பக்கம் எண் :


(பொ.ரை) (1) வீரம்பொருந்திய மாமரத்தில் இருக்கின்ற குயிலாகிய எக்காளம் ஊதிகள், காமத்தின் அரசனாகிய மன்மதன் வந்தான், வந்தான் என்று கூவவும், முத்துமாலை யணிந்த பெரிய கொங்கைகளையுடைய மின்போன்ற மங்கையர்கள் தத்தம் அல்குல்களாகிய தேர்களை ஒப்பனை செய்யவும் (மேகலாபரணம் பருமம் முதலிய அணிகளை அணிந்து சிறப்புச் செய்யவும்) பாரமான பெரிய திங்களாகிய வெண் கொற்றக் குடை மேல்நின்று விளக்கஞ் செய்யவும், பறந்து செல்கின்ற கிளிகளாகிய குதிரைகள் கொஞ்சிப் பேசவும், தென்றல் தேரில் மன்மதனாகிய வசந்தன் உலாவுகின்ற திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்றதான தென்பால் உள்ள சிறந்த நாடே எங்கள் நாடாகும்.

(2) மேகத்தை ஒத்த கருமை பொருந்திய கூந்தலையுடைய பெண்களுக்கு வெட்கப்பட்டுக் கடல் நீரை மொண்டு கொண்டெழுந்த கருநிறமேகங்கள் கச்சு அணிந்த கொங்கைகளை ஒத்த மலையின் மேலிடத்தை அடைந்து வானவில்லை வளைத்து, நீரைப் பொருந்திய மழைத்தாரைகளென்னும் அம்புகளுடன் நீண்டுசெல்கின்ற கீழக்காற்றாகிய அழகிய தேரின் மீதேறி, ஞாயிற்றின் தேரைச்சுற்றிக் கார்காலமாக மாற்றி, முதுவேனிற் பருவத்தை வெல்லும் சிறப்புடைய திருக்குற்றால நாதருக்குரிய தென்பால் உள்ள சிறந்த நாடே எங்கள் நாடாகும்.

(3) எருமைமாடுகள் கூட்டமாக இறங்குகின்ற நீர்த்துறையிடத்தே தம் கன்றை நினைத்துக்கொட்டிய பாலைக்குடித்த வாளைமீன்கள் குட்டையாகவுள்ள மணம் பொருந்திய பலாமரத்தின் மேலேறிப்பாய, அதனால் உதிர்ந்த செழிப்புள்ள பலாப்பழம் வாழையின்மேல்விழ, வாழைமரங்கள் ஒடிந்துசெழித்த தாழையைமோத அதுவந்த விருந்தினர்க்கு முகமன்றிகூறிவிருந்து செய்கின்றவர்கள் போலத் தன்மடல் விரிந்து வெள்ளிய தன் மகரந்தத்தோடு கூடிய பூக்களைச் சோறுபோல் கீழே சொரிய வாழைகள் அச்சோற்றுக்கு இலைபோடுவார் போலத் தன் இளங்குருத்து இலைகளை நீட்டுகின்ற இளம்பிறையை யணிந்த திருக்குற்றாலநாதருக்குரிய தென்பாலுள்ள சிறந்த இந்நாடே எங்கள் நாடாகும்.

(4) ஆண் மக்களானவர் அழகு கொண்ட இளமங்கையர்களின் சொற்களை இகழ்ந்ததென்று கருதிப் புதைப்பவர்கள் போல்வயல்களில் நட்டுவைக்கும் கரும்புகள், செழித்து வளர்ச்சி கொண்டு அப்பெண்களின் தோள்களைத் தம் இயற்கைத் தனமையால் வெற்றிக்கொண்டு ஒளிவிட்டெறிக்கின்ற முத்துக்களைத் தந்து அப்பாலும் அம் மகளிரின் பற்களை வென்று அப்பெண்களை விட்டு ஆடவர் பிரிந்துபோன காலங்களில் பெண் தன்மைகளை வெல்வதற்காக மன்மதனுக்கு வில்லாக வளர்கின்ற செழிப்புமிக்குள்ள திருக்குற்றால நாதருக்குரிய தென்பாலுள்ள சிறந்த இந்நாடே எங்கள் நாடாகும்;

