வசந்தவல்லி, குறத்தியிடம் குறியின்
தன்மையை வினாவுதல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
|
நீர்வளர்
பவள மேனி நிமலர்குற் றால நாதர்
கூர்வளம் பாடி யாடுங் குறவஞ்சிக் கொடியே கேளாய்
கார்வளர் குழலார்க் கெல்லாங் கருதிநீ விருந்தாச் சொல்லுஞ்
சீர்வளர் குறியின் மார்க்கந் தெரியவே செப்பு வாயே.
|
(பொ-ரை) |
நீரையுடைய கடலில் படர்ந்து வளர்கின்ற செம்பவளம் போன்ற திருமேனி நிறத்தையுடைய இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கியவராகிய திருக்குற்றால நாதருடைய மிகுந்த பெருமையைப் பாடி ஆடுகின்ற குறத்தியாகிய வஞ்சிக் கொடி போன்றவளே! நான் சொல்வதைக் கேட்பாயாக! மேகம் போல் கருநிறம் பொருந்திய கூந்தலையுடைய பெண்களுக்கெல்லாம் நீ ஆராய்ந்து அவர்களின் காதுகளுக்கேற்பச் சொல்கின்ற சிறப்புமிகுந்த குறியின் தன்மையை எனக்குத் தெரியும்படி நீ விளக்கமாகச் சொல்வாயாக.
|
|
(வி-ரை) |
நீர்-கடல்
நீர், கூர்-மிகுந்த. விருந்து-புதுமை.
|
(61) |
குறத்தி,
தன் குறியின் சிறப்பைக் கூறுதல்
பல்லவி
(1) |
வித்தாரம்
என்குறி அம்மே!-மணி |
|
முத்தாரம்
பூணு முகிழ்முலைப் பெண்ணே! |
|
வித்தாரம்
என்குறி யம்மே |
|
சரணங்கள்
(2) |
வஞ்சி
மலைநாடு கொச்சி கொங்கு |
|
மக்க
மராடந் துலுக்காண மெச்சி |
|
செஞ்சி
வடகாசி சீனம் |
|
சிங்களம் ஈழம் கொழும்புவங் காளம் |
|
தஞ்சை
சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச் |
|
சங்க
மதுரைதென் மங்கலப் பேட்டை |
|
மிஞ்சு
குறிசொல்லிப் பேராய்த் திசை |
|
வென்றுநான்
பெற்ற விருதுகள் பாராய்; (வித்தாரம்)
|
(3) |
நன்னகர் குற்றாலந்
தன்னில் எங்கும் |
|
நாட்டுமெண்
ணூற்றெண்பத் தேழாண்டு தன்னில் |
|
பன்னக மாமுனி
போற்றத் தமிழ்ப் |
|
பாண்டிய
னார்முதற் சிற்றோடு வேய்ந்த |
|
தென்னாரும் சித்ர
சபையை எங்கள் |
|
சின்னணஞ்
சாத்தேவன் செப்போடு வேய்ந்த |
|
முன்னாளி லேகுறி
சொல்லிப் பெற்ற |
|
மோகன
மாலைபார் மோகன வல்லி! (வித்தாரம்)
|
(4) |
அன்பாய் வடகுண
பாலிற் கொல்லத் |
|
தாண்டொரு
நானூற்று நாற்பத்து நாலில் |
|
தென்காசி ஆலய
மோங்கக் குறி |
|
செண்பக
மாறற்குச் சொன்னபேர் நாங்கள் |
|
நன்பாண்டி ராச்சியம்
உய்யச் சொக்க |
|
நாயகர்
வந்து மணக்கோலஞ் செய்ய |
|
இன்பா மதுரை
மீனாட்சி குறி |
|
எங்களைக்
கேட்டதுஞ் சங்கத்தார் சாட்சி (வித்தாரம்)
|
|
(பொ-ரை) |
(1)
எனது குறி சொல்லும் திறன், மிகச் சிறந்தது அம்மே! மணியாலும் முத்தாலும்
ஆகிய மாலைகளைத் தரித்திருக்கின்ற, மேலெழுந்து தோன்றுகின்ற கொங்கைகளையுடைய
பெண்ணே! எனது குறி சொல்லும் திறன், மிகச் சிறந்தது அம்மே!
(2) கருவூர், மலையாளநாடு, கொச்சி, கொங்குநாடு மக்கம், மராடம், துலுக்கநாடு
(இந்துத்தானம்) களில் எல்லாம் என்னைப் பாராட்ட; செஞ்சி, வடகாசி,
நீண்டதான சீனம், சிங்களம், ஈழம், (இலங்கை) கொழும்பு, வங்காளம்,
தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளிக் கோட்டை, இவ்விடங்களிலெல்லாம் மிகுதியாகக்
குறிகள் சொல்லிப்பெருங்கீர்த்தி பெற்று, எல்லாத்திசைகளிலும் குறி
சொல்வதற்கு எனக்கு ஒத்தவரில்லையென வெற்றி பெற்று அவ் வெற்றிக்கு
அடையாளமாக நான் பெற்று வந்துள்ள பரிசுப் பொருள்கள் இதோ! பார்ப்பாயாக
அம்மே!
