பக்கம் எண் :

இராகம்-பியாகடை,
தாளம்-ஆதி
கண்ணிகள்

(1) திரிகூட ராசருக்குத் திருவனந்தல் முதலாகத்
தினமும்ஒன் பதுகாலங் கொலுவிற் சகியே!
(2) பெரிதான அபிடேகம் ஏழுகா லமும்ஒருவர்
பேசுதற்குச் சமயமல்ல சண்மாய சகியே!
(3) வருநாளி லொருமூன்று திருநாளும் வசந்தனும்
மாதவழி வருடவழிச் சிறப்பும் சகியே!
(4) ஒருநாளுக் கொருநாளில் வியனாகக் குழல்மொழிப்பெண்
உகந்திருக்குங் கொலுவேளை கண்டாய் சகியே!
(5) பெத்தரிக்கம் மிகுந்திருக் குற்றால நாதலிங்கர்
பெருங்கொலுவிற் சமயம்அறி யாமற் சகியே!
(6) சித்தரொடு தேவகணம் சிவகணங்கள் தடைசெய்யத்
திருவாசற் கடைநிற்பார் சிலபேர் சகியே!
(7) அத்தலையில் கடந்தவர்கள் நந்திபிரம் படிக்கொதுங்கி
ஆட்கொண்டார் குறட்டில் நிற்பார் சிலபேர் சகியே!
(8) மைக்கருங்கண் மாதர்விட்ட வண்டுகளும் கிள்ளைகளும்
வாசல்தொறும் காத்திருக்குங் கண்டாய் சகியே!
(9) கோலமகு டாகமசங் கரவிசுவ நாதனருள்
குற்றாலச் சிவராம நம்பிசெயுஞ் சகியே!
(10) பாலாறு நெய்யாறாய் அபிடேக நைவேத்தியம்
பணிமாறு காலமுங்கொண் டருளிச் சகியே!
(11) நாலுமறைப் பழம்பாட்டும் மூவர்சொன்ன திருப்பாட்டும்
நாலுகவிப் புலவர்புதுப் பாட்டுஞ் சகியே!
(12) நீலகண்டர் குற்றாலர் கொண்டருளும் நிறைகொலுவில்
நீக்கமிலை எல்லார்க்கும் பொதுக்காண் சகியே!
(13) குற்றாலர் தேவியுடன் கொலுஇருப்பர்!
ஆசைசொலக் சுடாது கண்டாய் சகியே!
(14) முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார் வந்து நின்று
முயற்சிசெயுந் திருவனந்தல் கூடிச்சகியே!
(15) கொப்பழகு குழைமடந்தை பள்ளியறை தனிலிருந்து
கோயில்புகும் ஏகாந்த சமயம் சகியே!
(16) மைப்பழகு விழியாய்என் பெருமாலை நீசொல்லி
மருமாலை வாங்கியே வாராய் சகியே!

(பொ-ரை)

(1) தோழி! நாள்தோறும் திரிகூட நாதருக்குப் திருவனந்தல் முதல் ஏகாந்தம் வரை ஒன்பது கால வழிபாடு உண்டு.

(2) தோழி! சிறந்த ஏழு திருமுழுக்கு (அபிடேக)க் காலத்திலும் எவர் ஒருவரும் கண்டு பேசுவதற்குக் கிட்டாத காலமாகும்.

(3) தோழி! வருகின்ற திருநாட்களுள் பங்குனி புரட்டாசி மார்கழித்திங்கள் திருவாதிரைத் திருவிழா என்ற மூன்று திருவிழாக்களுடன் சித்திரைமாதம் வசந்த உற்சவமும், மாத வழிச்சிறப்பாகப் பிரதோடம் அமாவாசை பௌர்ணமிகளும் வருட வழிச் சிறப்பாகக் கார்த்திகை மாதம் பௌத்திர உற்சவமும் ஆடிமாதம் சோதியும், சித்திரைச் சதயமும், புரட்டாசி நவராத்திரியும் வைகாசி மூலம் விசாகமும் தைப் பூசம் முதலியனவும் சிறந்த நாட்களாம்.

(4) தோழி! நாளுக்குநாள் குழல்வாய் மொழி அம்மை மிகுதியாக மகிழ்ந்து கொலுவீற்றிருக்குங் காலமாகும்.

(5) தோழி! செருக்குமிக்க திருக்குற்றால நாதலிங்கர் பெருங்கொலுவில் காலத்தை நோக்காமல்.

(6) தோழி! சித்தர்கள் தேவர்கள் சிவகணங்கள் இவர்கள் திருவாசலில் நின்று உள்ளே நுழைவதற்கு விடாமல் தடை செய்து கொண்டிப்பச் சிலர் வெளியிலேயே காத்திருப்பர்.

(7) தோழி! ஒருகால் அவ்வாயிலைக் கடந்து போனவர்களுன் சிலபேர்கள் திருநந்திதேவர் பிரம்படிக்கு அஞ்சி அவர் இருப்பிடத்திற்குப் பக்கத்தில் ஆட்கொண்டார் குறட்டில் ஒதுங்கி நிற்பார்கள்.

