பக்கம் எண் :


குறிசொல்லும் குறத்தி வருதல்


அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆடல்வளை வீதியிலே அங்கணர்முன்
   போட்டசங்கம் அரங்கு வீட்டில்
தேடல்வளைக் குங்குறிபோற் கூடல்வளைத்
   திருந்துவல்லி தியங்கும் போதிற்
கூடல்வளைக் கரம் அசைய மாத்திரைக்கோல்
   ஏந்திமணிக் கூடை தாங்கி
மாடமறு கூடுதிரி கூடமலைக்
   குறவஞ்சி வருகின் றாளே.

(பொ-ரை) வெற்றி பொருந்திய சங்கவீதியில் அழகிய நெற்றிக் கண்ணையுடைய திருக்குற்றாலநாதர் திருமுன்பாகக் கீழே நழுவவிட்ட சங்கவளையல்கள் அவ்வரங்கு மனையில் தேடுவதற்காக வளைவு செய்யப்படும் அடையாளம் போல், கூடற்குறியை வட்டமாகச் செய்து; வசந்தவல்லி மயங்குகின்ற போது ஒன்றுசேர்ந்த வளையல்களையுடைய தன் கைகள் அசையவும், மாத்திரைக்கோலை ஏந்திக்கொண்டு அழகுள்ள கூடையையும் எடுத்துக்கொண்டு மாளிகைகளையுடைய திருக்குற்றால நகரின் நடுவிலே திரிகூடமலைக் குறத்தி வருவாளாயினாள்.


(வி-ரை) ஆடல் வளைவீதி-வெற்றி பொருந்திய சங்கவீதி. மறுகு ஊடு-வீதியின் நடுவே. அல்லது உள்வீதி என்றலுமாம். (48)

இதுவுமது

நிலைமண்டில ஆசிரியப்பா


  வைசமுத் திரையை வானின்மேல் தரிக்குந்
தெய்வமுத் தலைசேர் திரிகூட மலையான்
வான்புனல் குதட்டும் மடக்குரு கினுக்குத்
தேன்புரை ஏறுஞ் சித்திரா நதியான்

(5)

ஏரிநீர் செழிக்க வாரிநீர் கொழிக்கும்
மாரிநீர் வளர்தென் ஆரிய நாட்டான்
கன்னிமாப் பழுத்துக் கதலிதேன் கொழித்துச்
செந்நெல்காத் தளிக்கும் நல்நகர் பதியான்
ஓரா யிரமறை ஓங்கிய பரியான்

(10)

ஈரா யிரமருப் பேந்திய யானையான்
சேவக விருது செயவிடைக் கொடியான்
மூவகை முரசு முழங்குமண்ட பத்தான்
அண்டகோ டிகளை ஆணையா லடக்கிக்
கொண்டல்போற் கவிக்குங் கொற்றவெண் குடையான்

(15)

வாலசுந் தரிகுழல் வாய்மொழி அருட்கண்
கோலவண் டிணங்குங் கொன்றைமா லிகையான்
பூவளர் செண்பகக் காவளர் தம்பிரான்
தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி
இலகுநீ றணிந்து திலகமும் எழுதிக்

(20)

குலமணிப் பாசியும் குன்றியும் புனைந்து
சலவைசேர் மருங்கிற் சாத்திய கூடையும் .
வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலும்
மொழிக்கொரு பசப்பும் முலைக்கொரு குலுக்கும்
விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டுமாய்

(25)

உருவசி அரம்பை கருவமும் அடங்க
முறுவலின் குறும்பால் முனிவரும் அடங்கச்
சமனிக்கும் உரையாற் சபையெல்லாம் அடங்கக்
கமனிக்கு மவரும் கடைக்கணால் அடங்க
கொட்டிய உடுக்குகோ டாங்கிக் குறிமுதல்

(30)

மட்டிலாக் குறிகளும் கட்டினால் அடக்கிக்
கொங்கணம் ஆரியங் குச்சலர் தேசமும்
செங்கைமாத் திரைக்கோற் செங்கோல் நடாத்திக்
கன்னடம் தெலுங்கு கலிங்காரச் சியமும்
தென்னவர் தமிழாற் செயத்தம்பம் நாட்டி

(35)

மன்னவர் தமக்கு வலதுகை நோக்கி
இன்னகை மடவார்க் கிடதுகை பார்த்துக்
காலமுன் போங்குறி கைப்பல னாங்குறி
மேல்இனி வருங்குறி வேண்டுவோர் மனக்குறி
மெய்க்குறி கைக்குறி விழிக்குறி மொழிக்குறி

(40)

எக்குறி யாயினும் இமைப்பினில் உரைக்கும்
மைக்குறி விழிக்குற வஞ்சிவந் தனளே.