(3) மோகனவல்லியே! நன்னகராகிய திருக்குற்றாலத்தில் எங்கும் தன்
புகழை நிலைநாட்டிய கொல்லம் எண்ணூற்றெண் பத்தேழாம் ஆண்டிலே பதஞ்சலிமா
முனிவர் போற்றத் தமிழை வளர்த்த பாண்டியன் முதலிலே சிறிய உரை ஓடுகள்
கொண்டு வேய்ந்த (மூடிய) அழகு பொருந்திய சித்திர சபையைச் சின்னணைஞ்சாத்தேவன்
செம்பாலான ஓடுகள் கொண்டு வேய்ந்தான். அந்தப் பழங்காலத்திலேயே
குறிகள் சொல்லி நான் பரிசிலாக பெற்ற, யாருக்கும் விருப்பம் கொடுக்கின்ற
முத்து மாலை இம் மாலையாகும் பார்; (வித்தாரம் என் குறி அம்மே!)
(4) வடகீழ்த் திசையில் கொல்லம் ஆண்டு நானூற்று நாற்பத்து நான் காவதாண்டிலே
தென்காசிக் கோயில் சிறந்த மேம்படும்படி செண்பக பாண்டியனிடத்தில்
அன்பாய்க் குறி சொன்னவர்கள் எங்கள் குலத்திற் பிறந்த குறிகாரர்களேயாவர்.
நல்ல பாண்டிய நாடு கடைத்தேறும்படியாக (நல்வாழ்வு அடையும் படியாக) சொக்கநாதப்
பெருமான் சோமசுந்தர பாண்டியராக உருமாறித் திருமணஞ் செய்துகொள்வதை
மதுரை மீனாட்சியம்மையாருக்கு எங்கள் குலத்துக்குரிய குறி சொல்வோரைக்
குறி கேட்டு அவ்வாறே குறி தவறாமல் நடந்ததற்குச் சங்கப்புலவர்களே சான்று
கூறுவார்கள். (அதனால் வித்தாரம் என் குறி அம்மே!)
|
|
(வி-ரை) |
1-4 வித்தாரம்-பெரியது;
சிறந்தது. முகிழ்-முகிழ்த்தல்; மேலெழுந்து தோன்றுதல், பன்னகமாமுனி-பதஞ்சலி
முனிவர். தென்-அழகு. வடகுணபால்-வடகிழக்கு எல்லை.
|
(62) |
வசந்தவல்லி,
குறத்திடம் குறிகேட்டல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கலவிக்கு
விழிவாள் கொண்டு காமனைச் சிங்கி கொள்வாய்
குலவித்தை குறியே ஆனாற் குறவஞ்சி குறைவைப் பாயோ
பலவுக்குள் கனியாய் நின்ற பரமர்குற் றாலர் நாட்டில்
இலவுக்கும் சிவந்த வாயா லெனக்கொரு கறிசொல் வாயே
|
(பொ-ரை) |
அடி குறச்சிங்கி! காதலுக்கு
உன் கண்ணாகிய வாளைக்கொண்டே மன்மதனையும்கூட உன் வசமாக்குவாய்; உன்னுடைய
குலப்படியே குறி சொல்லுவதாய் இருக்குமானால் நீ குறி சொல்லுவதில் குறைவைத்தா
சொல்லுவாய்'நான்றாகச் சொல்வாயன்றோ'குறும்பலா மரத்தின் கிளைகளில்
பழமாய் விளங்குகின்ற மேலான குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கின்ற இந்நாட்டில்
இலவமுள் மலரைக் காட்டினும் சிவந்திருக்கின்ற உன் வாயைத் திறந்து எனக்கு
ஒரு நல்ல குறியைச் சொல்லுவாயாக.
|
|
(வி-ரை) |
கலவி-புணர்ச்சி;
காதல். விழிவாள்-கண்ணாகிற வாள்; காதல் உருவகம். பலவு-பலாமரம். இலவம்-இலவமலர். |
(63) |
குறத்தி,
குறிசொல்லுதல்
கண்ணிகள்
(1) |
என்னகுறி
யாகிலுநான் சொல்லுவேள் அம்மே சதுர்
ஏறுவேன் எதிர்த்தபேரை வெல்லுவேன் அம்மே
|
(2) |
மன்னவர்கள்
மெச்சுகுற வஞ்சிநான் அம்மே என்றன்
வயிற்றுக்கித் தனைபோதுங் கஞ்சிவார் அம்மே
|
(3) | பின்னமின்றிக்
கூழெனினுங் கொண்டுவா அம்மே வந்தால்
பெரிய குடுக்கைமுட்ட மண்டுவேன் அம்மே
|
(4) |
தின்னஇலை
யும்பிளவும் அள்ளித்தா அம்மே கப்பற்
சீனச்சரக் குத்துக்கிணி கிள்ளித்தா அம்மே
|
(5) |
அம்மேஅம்மே
சொல்லவராய் வெள்ளச்சி அம்மே உனக்கு
ஆக்கம் வருகுதுபார் வெள்ளச்சி அம்மே
|
(6) |
விம்முமுலைக்
கன்னிசொன்ன பேச்சுநன் றம்மே நேரே
மேல்புறத்தில் ஆந்தை இட்ட வீச்சுநன் றம்மே
|
(7) |
தும்மலுங்கா
கமுமிடம் சொல்லுதே அம்மே சரம்
சூட்சமாகப் பூரணத்தை வெல்லுதே அம்மே
|
(8) |
செம்மைஇது
நல்நிமித்தங் கண்டுபார் அம்மே திரி
கூடமலைத் தெய்வமுனக் குண்டுகாண் அம்மே.