(8) தோழி! மைதீட்டிய கரிய கண்களையுடைய இளமங்கையர்(தம் காதலைக் கூறுதற்குத்) தூதாக அனுப்பிய வண்டுகளும் கிளிகளும் வாயில்தோறும் காத்த வண்ணமாகவே இருப்பனவாகும். (9) தோழி! குற்றாலத்துச் சங்கர விசுவநாதன் மகனாராகிய சிவராமநம்பியென்னும் குருக்கள், சிறந்த சைவாகமம் ஆகிய மகுடாகம முறைப்படி சடங்குகள் செய்வர்.

(10) தோழி! பாலானது ஆறாகப் பெருகியோடவும், நெய்யானது ஆறாகப் பெருகியோடவும் திருமுழுக்கு மிகச் செய்தபின்பு நைவேத்தியம் பணிமாறும் காலத்தையும் ஏற்றுக் கொண்டருளி,

(11) நான்கு வேதங்களாகிய பழைய பாடல்களும்; திருஞானசம்பந்தர் முதலிய மூவர் பாடியருளிய தேவாரமும்; ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற நான்கு கவிகளைச் செய்கின்ற புலவர்களது புதுப்பாடல்களும்.

(12) திருநீலகண்டராகிய திருக்குற்றால நாதர் ஏற்றுக் கொண்டருளி நிறைந்திருக்கும் திருக்கொலுவில் இன்னவர்செல்லலாம் இன்னவர் செல்லலாகாது என்று தடை ஒன்றும் இல்லை; யாவரும் போகலாம்.

(13) தோழி! அப்பொழுது திருக்குற்றால நாதர் தம்தேவியாகிய குழல்வாய்மொழி அம்மையாருடன் கொலுவீற்றிருப்பர்; அப்பொழுது நம் விருப்பமாகிய குறைகளை எடுத்துரைக்கக் கூடாது.

(14) தோழி! காலை, உச்சி மாலையாகிய மூன்று காலத்தும் திருக்குற்றால நாதர் திருவுருவாகிய இலிங்க வடிவத்தைத் தொட்டுப் பணி புரிகின்றவரான ஆதிசைவக் குருக்கண்மார் வந்து நின்று பணிபுரிகின்ற திருவனந்தல் (பள்ளி எழுச்சி) முதலாக.

(15) கொப்பணி யணிந்த அழகுடன் காதணியின் அழகுங்கொண்ட குழல்வாய்மொழியம்மையினது பள்ளியறை வரை திருக்குற்றாலநாதர் கோவிலுக்குள் செல்கின்ற தனி நேரமாகும்.

(16) மைதீட்டிய கண்களையுடைய தோழி! நீ எனது மிக்க காதலை அவரிடம் அதுகாலை எடுத்துக்கூறி மணம் பொருந்திய அவரின் கொன்றைமாலையை வாங்கி வருவாயாக! (இஃதே என் வேண்டுதல்)






(வி.ரை)

1-16 வியனாக-மிகுதியாக. பெத்தரிக்கம்-செருக்கு; வீறு. ஆட்கொண்டார் குறடு-திருநந்திதேவர் இருப்பிடத்திற்குப் பக்கத்தில் உள்ள பீடம். மகுடாகமம்-சிவாகமம் இருபத்தெட்டில் ஒன்று. நம்பி-குருக்கள்: வழிபாடு செய்வோர். பணிமாறும் காலம்-திருமுழுக்கு, திருவமுதை மாறிமாறிச் செய்யுங்காலம். மரு-மணம். பெருமாலை-ஆசையை. மருமாலை-கொன்றைமாலை.



(45)
வசந்தவல்லி கூடலிழைத்தல்

கொச்சகக் கலிப்பா


  தெண்ணீர் வடஅருவித் தீர்த்தத்தார் செஞ்சடைமேல்
  விண்ணீர் புனைந்தார் விரகவெம்மைக் காற்றாமல்
  கண்ணீர் நறும்புனலாக் கைவளையே செய்கரையா
  உண்ணீரிற் கூட லுறைக்கிணறு செய்வாளே

(பொ-ரை)

தெளிந்த நீரையுடைய வடபாலுள்ள அருவியாகி தீர்த்தத்தை உடையவரும் தம் சிவந்தசடைமுடி மீது வானக் கங்கையைத் தரித்துள்ளவருமான திருக்குற்றாலநாதர் மேற்கொண்ட காதலாகிய வெப்பத்தைப் பொறுக்கமாட்டாது வசந்தவல்லியானவள் தன் கண்ணினின் றொழுகும் நீரே நல்ல நீராகவும்; தன் கைவளையல்களே செய்யப்பட்ட கரையாகவும் கொண்டு உள்ளே இருக்கும் காமக் குணத்தால் கூடலாகிய உறைகிணற்றைக் கட்டுவாளாயினாள்.