(5) சிறந்த இம்மண்ணுலகுக்கு முன்தோன்றிய நாடு இதுவே'எல்லாத் தேவர்கட்கும் அன்பைத் தருகின்ற நாடும் இதுவே; எட்டுத் திசைகளிலும் சிறப்பால் மேம்பட்ட நாடும் இதுவே; கடவுளுக்குப் பிழைசெய்யாது நீங்கிய நாடும் இதுவே; இறைவன் அறுபத்துநான்கு திருவிளையாடல் முதலியன புரிந்த நாடும் இதுவே; பழமையான நான்கு வேதங்களாலும் புகழப்பட்ட நாடும் இதுவே; குழல்வாய் மொழியம்மையைத் தம் இடப்பாகத்திற் கொண்ட திருக்குற்றாலநாதருக்குரிய தென்றற்காற்றுலாவுகின்ற இனிமைமிக்க இந்நாடே எங்கள் நாடாகும்.

(6) அகத்தியரானவர், ஐந்நூறு வேள்விகள் செய்தற்கிடனாகக் கொண்ட நாடும் இதுவே; எண்ணிறந்த பல ஊழிக் காலங்களைக் கண்ட முதிய நாடும் இதுவே; தாமரை மலரில் தோன்றிய நான்முகன் பிறந்த நாடும் இதுவே; செவ்விய தமிழ் மொழிக்குரிய அகத்திய மாமுனி வந்த நாடும் இதுவே; திருமகளும் கலைமகளும் வணங்குகின்ற நாடும் இதுவே; சிவந்த கண்களையுடைய திருமாலும் சிவபெருமானாக மாறிய நாடும் இதுவே; உமையொரு பாகராகிய திரிகூடப் பெருமானுக்குரிய தென்றற் காற்றுலாவுகின்ற இன்பமிக்க இந்நாடே எங்கள் நாடாகும்;

(7) மாதந் தோறும் மூன்றுமழை தவறாது பெய்கின்ற நாடும் இதுவே; ஆண்டுக்கு முப்போகமும் விளைகின்ற நாடும் இதுவே; மறைகளையே தன் வேர் கவடுஇலைகளாகக் கொண்டு நிலைத்துநிற்கின்ற குறும்பலா மரத்தையுடைய நாடும் இதுவே. நித்தியம், நைமித்திகம், காமியம் ஆகிய மூவகை வழிபாடுகள் தவறாமல் நடக்கின்ற மெய்யறிவு நிலைகொண்டு அதனால் நன்மைகள் செய்கின்ற நாடும் இதுவே; மேல்கீழ் நடு என்னும் மூவகை உலகங்களும் வலமாகச் சுற்றி வணங்குகின்ற நாடும் இதுவே; நாததத்துவப் பொருளாய், நான்முகன் திருமாள் அரனென மூவருவுமான திருக்குற்றால நாதருக்குரிய இனிய இந்நாடே எங்கள் நாடாகும்;