|
|
(பொ-ரை) |
(1)
அம்மே! எந்தச் சிக்கலான கேள்விகட்கெல்லாம் நான் நன்கு அறிந்து
உடனே குறிதவறாமல் சொல்லுவேன். இதற்காகவே சபையில் ஏறிப் பேசுவேன்;
அங்கே எதிர்த்து மாற்றுக் குறி சொல்லவரும் குறிகாரர்களை நான் வெற்றி
கொள்ளுவேன்!
(2) அரசர்களுங்கூட என் குறியை அறிந்து புகழப்படுகின்ற குறத்தி நானே
அம்மா! என் வயிற்றுக்குக் கொஞ்சம் கஞ்சி ஊற்றம்மே! அந்த அளவு எனக்குப்
போதுமானது!
(3) வேறுபாடு கருதாமல் (இவளுக்கு இதையா ஊற்றுவது) என்று நினையாமல் (கேழ்வரகுக்)
கூழாக இருந்தாலும் நீ எடுத்துக் கொண்டு வா அம்மே! வருவாயானால் என்
பெரிய வயிறு முட்டுமளவுக்கு நிறையக் குடித்துவிடுவேன் அம்மே!
(4) அதன் பிறகு வாயிற் போட்டுக்கொள்வற்கு வெற்றிலையும் வெட்டுப்
பாக்கும் அள்ளிக் கொண்டுவந்து தா அம்மே! கப்பலேறி வந்த சீன நாட்டு
விளைபொருளான புகையிலையையும் சிறிதளவு கிள்ளிக்கொண்டு வந்து தா அம்மே!
(5) அம்மே! அம்மே; நான் குறி சொல்வதற்கு அருகே வா வெள்ளச்சி அம்மே!
அம்மே, உனக்கு நல்லன யாவும் மிகவும் வரப் போகின்றது பார் வெள்ளச்சி
அம்மே!
(6) அம்மே! மேலெழந்து வருகின்ற கொங்கைகளையுடைய பெதும்பைப் பருவப்
பெண் ஒருத்தி, அங்கேபேசுகின்ற பேச்சு, நம் குறிக்கு ஏற்றதாக நன்றாயிருக்கிறது.
நமக்குமுன்னே மேற்குப் பக்கத்தில் ஆந்தையின் 'கீச்சு கீச்சு'என்ற
சத்தம் போட்ட பெருங்குரலும் நன்றாகப் பொருந்தியிருக்கின்றது.
(7) அம்மே! அங்கே யாரோ தும்மிய தும்மல் ஒலியும் இடப்பக்கமாகக்
காக்கை பறந்து செல்வதும் நல்ல குறியையே நமக்குச் சொல்லுகின்றது. அம்மே!
மூக்கிலிருந்து வருகின்ற மூச்சுக் காற்றும் நுட்பமாக நமக்குநிறைவான நல்லவற்றையே
வெற்றியாகக் காட்டுகின்றது அம்மே!
(8) அம்மே! சிறந்ததாகிய இந்த நல்ல குறிகளை யெல்லாம் இனிமேல் அனுபவ
வாயிலாக அறிந்து தெரிந்துகொள் அம்மே! திரிகூட மலையில் எழுந்தருளியிருக்கின்ற
தெய்வமாகிய திருக்குற்றால நாதரே உனக்கு உரிமையுடையவராக (கணவராக)
இருப்பார் அம்மே!
|
|
(வி-ரை) |
1-8
இத்தனை-இவ்வளவு, சிறிதளவு, பின்னம்-வேறுபாடு. மண்டுவேன்-மிகக்குடிப்பேன்.
பிளவு-பாக்கு; பிளப்பினையுடைய; வெட்டப் பட்ட. சரம்-மூக்கில் தோன்றும்
மூச்சு, சூட்சுமம்-நுட்பம்; கண்ணுக்குப்புலப்படாத தன்மை. சொல்வது-சத்தமிடுகின்றது.
நிமித்தம்-சகுனம். பகருது-முழங்குகின்றது. |
(64) |
|
|
|
|