பக்கம் எண் :



வசந்தவல்லி நிலைமைகண்டு தோழிமார் புலம்பல்

விருத்தம்


  நடை கண்டால் அன்னந் தோற்கும்
       நன்னகர் வசந்த வல்லி
  விடை கொண்டான் எதிர்போய்ச் சங்க
       வீதியிற் சங்கம் தோற்றாள்
  சடைகொண்டான் உடைதான் கொண்டு
       தன்னுடை கொடுத்தாள் ஐயன்
  உடைகொண்ட வழக்குத் தானோ
       ஊர்கின்ற தேர்கொண் டாளே.

(பொ-ரை) தன் நடையைப் பார்த்தால் அன்னங்களும் நடையால் தோற்றுப் போகுந் தன்மைவாய்ந்த நடையுடைய வசந்தவல்லியானவள், நல்ல குற்றாலநகரச் சங்கவீதியி்ல் இடபவாகனத்தில் எழுந்தருளி வரும் குற்றாலநாதரை நேரே போய்க் கண்டதும் தன் கையில் அணிந்துள்ள சங்கு வளையல்களைப் பறிகொடுத்தாள்; சடை முடியையுடைய திரிகூடநாதரின் உடையாகிய திகம்பரத் தன்மையை (நிர்வாணத்தை) த் தான் பெற்றுக் கொண்டு, தான் உடுத்த உடையைக் கொடுத்தாள்; (ஆடைஉரிந்து விழ நின்றாள்) அவர் தன் ஆடையைக் கவர்ந்த வழக்கை உணர்த்துதற்கோ அவர் செல்கின்ற தேராகிய நிலத்தைக் கைப்பற்றலானாள்.




(வி-ரை)

காம வேட்கையால் ஆடை அவிழ்ந்து போய்க் கீழே விழுந்துவிட்டபடியால் நாணத்தால் மானத்தைக் காப்பாற்றும் பொருட்டுப் பூமியிற் குப்புற விழுந்தாள் என்பது குறிப்பு. நன்மொழித் தேறல் மாந்தி-இனிய சொல்லாகிய தேனை உண்டு. கனி-பழம், மிடறு-கழுத்து. பன்னகம்-பாம்பு. தினரகன்-ஞாயிறு. வாகன்-அழகுடையவன். பசத்தல்-நிறம், வேறுபடுதல். சங்கம்-சங்கு வளையல். சடைகொண்டான். உடை-திகம்பரம்; நிர்வாணம், ஊர்கின்ற தேர்-நடத்துகின்ற இரதமாகிய பூமி. இச் செய்யுளில் வேட்கையால் உடை அவிழ்ந்து போய் விட்ட படியால் நாணத்தால் மானத்தைக் காப்பாற்றும் பொருட்டுப் பூமியில் குப்புற விழுந்த நிலையை இவ்வாறு அழகுறக் குறிப்பு மொழியாற் கூறினார்.

இறைவன் முப்புரத்தை எரிப்பதற்கு, பூமியைத் தேராகவும் மேரு மலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் நான்முகனைத் தேர்ப்பாகனாகவும், நான்கு மறைகளையும் நான்கு குதிரைகளாகவும் பூட்டிக் கொண்டு ஊர்ந்து சென்றானென்பது புராணக்கதை. இதனை உட்கொண்டு இங்கு, நிலத்தில் அவள் விழுந்ததை ‘ஊர்கின்ற தேர் கொண்டாளே’ என்றார்.
(27)

இதுவுமது

இராகம்-தோடி
தாளம்-சாப்பு
கண்ணிகள்

(1) ஆசைகொண்டு பாரில்வீழ்ந்தாள் நேசமான் என்பார் விளை
  யாடாள் பாடாள் வாடாமாலை சூடாள்காண் என்பார்
  பேசிடாத மோசம்என்ன மோசமோ என்பார் காமப்
  பேயோஎன்பார் பிச்சோஎன்பார் மாயமோ என்பார்;

(2)

ஐயோஎன்ன செய்வமென்பார் தெய்வமே யென்பார் களைப்
  பாச்சோஎன்பார் மூச்சேதென்பார் பேச்சே தோவென்
  கையில்திரு நீறெடுப்பார் தையலார் எல்லாஞ் சூலக் பார்
  கையாதிரி கூடநாதா கண்பாராய் என்பார்.

 

(பொ-ரை) (1) இந்நிலையைக் கண்டவர்கள், அன்புடைய வசந்தவல்லியானவள் ஆசையால் பூமியில் விழுந்தாள் என்பார்கள்; விளையாடாள், பாடமாட்டாள், மணிக் கற்கள் பதித்த சங்கிலிகளை அணியாள் என்பார்கள்; வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கும் மோசம் (கெடுதி) என்ன கெடுதியோ என்பார்கள்; காமமாகிய பேய் பிடித்ததோ என்பார்கள்; அல்லது பைத்தியங் கொண்டாளோ என்பார்கள்; இது மயக்கும் வித்தையோ என்பார்கள்.

(2) ஐயோ என்ன செய்வோம் என்பார்கள்; தெய்வமே என்பார்கள்; சோர்வானதோ என்பார்கள்; மூச்சு இருக்கின்றதோ என்பார்கள்; பேச்சும் இருக்கின்றதோ என்பார்கள் கையில் திருநீறு எடுத்துக் கொண்டு மாதர்கள் யாவரும் சூலத்தைக் கொண்ட கையையுடையவரே! திரிகூட நாதரே! இவட்குக் கண்பார்த்து அருள் புரிந்திடுக என்பார்கள்.

1-2 வாடாமாலை-இரத்தினாபரணம். பிச்சோ-பித்தோ த-ச ஒற்றுமைப் போலி. களைப்பு - சோர்வு














(28)