பக்கம் எண் :

இதுவுமது

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


பல்லியும் பலப லென்னப் பகருது திரிகூ டத்திற்
கல்விமான்சி வப்பின் மிக்கான் கழுத்தின்மேல் கறுப்பும் உள்ளான்
நல்லமேற் குலத்தான் இந்த நன்னகர்த் தலத்தா னாக
வல்லியே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே.

(பொ-ரை)

வசந்தவல்லியே! பல்லியும் ?பல பல? என்று ஒலி கூட்டிச் செல்லுகின்றது! திரிகூட மலையிடத்து உள்ளவனாகிய கல்வியிற் சிறந்தவனும், சிவப்பு நிறம் மிக்கவனும், கழுத்திடத்தே கருநிறம் படைத்தவனும், சிறந்த உயர்ந்த குலத்தினையுடையவனும், இந்த நல்ல குற்றாலத் திருநகரானுமான நல்ல மாப்பிள்ளையானவன் உனக்குக் கிடைப்பான் அம்மே! (நீ வருந்தாதே!)



(65)

இதுவுமது

இராகம்-ஸ்ரீராகம் தாளம்
தாளம்-சாப்பு
கண்ணிகள்

(1) தறைமெழுகு கோலமிடு முறைபெறவே கணபதிவை
   அம்மே! குடம்
தாங்காய்முப் பழம்படைப்பாய் தேங்காயும் உடைத்து
   வைப்பாய் அம்மே!
(2) அறுகுபுனல் விளக்கிடுவா யடைக்காய்வெள் ளிலைகொடுவா
   அம்மே! வடை
அப்பமவல் வர்க்கவகை சர்க்கரையொ டெட்பொரிவை
   அம்மே!
(3) நிறைநாழி அளந்துவைப்பாய் இறையோனைக் கரங்குவிப்பாய்
   அம்மே! குறி
நிலவரத்தைத் தேர்ந்து கொள்வாய் குலதெய்வத்தை
   நேர்ந்துகொள்வாய் அம்மே!
(4) குறிசொல்லவா குறிசொல்லவா பிறைநுதலே குறிசொல்லவா
   அம்மே! ஐயர்
குறும்பலவர் திருவுளத்தாற் பெரும்பலனாம்
   குறிசொல்லவா அம்மே!

(பொ-ரை)

(1) அம்மே! தரையை மெழுகு; கோலம் போடு; குறியை முறையாகப் பெறுவதற்கு (மஞ்சளில்) பிள்ளையார் உருவைப் பிடித்துவை; நிறைகுடம் எடுத்து வை; வாழை மா பலாப் பழங்களைப் பரப்பிவை; தேங்காயும் உடைத்துவைப்பாயாக அம்மே!

(2) அறுகம்புல்லும் தண்ணீரும் விளக்கும் கொண்டுவந்து வைப்பாயாக. பாக்கும் வெற்றிலையும் கொண்டுவா அம்மே! வடை, அப்பம், அவல் கடலை முதலியவற்றுடன் சர்க்கரை, எள்ளுருண்டை, பொரி இவற்றையும் கொண்டு வந்து வைப்பாயாக அம்மே!

(3) நிறை நாழியில் நெல்லளந்து கொண்டுவந்து வைப்பாயாக; கடவுளையும் கைகுவித்து வணங்குவாயாக அம்மா. அதன் பின் குறியின் தன்மைகளை அறிந்துகொள்வாய்; உன் குலதெய்வத்தையும் இனி வேண்டிக் கொள்வாயாக அம்மே!