(பொ-ரை) வைசமுத்திரையாகிய சூலக்குறியை வான் மீது தரித்திருகின்ற தெய்வத்தன்மை பொருந்திய மூன்று உச்சிகள் சேர்ந்திருக்கின்ற திரிகூட மலையையுடையவன்; வான நீரைப்பருகிப் பருகி உமிழ்கின்ற இளநாரைக்கு தேன்கலந்த நீரை உண்டு புரையேறச் செய்கின்ற சித்திராநதிக்குரியவன்; ஏரியிலுள்ள நீர் செழிப்படைய வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும்படி மழைநீர் பொழிந்து வருகின்ற தென்னந் தமிழ் நாட்டுக்கு உரியவன்; இளமாமரம் பழுத்துக் கனிந்த சாறு வழிந்தும் வாழைக்கனியின் தேன் பெருகியும் செந்நெலைவளர்த்து விளைவுமல்கு திருக்குற்றால நகருக்குரியான்; ஆயிரம் சாகைகள் கொண்டமறைக் குதிரைக்கு உரியான்; இரண்டாயிரம் கொம்புகளையுடைய அயிராவணம் என்னும் யானையை உடையான்; வீரவிருதாகிய வெற்றியையுடைய எருதுக் கொடியையுடையான்; படை கொடை மணமென்னும் மூவகை முரசுகளும் முழங்குகின்ற திருமண்டபத்தையுடையான்; எல்லா உலகங்களையும் தன் அருளாகிய ஆணை உருளையால் அடக்கி மேகம் போல் கவிந்திருக்கின்ற வெண்கொற்றக் குடையையுடையான்; இளவழகியாகிய குழல்வாய்மொழி யம்மையினது அருளையுடைய கண்ணாகிய அழகிய வண்டுகள் மொய்க்கின்ற கொன்றைமாலையையுடையான்; பூக்களையுடைய செண்பகச் சோலையில்தங்கியிருக்கின்ற இத்தகைய திரிகூட நாதராகிய தேவர்கள் தலைவரின் திருவருளைப் பாடிக்கொண்டு, விளங்குகின்ற திருநீற்றை நெற்றியில் அணிந்து பொட்டும் இட்டுச் சிறந்த பாசிமணிமாலையும் குன்றிமணி மாலையும் அணிந்து, வெண்ணிற ஆடைபொருந்திய இடுப்பில் தாங்கியிருக்கின்ற கூடையும், வலது கையில் பிடித்திருக்கின்ற (குறிசொல்லும்) மாத்திரைக் கோலும், பேச்சுக்குப் பசப்புமொழிநயமும், ஒரு கொங்கைக்கு ஒரு கொங்கையின் குலுக்கும், கண்ணுக்குக் கண் ஒரு சிமிட்டும், வெளிக்கு ஒரு பகட்டுமாய், உருப்பசி அரம்பை இவர்களின் செருக்கு அடங்கவும், தன் புன்சிரிப்பின் கொடுமையால் முனிவர்களும் மயங்கவும் சமப்படுத்திப் பேசும் பேச்சால் சபையெல்லாம் ஒடுங்கவும், வான் வழியாகச் செல்லும் சித்தர்களும் தன் கடைக்கண் பார்வையால் அடங்கிவிடவும், கொட்டப்படும் உடுக்கு துடி கோடாங்கி முதலிய அளவற்ற குறிகளும், தன் மந்திரக் கட்டுப்பாட்டால் (பில்லி பேய் முதலியன) அடங்கவும் கொங்கணம் ஆரியம் குச்சலர் நாடுகளிலும் சென்றேறிச் செம்மையான தன் கையிலுள்ள மாத்திரைக்கோலாலே செங்கோல் செலுத்தியும் கன்னடம் கலிங்க நாடுகளிலும், பாண்டியர் வளர்த்த தமிழ்மொழி ஒன்று கொண்டே வெற்றித்தூண் நாட்டியும், ஆண்களுக்கு அவர்கள் வலதுகை பார்த்தும் இனிய பற்களையுடைய பெண்களுக்கு அவர்கள் இடதுகை பார்த்தும் சென்ற காலத்தின்குறி, தற்போது கைப்பலனாகும் (உடனே பலிக்கும்) குறி. அதற்குமேல் வருபவற்றைக் குறிக்கும் குறி, கேட்கின்றவர்கள் மனத்தில் எண்ணியவற்றைக் கூறும் குறி, உடற்குறி, கைக்குறி, விழிக்குறி, சொற்குறி இவற்றில் எந்தக் குறியான போதிலும் ஒரு நொடிப்பொழுதில் சொல்லுகின்ற மைதீட்டிய கண்களையுடைய குறவஞ்சியானவள் (வசந்த வல்லிக்கு முன்) வந்தாள்.


(வி-ரை) சைவமுத்திரை-சூலக்குறி. மடக்குருகு-இளநாரை. வாரி-வெள்ளம். கொழிக்கும்-பெருகும்; கொட்டும். மாரிநீர்-மேகத்தின் நீர். மறைப்பரி-வேதக்குதிரை. கவிக்கும் உள்ளடக்கிக் காக்கும். திலகமும் எழுதி-பொட்டு இட்டு. சலவை-வெண்ணிற ஆடை. கமனித்தல்-போதல். பசப்பு-நயம். கட்டு-மந்திரத்தால் கட்டுப்படுத்தல். தென்னவர்-பாண்டியர். தமிழால்-தமிழ்மொழியினாலேயே; வேறு மொழி வழங்கும் நாடுகளிலும்கூட, மன்னவர்-அரசர், இங்கே தம் வீட்டுக்கு அரசர்களாகிய ஆண்மக்களைக் குறித்தது. செயத் தம்பம்-வெற்றித்தூண். மைக்குறி-மைதீட்டியகண். இதில் தலைவருக்குரிய மலை முதலிய உறுப்புகள் பத்தும் வந்துள்ளன காண்க. (49)