பக்கம் எண் :


வசந்தவல்லி, குறத்தி சொன்னதைத் தடுத்து வினாவுதல்

கண்ணிகள்


  நன்றுநன்று குறவஞ்சி நாடகக் காரிஇந்த
     நாட்டான பேர்க்கான வார்த்தைநான் அறியேனோ
  ஒன்றுபோடா மற்குறி சொல்லியே வந்தாய் பின்னை
     உழப்பிப்போட் டாய்குறியைக் குழப்பிப் போட்டாய்
  மன்றல்வருஞ் சேனைதனைக் கண்டு பயந்தால் இந்த
     மையலும் கிறுகிறுப்பும் தையலர்க் குண்டோ
  இன்றுவரை மேற்குளிருங் காய்ச்சலும் உண்டோ பின்னை
     எந்தவகை என்றுகுறி கண்டுசொல்லடி.

(பொ-ரை)

அடி! குறவஞ்சியாகிய நாடகக்காரி! நீ சொல்வது மிகநன்று! நன்று! இந்த நாட்டிலுள்ளவர்களுக்கு ஏற்றவாறு சொல்லத்தக்க பேச்சினை நான் அறியமாட்டேனோ'நீ ஒன்றுகூட விடாமல் எனக்குக் குறிசொல்லி வந்தாய்; பின்னர்க் குறியை (தலையும் காலுமாக) குழப்பி உழப்பிச் சொல்லி விட்டாய்; திருவிழாவில் வருகின்ற சேனையைக் கண்டு நான் அச்சமுற்றிருந்தால் இந்த மயக்கமும் கிறுகிறுப்பும் பெண்களுக்கே வருமென்ப தொன்றுண்டோ'இன்று வரையிலும்கூட அதனால் உடம்பில் குளிறும் காய்ச்சலும் உண்டாகமோ'அப்படியில்லையென்றால் பின்னே எந்த வகையினால் அவை வந்தன என்றும் குறிபார்த்துத் தெரிந்து சொல்லடி!

(75)

குறத்தி சொல்லுதல்

கண்ணிகள்


  வாகனத்தில் ஏறிவரும் யோகபுருடன் அவன்
     வங்காரப் பவனிஆசைப் பெண்களுக் குள்ளே
  தோகைநீ அவனைக்கண்டு மோகித்தாய் அம்மே! அது
     சொல்லப் பயந்திருந்தேன் சொல்லுவேன் முன்னே
  காகம்அணு காததிரி கூடமலைக்கே உன்மேற்
     காய்ச்சலல்ல காய்ச்சலல்ல காமக் காய்ச்சல்காண்
  மோகினியே உன்னுடைய கிறுகிறுப் பெல்லாம் அவன்
     மோகக்கிறு கிறுப்படி மோகனக் கள்ளி!

(பொ-ரை)

இடபவாகனத்தில் ஏறி வருகின்ற யோக புருடனாகிய திருக்குற்றால நாதரின் சிறப்பான திருவுலாவைக் காண விரும்பிய பெண்களில் மயில்போன்றவளே! நீ அவரைக் கண்டு ஆசை கொண்டாயே அம்மா! அதனை முன்னே சொல்வதற்கு அச்சங்கொண்டு சொல்லாதிருந்தேன்; இனிச் சொல்லுவேன் கேள்; காக்கைகளுங் கூடப் பறவாத திரிகூட மலைக்கு நீ கொண்டுள்ளது காமக்காய்ச்சல்தான்; (வேறு எந்தக் காய்ச்சலுமில்லையம்மா!) ஆடவர்களை மயக்குகின்றவளே! காமத்திருடி! உன்னுடைய மயக்கமெல்லாம் அக்குற்றாலநாதன் மீது நீ கொண்ட காதல் கிறுகிறுப்புத்தாண்டி! வேறொன்றும் இல்லையடி!