(8) இந்நாட்டில் வந்து அடைந்தவர்கள் தம்மிடமிருந்து போகும்படி காணக்கிடப்பன பாவங்களே. (வேறு எவரும் இதை விட்டுப் போவார் இல்லை) இந்நாட்டில் நெருக்கமாகக் காணப்படுவன (இடைஞ்சல் பட்டிருப்பது) கரும்புகளோடு சேர்ந்த செந்நெற் பயிர்களே; (வேறு எவருக்கும் யாராலும் நெருக்கடி இல்லை) தொங்கிக் கொண்டிருப்பதாகக் குறையால் வருந்துவது காணக்கிடப்பன மாம்பழக் கொத்துகளே; சுழன்று வரக்காணக் கிடப்பன வேலையின்றித் திண்டாடுவது சுவையுள்ள தயிர்கடைகின்றமத்துகளே! பெரிதாகக் காணக்கிடப்பவனவீக்கம் பெற்றிருப்பது இளம்மங்கையர்களின் கொங்கைகளே; மலர்ந்து காணக்கிடப்பன பிளந்து கிடப்பது முல்லைநிலத்தில் தோன்றும் முல்லை யரும்புகளே; முழக்கங் கொள்ளக் கிடப்பன புலம்பி வருந்துவது மங்கல முரசங்களே; இத்தகைய தன்மையுடையதான அருட் செல்வராகிய திருக்குற்றால நாதருக்குரிய இனிய இந்நாடே எங்கள் நாடாகும்.

(9) இந்நாட்டைவிட்டுச் செல்வதாகக் காணக்கிடப்பது பூக்களைச் சுமந்துவரும் நீரையுடைய புது வெள்ளமே. (வேறு எவரும் இந் நாட்டை விட்டுச் செல்பவர் இல்லை) அடக்கம் பெற்றதாகக் காணக்கிடப்பன யோகஞ் செய்வாருடைய மனங்களே (இந்நாட்டில் எவரும் அடங்கிக் கிடப்பவர் இல்லை) மெலிவடைவதாகக் காணக்கிடப்பன இள மங்கையர்களின் இடைகளே; (இந்நாட்டில் யாரும் மெலிந்திருப்பவர் இல்லை) துன்பப்படுவதாகக் காணக்கிடப்பன கருவுற்று அதனால் முத்துகளை ஈன வருந்துகின்ற சங்குகளே; (இந்நாட்டில் நோயாலும் பிறவற்றாலும் வருத்தமடைவோர்கள் இல்லை) (நிலத்தில் விதையாக விதைத்துப்) போடுவதாகக் காணக் கிடப்பன நெல் முதலிய விதைகளே; (இந்நாட்டில் பயனில்லாதவர் இவரென ஒதுக்கத் தக்கவர் ஒருவருமில்லை) கணீர் கணீர் என ஒலி செய்வதாகக் காணக்கிடப்பன பெண்களின் காலணிகளாகிய சதங்கைத்திரள்களே (இந்நாட்டில் தம் குறைகளைநினைந்து புலம்புவோர் ஒருவரும் இல்லை) ஈட்ட (சம்பாதிக்க) முற்படுவதாகக் காணக் கிடப்பன நல்ல அறங்களும் அதனால்வரும் புகழுமே; (இந்நாட்டில் பணமும் வேறு பொருள்களும் ஈட்டுவார் எவரும் இல்லை; செல்வமெல்லாம் செறிந்துள்ளவர்களே இங்குள்ளார்) இத்தகைய திருக்குற்றால நாதருக்குதரிய தென்பால் உள்ள இன்பமிக்க இந்நாடே எங்கள் நாடாகும்.






(வி-ரை)

ஆரம் - முத்துமாலை. கிள்ளைப்பரி-கிளியாகிய குதிரை வசந்தன்-மன்மதன். கொண்டல்-மேகம். மேதி-எருமை. தாக்க-மோத, மூரல்-பல். கன்னல்-கரும்பு; கல்+நல்=கற்கின்ற நல்ல. மகம்-யாகம்; வேள்வி. கஞ்சயோனி-திருமாலின் கொப்பூழ்த் தாமரையில் தோன்றிய பிரமன். குலாவு-விளங்குதல். விசேடம் மூன்று-நித்தியம், நைமித்திகம், காமியம் நாதம்-சிவதத்துவம். மூன்று உரு-பிரமா, திருமால், உருத்திரன். மருங்கு-இடை. சூல்-கருப்பம். கிண்கிணிக்கொத்து-சதங்கைக்கூட்டம். அறம்கீர்த்தி-தருமமும் புகழும்; உம்மைத் தொகையாகக் கெள்க.

