பக்கம் எண் :


(பொ-ரை) (1) மன்மதனே! உன் கையில் இருக்கின்ற கரும்புவில் எதற்காக? மலர்க்கணைகள் எதற்காக? நீ தான் எதற்காக? இந்தச் செவ்வானமும் பாவியான நிலவுமே போதாவா? (துன்பந்தருதற்கு) மையிட்டகரிய கண்களையுடைய இரதியின் மேல் மயக்கங்கொண்ட மன்மதனே! எருது ஊர்தி செலுத்த வல்லவராகிய திருக்குற்றால நாதர்மேல் காதல் கொண்டால் உனக்கு அதனால் என்னிடம் பொல்லாங்கு ஏதேனும் உண்டோ மன்மதா!

(2) மன்மதனே! எல்லாத் திக்கிலும் தென்றற் காற்றாகிய புலி வந்து என்னைப் பாய்கின்றதே மன்மதனே! குயில் என்னும் எக்காளம் ஊதியபின் எனக்கு உணவு ஏற்கமாட்டாதே? என் அக்காளாகிய தோழி வெட்கமில்லாமல் பழிப்பாளே மன்மதா! அன்றி என் தாயும் பொல்லாத நீலியன்றோ?

(3) மன்மதனே! பெண்களையும் ஊரில் உள்ள மற்றவர்களையும் நீ பாரடா! அவர்கள் பொருட்டாவது எனக்கு இரக்கம் செய்; தூக்கமும் எனக்குப் பகையாகப் போய்விட்டதே! ஏ பையா! கடலாகிய முரசம் இருக்கும் போது எக்காளம் எதற்கு! என் போன்ற இளம் பெண்கள் மீது போர்செய்து வீர ஆண்மகன் என்னும் பெயர் பெற முடியுமா?

(4) மன்மதனே! நீ குற்றால நாதரின் நீண்ட சடையாகக் கருதுவது இஃதன்று; எனது கரிய கூந்தல் சடைப் பின்னல் என்பதை அறி; நெற்றியிடத்து விளங்குவது (அவரின்) நெற்றிக் கண்ணன்று; (நான்) அணிந்துள்ள சிந்துரப் பொட்டுத்தான் பார். மன்மதனே! எங்கள் நல்ல நகரில் எழுந்தருளியிருக்கின்ற மங்கை பங்கராகிய திருக்குற்றால நாதர் முன்பாக (உன்போரை நடத்துதற்குச்) செல்லுவாயாக.










(வி-ரை)

1-4 மவுலி-சடை. நன்னகர்-நல்ல ஊர். கேதனம் -கொடி. என்ன-எதற்காக. செக்கர்-செவ்வானம். மால்-மயக்கம்; ஆசை. சகி-தோழி. நேரிழையார்-பெண்கள். பேரிகை-கடலாகிய முரசு. பூரிகை-ஊதுகொம்பு; எக்காளம். வார்-நீண்ட, சிந்தூரரேகை-சிந்தூரப் பொட்டு.


(34)

வசந்தவல்லியைப் பாங்கி வினாவுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

படியே ழுடையார் திரிகூடப் படைமா மதனைப் பயிற்றியசொல்
அடியேன் சகியா யிருக்கையிலே அதுநான் பயின்றால் ஆகாதோ
கொடியே மதுரம் பழுத்தொழுகு கொம்பே வம்பு பொருதமுலைப்
பிடியே எமது குடிக்கொருபெண் பிள்ளாய் கருத்து விள்ளாயே.

(பொ-ரை) கொடிபோன்றவளே! இனிமை முதிர்ந்து ஒழுகுகின்ற கொம்பு போன்றவளே! கச்சினால் இறுக்கப்பெற்ற கொங்கைகளையுடைய பெண்யானை போன்றவளே! எமது குடிக்கு ஒரே ஒரு பெண்ணாகப் பிறந்த அருமையுடையவளே! ஏழுஉலகமும் உடைய திரிகூடநாதரின் திரிகூடநகரில் சேனையையுடைய மன்மதனைப் பழக்குவிக்கும் சொற்களை எளியேனாகிய நான் தோழியாக இருக்கும் போது (நீ சொல்ல) அதை நான் கற்றுக் கொண்டால் ஆகாதோ?






(வி-ரை)

படி ஏழு-ஏழு உலகம். பயிற்றிய சொல்-படிப்பித்த மொழி. சகி-தோழி. பொருத-மோதிய. விள்ளுவாய்-சொல்லுவாய்.

