடனேதான்
  பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக்குற் றாலர்போலே
  இருக்கு திவர்செய் மாயம் ஒருக்காலே. (இந்தச்)

(பொ-ரை)

(1) வெகுவேடிக்கைக்காரராக எருது ஊர்தியின்மீது ஏறிவந்த இந்தச் சித்தர் ஆரோ?)

(2) பாம்பைத் தோள்களில் அணிந்தும் நஞ்சக்கறையைக் கழுத்தில் கொண்டும் குறிக்கப்பட்ட இடத்தில் காகங்கள் கூடத் தம்பால் வராமல் தடை செய்தும், இடப்பக்கத்தில் பச்சைகிளி்போல் உமையம்மையை வைத்தும், விருப்பமுண்டாகக் கங்கையாகிய பெண்ணைச் சடைமுடியில் வைத்தும், உள்ளனர் (இந்தச் சித்தர் ஆரோ?)

(3) உடம்பின் சிவப்பழகையும், வலக்கையில் மழுப்படையினது அழகையும் மைதீட்டப் பெற்ற கண்களையுடைய மாதர்கள் பார்த்தால் மயக்கமடைய மாட்டாரோ? சிவந்த சடைமுடியின்மேல் மூன்றாம் பிறை இருத்தலினால், கூட இருக்கும் பாம்பானது அம்மவோ! (அதை விழுங்கக் கருதி) அடிக்கடி தன்படத்தை விரிக்கின்றதே! (இந்தச் சித்தர் ஆரோ?)

(4) அருளையுடைய தம் கண்களின் பார்வையினாலே என் உடல் எங்கும் பொன்னிறங் கொள்ள உருக்கி விட்டார்; இவர் மேம்பாட்டை எண்ணினால் பார்த்தவுடனே, இவர் செய்கின்ற மாயச் செயல்களினாலே இவர் திருக்குற்றாலநாதராகவே இருப்பார் போலும்! (இந்தச் சித்தர் ஆரோ?)


(வி-ரை) 1 - 4 விடையில் - எருதின். காடுகட்டி - குறித்த இடத்தில் விலங்கு பறவைகள் கூட வராமல் தடை செய்து. பாகப்பெண்-குழல்வாய் மொழியம்மை. முடிப்பெண்-கங்கைத. பை-படம். அங்கம்-உடல். சும்மா-அடிக்கடி (24)