(56)


குறத்தி வசந்தவல்லிக்குத் தலமகிமை கூறுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நாட்டு வளம்


அரிகூட அயன்கூட மறைகூடத் தினந்தேட அரிதாய் நின்ற
திரிகூட பதிஇருக்குந் திருநாட்டு வளமுரைக்கத் தெவிட்டா தம்மே
கரிகூடப் பிடிதிரியுஞ் சாரலிலே ஒருவேடன் கையில் ஏந்தி
நரிகூடக் கயிலைசென்ற திரிகூடத் தலமகிமை நவிலக் கேளே.

(பொ-ரை) திருமால்கூட-பிரமன்கூட வேதங்கள்கூட ஒவ்வொரு நாளும் தேடியும் காண்பதற்கு அரியராய் நின்ற திருக்குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கின்ற சிறப்புள்ள நாட்டின் வளப்பத்தைச் சொன்னால் அதைக் கேட்கக்கேட்க இன்பமாகத் தோன்றுவதன்று வெறுப்புத் தோன்றாது அம்மே! ஆண் யானையுடன் பெண்யானைகள் திரிகின்ற மலையடிவாரத்திலே ஒரு வேடனானவன் கையில் வில்லைத் தாங்கிக் கொண்டு நரியைத் துரத்தியவாறே திருக்கைலை மலையைச் சேர்ந்து வீடுபெறுதற்கு காரணமான திரிகூடத்தலத்தின் சிறப்பைச் சொல்வேன், நீ கேட்பாயாக.



(வி-ரை)

அரி-திருமால். தெவிட்டாது-போதுமென்று சொல்லமுடியாது; வெறுப்பாகாது. பிடி-பெண்யானை. நவில-சொல்ல.

(57)

இராகம் - பிலகரி
தாளம் - சம்பை.
கண்ணிகள்

(1) ஞானிகளும் அறியார்கள் சித்ரநதி மூலம்
    நானறிந்த வகைசிறிது பேசகேள் அம்மே
மேன்மைபெறுந் திரிகூடத் தேனருவித் துறைக்கே
    மேவுமொரு சிவலிங்கந் தேவரக சியமாய்
ஆனதுறை அயனுரைத்த தானம்அறி யாமல்
    அருந்தவத்துக் காய்த்தேடித் திரிந்தலையுங் காலம்
மோனவா னவர்க்கெங்கள் கானவர்கள் காட்டும்
    முதுகங்கை ஆறுசிவ மதுகங்கை ஆறே;

(2)

சிவமதுகங் கையின்மகிமை புவனமெங்கும் புகழுஞ்
    செண்பகா டவித்துறையின் பண்புசொல்லக் கேளாய்
தவ முனிவர் கூட்டரவும் அவரிருக்கும் குகையும்
    சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும்
கவன சித்தர்ஆதியரும் மவுனயோ கியரும்
    காத்திருக்குங் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே
நவநிதியும் விளையுமிடம் அவிடமது கடந்தால்
    நங்கைமார் குரவையொலிப் பொங்குமா கடலே

(3)

பொங்குகடல் திரிவேணி சங்கமெனச் செழிக்கும்
    பொருந்து சித்ர நதித்துறைகள் பொன்னுமுத்துங் கொழிக்கும்;
கங்கையென்னும் வடஅருவி தங்குமிந்த்ர சாபம்
    கலந்தாடிற் கழுநீராய்த் தொலைந்தோடும் பாபம்
சங்கவீ தியிற்பரந்து சங்கினங்கள் மேயும்
    தழைத்தமதிட் சிகரமெங்கும் கொழுத்தகயல் பாயும்
கொங்கலர்செண் பகச்சோலைக் குறும்பலா ஈசர்
    குற்றாலத் திரிகூடத் தலைமெங்கள் தலமே;