(35)

வசந்தவல்லி, பாங்கிக்குச் சொல்லுதல்

இராகம்-கல்யாணி
தாளம்-சாப்பு
கண்ணிகள்

(1) மெய்யர்க்கு மெய்யர் திரிகூடநாயகர் மீதில் மெத்த
  மையல்கொண் டேனந்தச் செய்தியைக் கேளாய்நீ பாங்கி
  செய்ய சடையும் திருக்கொன்றை மாலை அழகும் அவர்
  கையில் மழுவுமென் கண்ணைவிட் டேஅகலாவே;

(2)

கங்கைக் கொழுந்தணி தெய்வக் கொழுந்தைநான் கண்டு குளி்ர்
  திங்கட் கொழுந்தையும் தீக்கொழுந் தாக்கிக் கொண்டேனே
  சங்கக் குழையாரைச் சங்க மறுகினிற் கண்டுஇரு
  செங்கைக்குள் சங்கமுஞ் சிந்தி மறுகிவிட் டேனே;

(3)

மன்றற் குழவி மதியம் புனைந்தாரைக் கண்டு சிறு
  தென்றற் குளவி தினங்கொட்டக் கொட்ட நொந் தேனே
  குன்றச் சிலையாளர் குற்றால நாதர்முன் போனேன் மதன்
  வென்றிச் சிலைகொடு மெல்லமெல் லப்பொரு தானே;

(4)

பெம்மானை நன்னகர்ப் பேராச வீதியிற் கண்டுஅவர்
  கைம்மானைக் கண்டு கலையை நெகிழவிட் டேனே
  செம்மேனி தன்னிற் சிறுகறுப் பாரைநான் கண்டுஇப்போ
  தம்மாஎன் மேனி அடங்கலு மேகறுத்தேனே.

(5)

வெள்ளி விடையில் வியாளம் புனைந்தாரைக் கண்டுசிந்தை
  நள்ளிய திங்களை ஞாயிறு போலக்கண் டேனே
  எள்ளள வூணும் உறக்கமும் இல்லாரைக் கண்டு நானும்
  ஒள்ளிய ஊணும் உறக்கமும் அற்றுவிட் டேனே.

(பொ-ரை) (1) தோழி: உண்மையானவருக்கு உண்மை யானவரும் திரிகூடமலை நாதருமாகிய தலைவரிடத்தில் மிகுந்த ஆசைகொண்டேன். அந்தச் செய்தியைக் கேட்பாயாக; அவருடைய செஞ்சடையும் அதன் கண் சூடியுள்ள அழகிய கொன்றை மலர்மாலையின் அழகும் அவர்கையில் கொண்டிருக்கின்ற பரசுப்படையும் என் கண்களை விட்டு நீங்காதனவா யிருக்கின்றனவே!

(2) சிறந்த கங்கையைத் தரித்திருக்கின்ற தெய்வங்களுக்கெல்லாம் உயர்ந்த பொருளை, நான் பார்த்துக் குளிர்ச்சி பொருந்திய மூன்றாம் பிறையையும் கொடியநெருப்புச் சுடராக ஆக்கிக் கொண்டேனே! சங்க குண்டலம் அணிந்தவரைச் சங்க வீதியிலே கண்டு செம்மையான இரண்டு கைகளிலும் அணிந்திருந்த சங்கவளையல்களையும் சிதற விட்டுக் கலங்கி விட்டேனே.

(3) மணம் பொருந்தி இளம் பிறையைச் சூடியவரைப் பார்த்ததால் சிறிய தென்றலாகிய குளவியானது நாள்தோறும் வந்து என்னைத் தீண்டத் தீண்ட வருந்தலானேனே! மேருமலையை வில்லாகக் கொண்டவராகிய திருக்குற்றாலநாதரிடம் நேரில் சென்றேன்; அவ்வளவில் மன்மதன் தன் வெற்றி பொருந்திய கரும்புவில்லைக் கொண்டுவந்து சிறிது சிறிதாகப் போர் தொடங்கினானே!

(4) நல்ல திருக்குற்றால நகரத்தினது பெரிய அரச வீதியில் குற்றாலநாதரைப் பார்த்து அவர் கையிலுள்ள கலைமானைக் கண்டவுடன் என் ஆடையை நெகிழவிட்டேனே! அவருடைய செம்பவழ மேனியிடத்துச் சிறு கறுப்புடையவரைக் கண்டு இப்போழுது என் உடல் முழுவதும் கருநிறங் கொண்டேனே!

(5) வெண்ணிறம் பொருந்திய எருதூர்தியின் மீது ஏறி வரும் பாம்பணிந்திருக்கின்ற திருக்குற்றாலநாதரைக் கண்டு மனம் விரும்பிய மூன்றாம்பிறையை ஞாயிற்றினைப் போல வெப்ப முள்ளதாகக் காணலானேனே! சிறிதளவுங்கூட உணவும் உறக்கமும் இல்லாதவரைப் பார்த்து நானும் (உடலுக்குச்) சிறந்தன வான உணவு உண்பதையும் தூங்குதலையும் இழந்துவிட்டேனே.






(வி-ரை)

1-5 தெய்வக் கொழுந்து- தெய்வங்களுக்கெல்லாம் தலைமையாய் உள்ளவன். தீக் கொழுந்து-கொடிய பெருநெருப்புச் சுடர். குழவி - இளமை. குளவி - குளவி யென்னும் ஒருவகை வண்டு. பொருதான் - போர்செய்தான். வியாளம் - பாம்பு.




(36)