பக்கம் எண் :

கவிக்கூற்று

கொச்சகக் கலிப்பா


  ஏழைபங்கர் செங்கைமழு வேற்றவர்குற் றாலர்வெற்பில்
  வாழிகொண்ட மோக வசந்தவல்லி கையார்த்து
  வீழிகொண்ட செங்கனிவாய் மிக்ககுற வஞ்சிபழங்
  கூழைஉண்ட வாயாற் குறியைவிண்டு சொல்வாளே.

(பொ-ரை)

உமையொரு பாகரும் தம் சிவந்த கையில் மழு ஏந்தியவருமாகிய திருக்குற்றால நாதரது மலையில் வாழ்வு கொண்ட அன்பு மிக்க வசந்தவல்லியின் கையைப் பார்த்து வீழிக் கனியை யொத்த சிவந்த வாயையுடைய அழகிய சிறந்த
குறவஞ்சியானவள் பழைய கேழ்வரகு கூழை உண்டவாயினால் (வசந்தவல்லி கேட்கும்) குறியை விரித்துச் சொல்ல முற்பட்டாள்.



(69)

இராகம்-பைரவி
தாளம்-ரூபகம்
கண்ணிகள்

(1) மாறாமல் இருநிலத்தில் அறம்வளர்க்கும் கையே
மனையறத்தால் அறம்பெருக்கித் திறம்வளர்க்கும் கையே.
(2) வீறாக நவநிதியும் விளையும் இந்தக் கையே
மேன்மேலும் பாலமுதம் அளையும் இந்தக் கையே.
(3) ஆறாத சனங்கள்பசி ஆற்றுமிந்தக் கையே
அணங்கனையார் வணங்கிநித்தம போற்றும் இந்தக்கையே.
(4) பேறாக நன்னகரங் காக்கும் இந்தக் கையே
பிறவாத நெறியார்க்கே ஏற்கும் இந்தக் கையே.
(பொ-ரை)

(1) பெரிய இந் நிலவுலகில் என்றும் அறத்தை வளர்ப்பது உன்னுடைய இந்தக் கைகளேயாகும்; இல்லற வாழ்வு கொண்டு பலவகை அறங்களை மிகுதியாகச் செய்து உறுதிப் பொருளாகிய வீடுபேற்றை வளர்ப்பதும் உன்னுடைய இந்தக் கைகளேயாகும்.

(2) மேம்பாடு கொள்ளப் புதுமையான பலவகைச் செல்வங்களையும் நாளுக்கு நாள் சேர்ப்பதும் உன்னுடைய இந்தக் கைகளே ஆகும்; என்றென்றும் பாலாகிய அமிழ்தத்தை (தயிராக்கி)க் கடைவதும் உன்னுடைய இந்தக் கைகளேயாகும்;

(3) ஏழைமக்களின் கடும்பசியை ஆற்றி உணவளிப்பதும் உன்னுடைய இந்தக் கைகளேயாகும்; தெய்வப் பெண்களை ஒத்த மகளிர் நாள்தோறும் வழிபட்டுப் புகழ்வதும் உன்னுடைய இந்தக் கைகளேயாகும்;

(4) எல்லோருக்கும் பயன் பெறும்படி இக்குற்றால நல்ல நகரத்தைக் காப்பாற்றுவதும் உன்னுடைய இந்தக் கைகளேயாகும் (இன்னும்) பிறவாத தன்மையாராகிய இத்திருக்குற்றால நாதரையே வேண்டி நிற்பதும் உன்னுடைய இந்தக் கைகளேயாகும். (அறிவாயாக)






(வி-ரை)

1-4. மாறாமல்-எக்காலமும் என்றபடி. திறம்-சிறப்பு, மேன்மை, ஈண்டு யாவற்றினும் உயர்ந்த வீடு பேற்றைக் குறித்தது. வீறு-மேம்பாடு நலம்-புதுமை. விளையும்-விளைவிக்கும்; சேர்க்கும்; ஈண்டுப் பிறவினைப் பொருள். பேறு-பெறத்தக்க பயன்.



(70)

குறத்தி, தெய்வவணக்கஞ் செய்தல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  கைக்குறி பார்க்கில் இந்தக் கைப்பிடிப் பவர்தம் எட்டுத்
திக்குமே உடைய ராவர் செகமக ராசி நீயே
இக்குறி பொய்யா தென்றே இறையவர் திரிகூடத்தில்
மெய்க்குற வஞ்சி தெய்வம் வியப்புற வணங்கு வாளே.