(4)

மன்றுதனில் தெய்முர சென்றுமேல் முழங்கும்
    வளமைபெறுஞ் சதுரயுகம் கிழமைபோல் வழங்கும்
நின்றுமத கரிபூசை அன்றுசெய்த தலமே
    நிந்தனைசெய் புட்பகந்தன் வந்தனைசெய் தலமே
பன்றியொடு வேடன் வலஞ் சென்றதிந்தத் தலமே
    பற்றாகப் பரமர்உரை குற்றாலத் தலமே
வென்றிபெறுந் தேவர்களுங் குன்றமாய் மரமாய்
    மிருகமதாய்த் தவசிருக்கும் பெரியதலம் அம்மே!

(பொ-ரை) (1) மெய்யுணர்வுடையார்கூடச் சித்திரநதி தோன்றிய வரலாற்றை அறியமாட்டார்கள்: ஆனாலும் சிறிது சொல்வேன் அம்மே! கேட்பாயாக உயர்வு பெற்ற திரிகூடத்திலுள்ள தேனருவித் துறையிடத்தே ஒரு சிவலிங்கம் தேவர்கட்கு மட்டும் அறிந்த மறை பொருளாய்த் தோன்றாநின்றது. அத்தகைய தேனருவித் துறையை அயன் உரைத்த இடம் இன்னதென்று அறியாமல் அரிய தவஞ்செய்தற்காகத் தேடி அலைகின்ற காலத்தில், மௌனநிலை யெய்திய தேவர்கட்கு எங்கள் குலத்துத் தோன்றல்களான வேடர்கள் இஃதென்று காட்டிக்கொடுத்த பழைய கங்கையாறே இப்போது சிவமது கங்கை ஆறாக வழங்கப் பெறுவது:

(2) அந்தச் சிவமது கங்கையின் சிறப்பை உலகமெங்கும் புகழ்ந்து கூறும்; அத்தகைய சிவமது கங்கையிலுள்ள நீராடும் செண்பகாடவித் துறையினது சிறப்பை நான் சொல்லுகின்றேன்; நீ கேட்பாயாக. தவமுனிவர்களுடைய கூட்டமும் அவர் தங்கியிருக்கின்ற குகையும் சஞ்சீவி முதலான மந்திரசக்தியைத் தரும் பச்சிலையும் வான்வழிச் செல்லும் சித்தர்களும் மௌனயோகிகளும் இறைவன் திருமுன்பு காத்துக்கிடக்கின்ற திருக்கைலாய மலையை ஒத்ததாக விளங்கும் அம்மா! ஒன்பது வகை மணிகளும் விளைகின்றதான அந்த இடங்களைக் கடந்துபோனால் போகுமிடங்களில் மங்கைமார்கள் குரவைக் கூத்தாடுகின்றதால் உண்டாகும் பேரொலி அலையெறிந்து குதிக்கும் கடலின் ஒலிபோல் கேட்கும்;

(3) கங்கை யமுனை சரசுவதி முதலிய ஆறுகளின் அலையால் மிகும் கடல்போன்ற திரிவேணி சங்கமமென்னும்படி வளம்பெற்றிருக்கும்; அதைச் சார்ந்துள்ள சித்திர நதியின் துறைமுகங்கள் தோறும் பொன்னையும் முத்துக்களையும் கொண்டு வந்து அலைகள் ஒதுக்கும்; கங்கைப் பேராற்றை யொத்ததென்று சொல்லுதற்குரிய வானவில்லின் நிறம்போல் பன்னிறங் காட்டுகின்ற வட அருவித் தீர்த்தத்தில் முழுகினால் கழுவப்பட்ட நீரில் அழுக்குகள் கழிந்தொழிவது போலப் பாவங்கள் எல்லாம் நிற்காமல் ஓடிப்போகும்; சங்கவீதியில் பரவிவந்து சங்குக்கூட்டங்கள் மேயும்; மேம்பட்ட மதில்களின், மேலிடமெங்கும், கொழுமை கொண்ட கெண்டை மீன்கள் பாய்ந்து செல்லும்; இத்தகைய சிறப்புகளையுடைய செண்பகச் சோலையையுடைய மணம் கமழுகின்ற குறும்பலா மரத்தினடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதருக்குரிய திருக்குற்றாலத் திரிகூடத் தலமே, எங்களுக்குரியதலமாகும்.