(வி-ரை)

போடாமல்-விடாமல். கிறுகிறுப்பு-மயக்கம். வங்காரம்-ஒழுங்கு. காகமும் அணுகாத-காக்கையும் பறவாத. மன்றல்-திருவிழா.
(76)

வசந்தவல்லி கோபித்துப் பேசுதல்

கண்ணிகள்


கன்னிஎன்று நானிருக்க நன்னகர்க் குளே என்னைக்
காமியென்றாய் குறவஞ்சி வாய்மதி யாமல்
சன்னையாகச் சொன்னகுறி சாதிப்பா யானால் அவன்
தாரும்சொல்லிப் பேரும்சொல்லி ஊரும் சொல்லடி

குறத்தி சொல்லுதல்

கண்ணிகள்

உன்னைப்போல் எனக்கவன் அறிமுகமோ அம்மே
ஊரும் பேரும் சொல்லுவதும் குறிமுகமோ
பின்னையுந்தான் உனக்காகச் சொல்லுவே னம்மே அவன்
பெண்சேர வல்லவன்கரண் பெண்கட் கரசே!

(பொ-ரை)

(1) அடிகுறத்தி! இந்த நல்ல குற்றால நகரிடத்தே கன்னி கழியாத பெண்ணாக நான் இருக்கும்போது நீவாய் கூசாமல் என்னைக் காமக் கள்ளியென்று துடுக்காகக் கூறுகின்றாயே! குறிப்பாகச் சொன்ன குறியைநீ நிலைநிறுத்தக் கூடியவளானால் (உறுதி சொல்லக் கூடியவளானால்) சொன்ன அவனுடையமாலையையும், பெயரையும் ஊரையும் சொல்வாயடி.

(2) அடிஅம்மே! உனக்கு அவன் அறிமுகமாக இருப்பது போல், எனக்கு அறிமுகமானவனோ? நான் அவன் ஊரையும் பேரையும் சொல்வதுதான் குறிக்குச் சிறப்போ? மேலும் உனக்காகச் சொல்கின்றேன், கேட்பாயாக! அம்மா மங்கையர்க் கரசியே! அவன் பெண்களை அணைவதில் ஆற்றல் பெற்றவன்.


(வி-ரை)

1-2. காமி-ஒருவன்மேல் ஆசைப்பட்டவள். சன்னை-சாடை, குறிப்பு. தார்-மாலை. குறிமுகம்-குறிச்சிறப்பு. பெண்சேர-பெண்களை அணைய.
(77)

வசந்தவல்லி சொல்லுதல்

கண்ணிகள்


(1) வண்மையோ வாய்மதமோ வித்தை மதமோ என்முன்
  மதியாமற் பெண்சேர வல்லவன் என்றாய்
  கண்மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி பெருங்
  கானமலைக் குறவஞ்சி கள்ளி மயிலி.

குறத்தி சொல்லுதல்

கண்ணிகள்

(2) பெண்ணரசே பெண்ணென்றால் திரியுமொக்கும் ஒரு
  பெண்ணுடனே சேரஎன்றாற் கூடவு மொக்கும்
  திண்ணமாக வல்லவனும் நாதனுமொக்கும் பேரைத்
  திரிகூட நாதனென்று செப்பலாம் அம்மே,

(பொ-ரை)

(1) அடியே! காட்டுமலைக் குறத்தி! திருட்டுச் சிறுக்கி!) உன்னுடைய இளமை வளப்பமா' வாய்க்கொழுப்பா'உன்குறிச்சொல்லும் வித்தைச் செருக்கா'என்னைக் கொஞ்சமும் மதிக்காமல் என்நேரிலேயே அவன் பெண்களைச் சேர வல்லவன் என்று கூறினாய்; கண் பார்வையாகிய மாயத்தால் என்னையும் மயக்காமல் உள்ளதை உள்ளவாறு சொல்லடி!

(2) பெண்களுக்கு நாயகமே! ஒரு பெண்ணென்று சொன்னால் திரி-(ஸ்திரி) என்று பொருள்தரும். ஒரு பெண்ணுடன் சேர என்று சொன்னால் கூட என்று பொருள் தரும். உறுதியாக வல்லவனம் என்றால் நாதன் என்று பொருள் தரும் (ஆகவே, இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் நான் கூறிய அவன்) பெயரைத் திரிகூடநாதன் என்று சொல்லலாம் அம்மா!


(வி-ரை)

1-2 வன்மை-வலிமைத் தன்மை. கண் மயக்கு-கண்ணால் மயக்கஞ்செய்யும் பார்வை.
(78)