பக்கம் எண் :



குறத்தி, திரிகூடநாதர் கினைச்சிறப்புக் கூறுதல்

இராகம் - முகாரி
தாளம் - ஏகம்
கண்ணிகள்

(1) குற்றாலர் கிளைவளத்தைக் கூறக்கேள் அம்மே
    குலம்பார்க்கில் தேவரினும் பெரியகுலங் கண்டாய்
பெற்றதாய் தந்தைதனை உற்றுநீ கேட்கிற்
    பெண்கொடுத்த மலைஅரசன் தனைக்கேட்க வேணும்
உற்றதொரு பனிமலையின் கொற்றவேந் தனுக்கும்
    உயர்மதுரை மாறனுக்கும் செயமருகர் கண்டாய்
வெற்றிபெறும் பாற்கடலிற் புற்றரவில் உறங்கும்
    வித்தகர்க்குக் கண்ணான மைத்துனர்காண் அம்மே

(2)

ஆனைவா கனத்தானை வானுலகில் இருத்தும்
    ஆகுவா கனத்தார்க்கும் தோகைவா கனர்க்கும்
தானையால் தந்தைகா லெறிந்தமக னார்க்குந்
    தருகாழி மகனார்க்குந் தகப்பனார் கண்டாய்
சேனைமக பதிவாசல் ஆனைபெறும் பிடிக்கும்
    தேனீன்ற மலைச்சாரல் மானீன்ற கொடிக்கும்
கானமலர் மேலிருக்கும் மோனஅய னார்க்குங்
    காமனார் தமக்கும்இவர் மாமனார் அம்மே!

(3)

பொன்னுலகத் தேவருக்கும் மண்ணுலகத் தவர்க்கும்
  பூதலத்தின் முனிவருக்கும் பாதலத்து ளார்க்கும்
அன்னவடி வெடுத்தவர்க்கும் ஏனஉரு வார்க்கும்
    அல்லார்க்கும் முன்னுதித்த செல்வர்காண் அம்மே
முன்னுதித்து வந்தவரைத் தமையனென உரைப்பார்
    மொழிந்தாலும் மொழியலாம் பழுதிலைகாண் அம்மே
நன்னகரிற் குற்றால நாதர்கிளை வளத்தை
    நானுரைப்ப தரிதுலகந் தானுரைக்கும் அம்மே!

(பொ-ரை)

(1) அடி அம்மே! குற்றாலநாதரின் சுற்றச் சிறப்பைச் சொல்கின்றேன் கேள்; குலத்தை ஆராய்ந்தால் மற்ற எந்தத் தேவர்கள் குலங்களிலும் சிறந்த குலம் ஆகும், இவர் குலம்; இவரைப் பெற்ற தாய் தந்தையர்கள் யாரென்று நீ உன்னிப்போடு கேட்பாயானால் இவர்க்குப் பெண் கொடுத்த மாமனான இமயமலை யரசனைத்தான் கேட்கவேண்டும்; எனக்குத் தெரியாது, (தாய்தந்தை இல்லாத தான்தோன்றிய இவர்) சிறப்புப் பொருந்திய ஒப்பற்ற இமயமலையுடைய வெற்றி வேந்தனான இமவானுக்கும், உயர்ந்த மதுரைநகர் மலையத்துவச பாண்டியனுக்கும் வெற்றியுள்ள மருமகனாராவார்; வெற்றி கொள்கின்ற திருப்பாற்கடலில் பாம்பணை (ஆதிசேட சயனம்)யில் அறிதுயில் செய்கின்ற அறிவுருவினனான திருமாலுக்குக் கண்ணுக்குக் கண்ணான மைத்துனராவார்.

(2) வெள்ளையானையைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டிருக்கின்ற தேவேந்திரனை வானுலகில் நிலைபெற்றிருக்கச் செய்த சிறப்புக்குரிய பெருச்சாளியை ஊர்தியாகக் கொண்ட பிள்ளையார்ப் பெருமானுக்கும், மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகப்பெருமானுக்கும் தன்கைப்படையினால் தன் தந்தையின் காலினை வெட்டிய சண்டேசுர நாயனாருக்கும் சீர்காழிநகரில் தோன்றிய திருஞான சம்பந்த மூர்த்தியாருக்கும் தந்தையாராவார். அம்மே! படைகளையுடைய வேள்விகட்குத் தலைவனான தேவேந்திரன் அரண்மனை வாசலில் வளர்கின்ற ஐராவத யானையால் வளர்க்கப்பட்ட பெண்யானை போன்ற தெய்வயானை அம்மையாருக்கும், தேன் இறால்மிக்குள்ள மலையடிவாரத்தில் மான் ஈன்ற கொடி போன்றவரான வள்ளி நாயகியாருக்கும், மணம் பொருந்திய செந்தாமரை மலர் மேல் இருக்கின்ற மோனமுடைய நான்முகனுக்கும் மன்மதனுக்கும் இவர் மாமனார் ஆவார் அம்மே!

(3) பொன்னுலகமாகிய தேவருலக வானவர்க்கும், இம்மண்ணுலகத்தில் வாழ்கின்ற மக்கட் பிறப்பினர்க்கும், இவ்வுலகில் இருக்கின்ற முனிவர்கட்கும், கீழுலகத்தில் வாழ்கின்ற நாகர்களுக்கும், அன்னப் பறவை உருவங்கொண்ட நான்முகனுக்கும், பன்றி உருவெடுத்த திருமாலுக்கும், இவர்களல்லாத இந்திரன் முதலிய தேவர்கட்கும் முன்னேயே தோன்றியருளிய அருட் செல்வர் ஆவர் அம்மே! ஒருவருக்கு முன் பிறந்தவர்களை உலகில் அண்ணன் என்று கூறுவார்கள்! அப்படிச் சொன்னாலும் சொல்லலாம்; அது பொருத்தமாகும்; அதனால் தவறுமில்லை. அம்மா! இன்னும் இந்த நல்ல குற்றால நகரில் எழுந்தருளியிருக் கின்ற திரிகூடராசப் பெருமானுடைய சுற்றத்தார்களின் சிறப்பியல்புகள் என்னால் விளக்கிச்சொல்ல இயலாது; எனக்குச் சொல்லும் ஆற்றல் இல்லை; உலக மக்கள் அவரின் பெருமையையெடுத்துக் கூறுவார்கள் அம்மே;



(வி-ரை)

1-3 மலையரசன்-இமவான். மதுரைமாறன்-மலையத்துவச பாண்டியன். வித்தகர்-உண்மையறிவுடையவரான திருமால். ஆனைவாகனத் தான்-இந்திரன். தானை-படை மகனார், இங்கே சண்டேசுரர், மகபதி-இந்திரன். யானை பெறும் பிடி-தெய்வயானை அம்மையார். மான்ஈன்ற கொடி; வள்ளியம்மையார். கானம்-மணம். ஏனஉருவார்-பன்றி வடிவமெடுத்த திருமால்.

(60)