பக்கம் எண் :

பாங்கி, வசந்தவல்லிக்குப் புத்தி கூறல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நன்னகர்த் திருக்குற் றால
   நாதர்மேல ஆசைபூண்டு
சொன்னவர்க் கிணங்க வார்த்தை
   சொல்லவும் படித்துக் கொண்டாய்
சன்னிதி விசேடஞ் சொல்லத்
   தக்கதோ மிக்க தோகாய்
என்னில்லா னதுநான் சொன்னேன
   இனிஉன திச்சை தானே.
(பொ-ரை)

சிறந்த மயில் போன்றவளே! திருக்குற்றால நாதர்மீது ஆசைகொண்டு நீ அங்ஙனம் ஆசையுற்றது குற்றம் என்று கூறியவர்களுக்குப் பொருத்தமாக விடையும் சொல்லக் கற்றுக் கொண்டாய்; குற்றாலநாதரின் திருமுன்பின் சிறப்பைச் சொல்வதற்கு முடியுமோ? என்னால் சொல்லக்கூடியதைச் சொன்னேன்; இனி உன் விருப்பப்படி நடந்துகொள்.






(வி.ரை)

சொன்னவர்க்கு-நீ மயல் கொண்டது குற்றமென்று சொன்னவர்க்கு. தோகாய்-மயில் போன்றபெண்ணே.

(42)


வசந்தவல்லி, பாங்கியைத் திருக்குற்றாலநாதர் முன் தூதுனுப்புதல்

இராகம்-காம்போதி.
தாளம்-ஆதி
பல்லவி
(1) தூதுநீ சொல்லி வாராய் பெண்ணே குற்றாலர் முன்போய்த்
தூதுநீ சொல்லி வாராய்;
அனுபல்லவி
(2) ஆதிநாட் சுந்தரர்க்குத்தூதுபோ னவர்முன்னே;              (தூதுநீ)
சரணங்கள்
(3) உறங்க உறக்கமும் வாராது மாயஞ் செய்தாரை
  மறந்தால் மறக்கவுங் கூடாது பெண்சென்மம் என்று
  பிறந்தாலும் பேராசை ஆகா தஃதறிந்துஞ்
  சலுகைக் காரர்க் காசை யானேன் இப்போது                (தூதுநீ)
(4) நேற்றைக்கெல் லாங்குளிர்ந்து காட்டி இன்றுகொதிக்கும்
  நித்திரா பாவிக்கென்ன போட்டி நடுவே இந்தக்
  காற்றுக்கு வந்ததொரு கோட்டி விரக நோய்க்கு
  மாற்றுமருந்து முக்கண் மருந்தென்று பரஞ்சாட்டி             (தூதுநீ)
(5) வந்தால்இந் நேரம்வரச் சொல்லு வரா திருந்தால்
  மாலையா கிலுந்தரச் சொல்லு குற்றாலநாதர்
  தந்தாலென் நெஞ்சைத்தரச் சொல்லு தராதி ருந்தால்
  தான்பெண் ணாகியபெண்ணை நான்விடேன் என்று
சொல்லு.    (தூதுநீ)                 

(பொ-ரை)

(1) தூது நீ சொல்லிவருவாய்; திருக்குற்றால நாதர் திருமுன் சென்று தூது நீ சொல்லி வருவாய் பெண்ணே!

(2) முற்காலத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டுப் பரவைநாச்சியாரிடம் தூது சென்றவர் முன்னே சென்று, (தூது நீ சொல்லிவா).

(3) தூங்கினால் தூக்கமும் வருகிறதில்லை; வஞ்சனைசெய்தவரை மறந்து விடக்கருதினாலும் மறக்கவும் முடியவில்லை; பெண்ணாகப் பிறந்தாலும் காதலாகிய பேராசை கூடாது; அதை அறிந்திருந்தும் பெருமையுடைய திருகூடநாதரிடத்தில் ஆசை கொள்ளலானேன் (தூதுநீ சொல்லிவா).

(4) நேற்று முழுமையும் குளிர்ச்சி காண்பித்து இன்றைக்கு உறக்கத்தின் நடுவில் சுடுகின்ற உறக்கமாகிய பாவிக்கு என்மேல் என்ன பகையோ? இதற்கிடையில் இந்தத் தென்றற் காற்றுக்கு ஒரு குணக்கேடு வந்துள்ளதே! காமநோய்க்கு மாற்று மருந்து குற்றால நாதருடைய முக்கண் பார்வையாகிய அமுதமே என்று பொறுப்புக்காட்டி (தூதுநீ சொல்லிவா)

(5) குற்றாநாதர் வருவதானால் இப்பொழுதேவரச் சொல்லு. வாராமல் இருந்தால் அவர் கொன்றைப் பூமாலையையாவது கொடுக்கச் சொல்லு; அங்ஙனம் தராமற் போனால் தான் ஆணாயிருந்தும் மோகினி வடிவுகொண்ட அத் திரிகூடநாதரின் மனைவியாகிய திருமாலை (ஆசையை) விடேன் என்று சொல்லி, (தூதுநீ சொல்லிவா).






(வி.ரை)

1-5 சுந்தரர் - சுந்தரமூர்த்திநாயனார். சலுகைக்காரர்க்கு- பெருமையுடைய திரிகூட நாதரிடத்து. நித்திரா பாவி - உறக்கமாகிய பாவி. கோட்டி - குணக்கேடு. முக்கண் மருந்து - மூன்று கண்ணின் பார்வையாகிய அமுதம். பரஞ்சாட்டி - பொறுப்புக்கட்டி.



(43)
வசந்தவல்லி திரிகூடநாதர் சமயத்தைப்
பாங்கிக்குச் சொல்லுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  செவ்வேளை ஈன்றருள்வார் சிலைவேளை
      வென்றருள்வார் திரும்பத் தாமே
  அவ்வேளை அழைத்தருள்வார் அகங்கார
      மிகுதலால் அறவர் ஏவும்
  கைவேழம் உரித்தவர்குற் றாலர்கொலு
      அமரருக்குங் காணொ ணாதால்
  வெவ்வேளை பலவுமுண்டு வியல்வேளை
      நான்சொலக்கேள் மின்ன னாளே.
(பொ-ரை)

மின்னற்கொடி போன்றவளே! முருகக் கடவுளைத் தந்தருளியவரும் கரும்புவில்லையுடைய மன்மதனை வென்றவரும் மீண்டும் அம்மன்மதனை உயிர் பெற்றெழச்செய்து அழைத்துவரும், செருக்கு மிகுதிப்படுதலால் தாருகாவன முனிவர்களால் கொல்வதற்கு விடப்பட்ட கையையுடைய யானையைக் கொன்று அதனை உரித்தவரும் ஆகிய திருக்குற்றால நாதர் கொலுச்சிறப்புத் தேவர்களுக்கும் கூடக் காண்பதற்கு அரியது; அக்கொலுவைக் காணவியலாத நேரங்கள்பலவுள்ளன. ஆனாலும் பார்க்கத் தக்க சிறந்த நேரத்தை நான் கூறுவேன்; நீ கேட்பாயாக.






(வி.ரை)

செவ்வேள் - முருகப்பெருமான். அகங்காரம் - செருக்கு. சிலைவேள் - மன்மதன். அறவன் - தாருகாவனத்து முனிவர். கை வேழம் - தும்பிக்கையுடைய யானை. கொலு - அத்தாணி மண்டபம். அமரர் - தேவர். வெவ்வேளை -காண இயலா நேரம்; காலம். வியல்வேளை - சிறந்த நேரம்; கூட்டமில்லாத சமயம்.




(44)