(4) சித்திரசபையில் தெய்வத்தன்மை பொருந்திய முரசமானது எக்காலத்தும் முழங்கிக்கொண்டேயிருக்கும்; சிறப்புப் பொருந்திய நான்கு ஊழிக் காலமுங்கூடஇத் தலத்தில் நான்கு நாட்கள்போல் இருக்கும். (இத் தலத்தில் இருப்பவர்க்கு நாள் கழியவில்லையே என்று வெறுப்புத் தோன்றாது, இன்பமாக இருக்கும்) மதயானை தவறாது வந்து வழிபாடு செய்த திருநகரமும் இதுவே. யாவரும் பழித்தற்குரிய புட்பகந்தன் என்பவன் வழிபாடு செய்த திருநகரமும் இதுவேயாகும்; பன்றியுடன் வேடனும் வலமாகச் சுற்றிச் சென்றதும் இந்தத் திருநகரமேயாகும்; அருளுடன் மேலானவராகிய திருக்குற்றால நாதர் எழுந்தருளியிருக்கின்றதானது இத்திருக்குற்றால நகரமேயாகும்: இன்னும் இத்திருநகர், தேவர்களெல்லாம் சிறு மலைகளாகவும் மரங்களாகவும் விலங்குகளாகவும் தம் உருமாறித்தவம் செய்து கொண்டிருக்கின்ற சிறந்த திருத்தலம் இக்குற்றால நகரமேயாகும் அம்மே!



(வி-ரை)

மூலம்-காரணம். மேவும்-பொருந்தும். கூட்டரவு-கூட்டம். குரவை-குரவைமுழக்கம். திரிவேணி-கங்கை யமுனை சரசுவதி ஆகிய ஆறுகள் கூடுமிடம். கழுநீர்-அழுக்குகளைக் கழுவுகின்ற நீர், கொங்கு அலர்-வாசனை விரிந்த. வழங்கும்-செல்லும். புட்பகந்தன்-கொற்கை நகரத்துக் குசலன் என்னும் பிராமணன்.

(58)

வசந்தவல்லி திரிகூடநாதர் சுற்றம் வினாவுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தீர்த்தவிசே டமுந்தலத்தின் சிறந்தவிசே
    டமும் உரைத்தாய் திருக்குற் றால
மூர்த்திவிசே டந்தனையு மொழிதோறும்
    நீயுரைத்த முறையாற் கண்டேன்
வார்த்தைவிசே டங்கள் கற்ற மலைக்குறவஞ்
    சிக்கொடியே வருக்கை வாசர்
கீர்த்திவிசே டம்பெரிய கிளைவிசே
    டத்தைஇனிக் கிளத்து வாயே.

(பொ-ரை) சொற்களைச் சிறப்பாகப் பேசும் திறம் அறிந்த மலைக்குற வஞ்சிக்கொடியே! தீர்த்தத்தின் பெருமையையும் தலத்தின் சிறப்பையும் சொன்னாய்; அப்பொழுதே திருக்குற்றால மூர்த்தியின் சிறப்பையும் நீ சொன்ன முறைமையில் அறிந்தேன்; குறும்பலா நாதரின் பெருமைச் சிறப்பையும் அவருக்குரியாரின் சிறப்பையும் நீ இனிமேல் எடுத்துக் கூறுவாயாயக.



(வி-ரை)

மொழிதோறும்-சொல்லுந்தோறும். கிளை-சுற்றம்.

(59)