(பொ-ரை)

மை போட்டுக் கையினது குறி பார்க்கும் போது இந்தச் சிறந்த கையைப் பிடிக்கும் மணவாளர், எட்டுத் திசைகளும் தமக்கே உரிமையுடைய வராவர் (எட்டுத் திக்கையுமே ஆடையாகக் கொண்டவர்) நீயே இந்த உலக முழுதுக்கும் சிறந்த அரசியாவாய்; நான் சொல்லுகின்ற இந்தக் குறிபொய்க்க மாட்டாதென்று கூறி, இறைவர் எழுந்தருளியிருக்கின்ற திரிகூட மலைநாட்டில் உண்மையாகக் குறிகள் சொல்கின்ற குறப் பெண்ணானவள், தெய்வங்களை யெல்லாம் வியப்புக்கொள்ளும்படி (குறி கூற) வணக்கஞ் செய்வாளாயினாள்






(71)

இதுவுமது

நிலைமண்டில ஆசிரியப்பா

குழல்மொழி இடத்தார் குறும்பலா உடையார்
அழகுசந் நிதிவாழ் அம்பல விநாயகா
செந்தில்வாழ் முருகா செங்கண்மால் மருகா
கந்தனே இலஞ்சிக் கடவுளே சரணம்
(5) புள்ளிமான் ஈன்ற பூவையே குறக்குல
வள்ளிநா யகியே வந்தெனக் குதவாய்
அப்பனே மேலை வாசலில் அரசே
செப்பரு மலைமேல் தெய்வகன் னியர்காள்
ஆரியங் காவா அருட் சொரி முத்தே
(10) நேரிய குளத்தூர் நின்றசே வகனே
கோலமா காளி குற்றால நங்காய்
கால வைரவோ கனதுடிக் கறுப்பா
முன்னோடி முருகா வன்னிய ராயா
மன்னிய புலிபோல் வரும்பன்றி மாடா
(15) எக்கலா தேவி துர்க்கை பிடாரி
மிக்கதோர் குறிக்கா வேண்டினேன் உங்களை
வந்துமுன் இருந்து வசந்தமோ கினிப்பெண்
சிந்தையில் நினைந்தது சீவனோ தாதுவோ
சலவையோ பட்டோ தவசதா னியமோ
(20) கலவையோ புழுகோ களபகத் தூரியோ
வட்டிலோ செம்போ வயிரமோ முத்தோ
கட்டிலோ மெத்தையோ கட்டி வராகனோ
வைப்பொடு செப்போ வரத்தொடு செலவோ
கைப்படு திரவியம் களவுபோ னதுவோ
(25) மறுவிலாப் பெண்மையில் வருந்திட்டி தோசமோ
திரிகண்ணர் ஆனவர் செய்தகைம் மயக்கமோ
மன்னர்தாம் இவள்மேல் மயல்சொல்லி விட்டதோ
கன்னிதான் ஒருவர்மேற் காமித்த குறியோ
சேலையும் வளையும் சிந்தின தியக்கமோ
(30) மாலையும் மணமும் வரப்பெறுங் குறியோ
இத்தனை குறிகளில் இவள்குறி இதுவென
வைத்ததோர் குறியை வகுத்தருள் வீரே.
 
(பொ-ரை)

குழல்வாய் மொழியம்மையை இடப் பாகத்தில் உடையவரும், குறும்பலாநாதருமாகிய இறைவரின் திருமுன்னர் எழுந்தருளியிருக்கின்ற பிள்ளையார்ப் பெருமானே! திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கின்ற முருகப் பெருமானே! சிவந்த கண்களையுடைய திருமால் மருகனே! கந்தனே! இலஞ்சிக் கடவுளே! உம் திருவடிகள் என்னைக் காப்பதாக; புள்ளிமான் பெற்ற நாகணவாய் பறவை போன்ற குறக்குலத்தில் பிறந்த வள்ளிநாயகியே! எனக்கு வந்து உதவி செய்வாயாக; அப்பனே! மேலவாயிலின் தலைவனாகிய ஐயனாரே! கரிய மலைமேல் எழுந்தருளியிருக்கின்ற தெய்வ கன்னியர்களே! ஆரியங்கா என்னுமிடத்தில் எழுந்தருளியிருக்கின்ற ஐயனார்ப் பெருமானே! அருள்மிக்க சொரி முத்தென்னும் என் ஐயனே! சிறப்புடைய குளத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற வீரனே! அழகிய மாகாளியம்மையே! குற்றால நகர்க்காவல் நங்கையே! எக்காலமும் இருக்கின்ற வைரவப் பெருமானே! மிக்க கொடுமையையுடைய கறுப்பனே! முன் ஓடியாகிய முருகனே! வன்னியராயனே! வீரம் பொருந்திய புலிபோல் பாய்ந்து வருகின்ற பன்றி மாடனே! எக்காலதேவி யம்மையே! துர்க்கையே! பிடாரியே! உங்களையெல்லாம் நான் சிறந்ததொரு குறி கூறும் பொருட்டாக வேண்டிக் கொள்கின்றேன்! நீங்கள் யாவரும் என்முன் வந்திருந்து இந்த வசந்த மோகினிப் பெண்ணினது மனத்தில் நினைந்திருப்பது உயிரோ? பொன்னோ? வெள்ளைப் புடைவையோ? பட்டாடையோ? நெல் முதலிய தானிய வகைகளோ? கலவைச் சந்தனமோ? புனுகோ? மணமிக்க கத்தூரியோ? கிண்ணமோ? செம்பாகிய ஏனமோ? வைரமணியோ? முத்துமணியோ? கட்டிலோ? மெத்தையோ? கட்டிவராகனோ? (வைப்புப் பொருளோ?) புதையலோடு சிமிழில் சேர்த்து வைத்த பொருளோ? வரவோடு செலவோ? கையில் உள்ள பொருள் களவு போனதோ? குற்றமற்ற பெண்ணழகியின் இயற்கை யழகிற்கு ஏற்பட்ட பார்வைக் குற்றமோ. மூன்று கண்களையுடைய திரிகூடநாதர் செய்துள்ள சிறு மயக்கமோ? அரசர்கள் இவள்மீது தம் ஆசையைச் சொல்லி விட்டதோ? அல்லது இவ்விளம் பெண்தான் மற்றொருவர்மீது காதல் கொண்டதால் வந்த குற்றமோ? ஆடையும் வளையல்களும் சிதறிப் போனதால் உண்டான வாட்டமோ? மணமாலையும் திருமணமும் இனிமேல் வரவிருக்கின்ற குறிப்போ. இவ்வளவு குறிகளில் இவள் கேட்ட குறி இதுவென்று நமக்கு முன்வைத்த ஒரே குறியை விரித்துத் தெரிவிப்பீர்களாக.