(4) அம்மே மூன்றாம் பிறை போன்றை நெற்றியாளே! அம்மா! உனக்குக் குறிசொல்லவா! இப்போது குறிசொல்லவா நான் குறி சொல்லவா! குறும்பலாவடியில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால் நாதரின் திருவுளப் பாங்கு கொண்டு உனக்குப் பெரும் நன்மையான குறி சொல்லவா அம்மே குறி சொல்லவா


















(வி-ரை)

1-4. தறை-தரை; நிலம். அடைக்காய் வெள்ளிலை-பாக்கு வெற்றிலை. வர்க்கம்-இனம்-அவல்-கடலை முதலிய அவ்விடத்துக்கு வேண்டிய பொருள்கள் நேர்ந்து-வேண்டி-நிலவரம்-தன்மை, நிலைமை. பிறைநுதல்: உவமைத் தொகைநிலைக்களத்துப் புறத்தப் பிறந்த அன்மொழித்தொகை.




(66)

இதுவுமது

கட்டலைக்கலித்துறை


ஆனேறு செல்வர் திரிகூடநாதர் அணிநகர் வாழ்
மானே வசந்தப் பசுங்கொடி யேவந்த வேளைநன்றே
தானே இருந்த தலமும்நன் றேசெழுந் தாமரைபோல்
கானேறும் கைம்மலர் காட்டாய் மனக்குறி காட்டுதற்கே.

(பொ-ரை)

விடையேறிய செல்வராகிய திரிகூட நாதர் எழுந்தருளியிருக் கின்ற அழகிய நதரில் வாழ்கின்ற மான்போன்ற வசந்தவல்லியே! நீ வந்த வேளை நல்லது; நீ இருந்த இடமும் நல்லது; உன் மனத்தில் தோன்றியுள்ள குறியைச் சொல்லுவதற்குச் செழித்த தாமரைமலர் போன்ற மணமிகுந்த உன் கைம்மலரைக் காட்டுவாயாக.



(வி-ரை)

ஆன்ஏறு-ஆனின் இனமாகிய எருகு; ஈண்டு இறைவன் ஊர்ந்தருளும் காளை வாகனம்.

(67)

இராகம்-கல்யாணி
தாளம்-சாப்பு
கண்ணிகள்

(1) முத்திரைமோ திரம்இட்ட கையைக்காட்டாய் அம்மே
முன்கை முதாரிஇட்ட கையைக்காட்டாய்
(2) அத்தகட கம்புனைந்த கையைக்காட்டாய் பொன்னின்
அலங்கார நெளிஇட்ட கையைக்காட்டாய்
(3) சித்திரச்சூ டகம்இட்ட கையைக்காட்டாய் பசுஞ்
செங்கமலச் சங்கேரகைக் கையைக்காட்டாய்
(4) சத்திபீ டத்திறைவர் நன்னகர்க்குளே வந்த
சஞ்சீவி யேஉனதுகையைக்காட்டாய்
(பொ-ரை)

(1) அம்மே! முத்திரை மோதிரம் அணிந்துள்ள கையைக் காட்டுவாயாக; பெரிய வளையல் அணிந்த முன் கையைக் காட்டுவாயாக.

(2) பொற்கங்கணம் அணிந்த கையைக் காட்டுவாயாக; பொன்னால் அழகுறச் செய்யப்பட்ட நெளி அணிந்த உன் கையைக் காட்டுவாயாக.

(3) அழகிய சூடகம் என்னும் கைக்காப்பு அணிந்த கையைக் காட்டுவாயாக; இனிய தாமரைமலர் உருவ இரேகைகளும் சங்கு வடிவமுள்ள இரேகைகளும் அமைந்துள்ள உன் கையைக் காட்டுவாயாக.

(4) சத்திபீடத்தில் எழுந்தருளியிருக்கின்ற திருக்குற்றால நாதரது நன்னகரிலே பிறந்திருக்கின்ற உயிரைக் காக்கும் மருந்து போன்றவளே! உனது கையைக் காட்டுவாயாக.



(வி-ரை)

1-4. முதாரி-பெரிய வளையல். அத்த கடகம்-கையிலணியும் கங்கணம். சித்திரம்-அழகு. சஞ்சீவி-உயிர் பிழைக்கச் செய்யும் ஒருவகை மூலிகை மருந்து.


(68)