பக்கம் எண் :


தோழியார், திருக்குற்றாலநாதர் புகழைக் கூறக் கேட்டு
வசந்தவல்லி காதல் கொள்ளுதல்

விருத்தம்
  திங்களை முடித்தார் கண்டாய் திரிகூடச் செல்வர் கண்டாய்
   எங்குள சித்துக் கெல்லாம் இறையவர் இவரே என்று
   நங்கைமார் பலரும் கூறும் நன்மொழித் தேறல் மாந்தி
   மங்கையாம் வசந்தவல்லி மனங்கொண்டாள் மயல்கொண் டாளே.

(பொ-ரை) இளம்பிறையைச் சடையில் முடித்திருப்பதைப் பார்; அதனால் இவரே திரிகூடநாதர் ஆவர்; அறிவாயாக; எல்லாவகைச் சித்து (மாய வித்தை)களுக்கும் இவரே தலைவர் என்று பெண்கள் பலரும் சொல்கின்ற நல்ல சொல்லாகிய தேனைப் பருகி மங்கையான வசந்தவல்லி விரும்பிய மயக்கங் கொண்டவளானாள்.



(25)

இதுவுமது

இராகம்-புன்னாகவரதளி.
தாளம்-ரூபகம்

கண்ணிகள்
(1) முனிபரவும் இனியானோ-வேத
 
   முழுப்பலவின் கனிதானோ
  கனியில்வைத்த செந்தேனோ-பெண்கள்
     கருத்துருக்க வந்தானோ
  தினகரன்போற் சிவப்பழகும்-அவன்
     திருமிடற்றிற் கறுப்பழகும்
  பனகமணி இருகாதும்-கண்டால்
     பாவையுந்தான் உருகாதோ;

(2)

வாகனைக்கண் டுருகுதையோ-ஒரு
     மயக்கமதாய் வருகுதையோ
  மோகமென்ப திதுதானோ-இதை
     முன்னமேநான் அறிவேனோ
  ஆகமெல்லாம் பசந்தேனே-பெற்ற
     அன்னைசொல்லும் கசந்தேனே
  தாகமன்றிப் பூணேனே-கையில்
     சரிவளையும் காணேனே.

(பொ-ரை) (1) அகத்தியமுனிவர் வணங்குகின்ற இனியவனோ இவன். வேதமாகிய முழுப்பலாமரத்தின் பழமோ இவன். அப்பழத்திற்பொருந்திய செந்தேனோ இவன். பெண்களின் நெஞ்சை இளக்குதற்கு வந்தவனோ, ஞாயிறுபோற் சிவந்த நிற அழகும் அவன் அழகிய கழுத்தினிடத்துள்ள கறுப்பழகும், இரண்டு காதுகளிலும் அணிந்த பாம்பாகிய காதணியும் பார்த்தால், உயிரற்ற பாவைகூட (பாவை போல்வாளும்) உருக மாட்டாதோ?

(2) அழகனைப் பார்த்து மனம் இளகுகின்றதையோ, ஐயோ, ஒருவித மயக்கமாக வருகின்றதே! மோகம் என்பது இதுதானோ; இதை நான் முன்னரே அறியேனே! உடம்பு முழுதும் பசலை நிறம் கொண்டேனே! பெற்ற தாய்சொல்லையும் கசப்பது போல் வெறுத்தேனே! இவர்பால் ஆசையன்றி மற்றெதுவும் என்பால் இல்லையே! என் கைகளில் அணிந்து வந்த வளையல்களையும் காண்கின்றேனல்லேனே! (பறிபோய்விட்டனவே,)












(26)