(வி-ரை)

இடத்தார்-இடப்பாகம் உடையவர். செந்தில்-திருச்செந்தூர். பூவை-நாகணவாய்ப் பறவை. ஆரியங்கா-ஒருதலம். நேரிய-ஓழுங்கான. தாது-பொன். சலவை-வெள்ளைப் புடைவை, வைப்பு-புதையல். பெண்மையில்-பெண்ணழகின் இயற்கைத் தன்மைக்கு. கை மயக்கம்-சிறு மயக்கம். காமித்த-ஆசைப்பட்ட. வகுத்து-பகுத்து; பிரித்து.





(72)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  கடித்திடும் அரவம் பூண்ட கர்த்தர்குற் றாலர் நேசம்
  பிடிக்குது கருத்து நன்றாய்ப் பேசுது சக்க தேவி
  துடிக்குதென் உதடும் நாவும் சொல்லுசொல் லெனவே வாயில்
  இடிக்குது குறளி அம்மே! இனிக்குறி சொல்லக் கேளே.
(பொ-ரை)

அம்மே! கடிக்கின்ற பாம்பை அணிந்திருக்கின்ற தலைவராகிய திருக்குற்றால நாதரிடம் அன்பு பிடிக்கிறது; இக் கருத்தை நன்றாய்ப் பேசுகிறது என் உதட்டிலும் நாவிலும் 'சொல் சொல்' என்று சக்கம்மா தேவி வந்து துள்ளுகின்றது; குறளிப் பேய் வந்து சொல்லும்படி என் வாயின்மேல் குத்துகின்றது; இனிமேல் நீ கேட்ட குறியைச் சொல்லுகின்றேன் கேட்பாயாக.




(73)

இராகம்-பிலகரி
தாளம்-சாப்பு
கண்ணிகள்

சொல்லக்கே ளாய்குறி சொல்லக் கேளாய் அம்மே
   தோகையர்க் கரசேகுறி சொல்லக் கேளாய்
முல்லைப்பூங் குழலாளே நன்னகரில்வாழ் முத்து
   மோகனப் பசுங்கிளியே சொல்லக் கேளாய்
பல்லக்கே றுந்தெருவில் ஆனை நடத்திமணிப்
   பணியா பரணம்பூண்ட பார்த்திபன் வந்தான்
செல்லப்பூங் கோதையேநீ பந்தடிக் கையில் அவன்
   சேனைகண்ட வெருட்சிபோற் காணுதே அம்மே!

(பொ-ரை)

அம்மே! பெண்களுக்கரசி! குறி சொல்லக் கேட்பாயாக! குறி சொல்லக் கேட்பாயாக! முல்லைப் பூக்களை முடித்துள்ள கூந்தலாளே! இந்த நல்ல திருக்குற்றால நகரில் வாழ்கின்ற முத்துமாலையணிந்த யாரையும் கவருகின்ற பச்சைக் கிளி போன்றவளே! நான் சொல்கின்ற குறியைக் கேட்பாயாக! பல்லக்கில் ஏறி, மக்கள் செல்கின்ற தெருவிடத்திலே எருது ஊர்தியைச் செலுத்திக்கொண்டு மணிமாலையாகப் பாம்பணியணிந்திருக்கின்ற திருக்குற்றாலநாதன் வந்தான்; (அப்போது) செல்வமாகவுள்ள மலர்க்கூந்தலாளே! நீ பந்து அடித்து விளையாடுகையில் அவன் உலாவின் படைகளைப் பார்த்த அச்சம் போலவே இக்குறி முகத்தில் தோன்றுகின்றது! அம்மே!.




(வி-ரை)

முத்துமோகனம்-முத்துக்கோத்த ஒரு மாலை. பணி-பாம்பு. பார்த்திபன்-அரசன்; திருக்குற்றாலநாதர்.


(74)