 
(வி.ரை)

கூடல் இழைத்தலாவது காதல் கொண்ட பெண்கள் பூமியில் மணலைப்பரப்பிக் கண்களை மூடிக்கொண்டு தம்முடைய நான்கு விரல்களையும் மடக்கிச் சுட்டுவிரலால் வட்டமாகக் கீறி, கீறும்போது ஊன்றிய இடத்தில் சுட்டுவிரல் நுனி வந்து பொருந்தியதா என்று பார்த்தல், அங்ஙனம் பொருந்துவது நாயகன் வருவான் என்பதற்கும் பொருந்தாதது நாயகன் வரமாட்டான் என்பதற்கும் அறிந்து கொள்ளும் குறி. உறைக்கிணறு-உறை அடுக்கி வட்டமாகக் கட்டப்பட்ட கிணறு, இங்கே வசந்தவல்லி செய்த உறைக்கிணறோ மணலில் வட்டமாகக் கீறும்போது கைவளைல்கள் ஒன்றின்மேல் ஒன்று வீழ்ந்து கரையாக, அக்கரை நடுவே கண்ணீர் வீழ்ந்து நல்ல தண்ணீராகப் பெருகும்படி செய்யப் பெற்றது. உண் நீர்-உண்ணுகின்ற நீர்; உள் நீர் தன்நெஞ்சினுள் இருக்கும் காதற்குணம் என இருபொருள் நயத்தோன்ற நின்றது. ஆற்றாமல்-பொறுக்க மாட்டாமல். விரகவெம்மை-வேட்கைக் கொடுமை.











(46)

சிந்து
இராகம்-பந்துவராளி
தாளம்-திரிபுடை
கண்ணிகள்
(1) பாடியமறை தேடியநாயகர்
      பன்னகர்பணி நன்னகர்நாயகர்
  பாவலர்மனுக் காவலர்நாயகர்
      பதஞ்சலி பணிதாளர்
  கோடியமதி சூடியநாயகர்
      சூழல்மொழிபுணர் அழகியநாயகர்
  குறும்ப லாவினிற் கூடுவர்
      ஆமெனிற் கூடலேநீ கூடாய்

(2) கஞ்சனைமுகில் மஞ்சனை நொடித்தவர்
      காமனைச்சிறு சோமனை முடித்தவர்
  காரணமறை ஆரணம் படித்தவர்
      கருதிய பெருமானார்
  குஞ்சரமுதற் பூசித்தநாயகர்
      குறுமுனிதமிழ் நேசித்தநாயகர்
  குறும்ப லாவினிற் கூடுவர்
      ஆமெனிற் கூடலே நீகூடாய்.
(பொ-ரை)

(1) பாடப்பெற்ற வேதங்கள் தேடிய தலைவர் கீழுலகத்தாராகிய நாகர்கள் வணங்குகின்ற நல்ல திருக்குற்றால நாதர்; புலவர்; மனுமுறையால் ஆள்கின்ற அரசருக்குத்தலைவர்; பதஞ்சலி முனிவர் வழிபடுகின்ற திருவடியுடையவர்; கூனற் பிறையைச் சூடியிருக்கின்ற தலைவர்; குழல்வாய் மொழியம்மை சேருகின்ற அழகிய தலைவர்; அவர் குறும்பலாவினிடத்தே என்னை அணைவாரானால் கூடற்குறியே நீ ஒன்று சேர்வாயாக.

(2) நான்முகனையும் மேகம்போலக் கருநிறமுடைய திருமாலையும் தம்மைத்தேடி இளைக்கச் செய்தவர்; மன்மதனை அழித்தவர்; மூன்றாம் பிறையைச் சடைக்கண் முடித்தவர்; நன்மைக்கெல்லாம் காரணமாக இருக்கின்ற மறைகளை அருளிச் செய்தவர்; என்னால் காதல் கொள்ளப்பெற்ற பெருமைமிக்கவர்; யானை முதலிய விலங்குகளும் பறவைகளும் வழிபட்ட நாயகர்; குறுமுனிவராகிய அகத்திய முனிவர் தமிழை விரும்பிய தலைவர்; குறும்பலாவினிடத்தே என்னை அணைவாரானால் கூடற்குறியே நீ கூடுவாயாக .

 

(வி.ரை)


1-2 பன்னகர்-நாகர். காவலர்-அரசர். கூடலே-கூடற்குறியே கூடாய் ஒன்று சேருவாய். கஞ்சன்-தாமரை மலரில் இருக்கும் நான்முகன். முகில் மஞ்சன்-மேகம் போன்ற கருநிறடைய திருமால். நொடித்தவர்-மெலிய (இளைக்க)ச் செய்தவர். சோமன்-மூன்றாம் பிறை. மறை-ஆரணம். மறையாகி மேகம் வேதம்; ஒருபொருட் பன்மொழி. குஞ்சரம்-யானை, குறுமுனி-அகத்தியர்.

(47)